பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா & யாஷிகா?

இப்போட்டியை வெல்பவர் நியாயமான முறையில் நடந்துகொள்பவராக இருந்தால் மட்டுமே அது அவருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும்...
பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா & யாஷிகா?

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு உள்ள பெரிய சந்தேகமே, ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகாவும் ஏன் பிக் பாஸ் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை, அவர்களுடைய தவறுகள் ஏன் தட்டிக்கேட்கப்படுவதில்லை என்பதுதான். 

இதுதொடர்பாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். மீம்கள் எக்கச்சக்கமாக வலம் வருகின்றன. ஆனால் இதையெல்லாம் செய்தால் போதாது, எதிராக வாக்களித்தால் மட்டுமே அவர்களை வெளியேற்றமுடியும் என்று நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் கமல். அதற்குப் பிறகும் டாஸ்க்குகளில் ஐஸ்வர்யா, யாஷிகாவும் நியாயமாக நடந்துகொள்வதில்லை. இதனால் அவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.

இந்நிகழ்ச்சியில் இந்த வருடம், விதிமுறைகளை மீறியதாக ரம்யாவும் மஹத்தும் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஒருமுறைகூட ஐஸ்வர்யா தண்டனைக்கு ஆளாகவில்லை. கமலே வெகுண்டு போய் ரெட் கார்ட் கொடுத்து, ஆனால் என்னை யார் கேட்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். ஐஸ்வர்யாவை ரெட் கார்டு கொடுத்து தன்னால் வெளியேற்ற முடியாது என்பதால் அவரை எவிக்‌ஷன் பரிந்துரைப் பட்டியலில் நிற்கவைத்தார். கமலுக்கே இந்த நிலை என்றால் ரசிகர்களின் கோபம் எந்தளவுக்கு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கலாம். 

இந்த வார டாஸ்க்குகளில் எடுக்கப்படும் புள்ளிகளைக் கொண்டே வார இறுதியில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். அவருக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று பிக் பாஸ் அறிவித்தார். சரி, இந்தமுறை யாரும் ஏமாற்றமுடியாது, உத்தி என்று பொய் சொல்லமுடியாது, புள்ளிகளின் அடிப்படையில் மோசமாக விளையாடுபவர்களும் மோசடி செய்பவர்களும் அதற்கான தண்டனையை அடைவார்கள். நியாயமாக விளையாடுபவர் அதிகப் புள்ளிகளுடன் பரிசைப் பெறுவார், அடுத்த வாரத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்த்தால் இந்த வாரமும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 

முதல் டாஸ்க்கில் பிக் பாஸ் குறிப்பிட்டுள்ள ஓர் இடத்தில் போட்டியாளர் ஒரு கையை வைத்துக்கொள்ளவேண்டும். அந்தக் கையை எடுக்க இதர போட்டியாளர்கள் முயற்சி செய்யவேண்டும். அவர்களைத் தொடாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவரை வெளியேற்ற அனைவரும் ஒன்றாகப் போராட்டினால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இந்தப் போட்டியில் யாஷிகாவைக் காப்பாற்ற ஐஸ்வர்யா முயற்சி எடுத்தார் என்பதுதான் போட்டியாளர்களின் குற்றச்சாட்டு. இதற்கு பிக் பாஸ் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாஷிகாவை வெளியேற்ற இதர போட்டியாளர்கள் செய்யும் முயற்சிகளை ஐஸ்வர்யா மறைமுகமாகத் தடுத்தார் என்பதற்காக போட்டியாளர்களிடையே வாக்குவாதமும் நடைபெற்றது. ஐஸ் பேக்கை வெளியில் வைத்து அதனால் யாஷிகாவைத் துன்புறுத்த முடியாமல் ஐஸ்வர்யா செய்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி புலம்பினார். இது குறித்த கேள்வியை அலட்சியமாக எதிர்கொண்டார் ஐஸ்வர்யா. இப்படித் தன்னுடைய தோழியாக உள்ள ஒருவரை இன்னொருவர் காப்பாற்ற முயற்சி செய்வதை பிக் பாஸ் எப்படி அனுமதிக்கிறது? போட்டி சமதளத்தில், பாரபட்சமின்றி நடக்கவேண்டும் என்று கமல் சொன்னதற்கும் இங்கே நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? 

செவ்வாயன்று நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, பார்வையாளர்களை மேலும் கடுப்பேற்றியது. பிக் பாஸின் எந்தவொரு விதிமுறையையும் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பின்பற்ற மாட்டார்களா என்கிற கோபத்தை ஏற்படுத்தியது.

ஞாபகம் வருகிறதா என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறு கட்டைகளை அவர்கள் சொல்லும் வரிசையில் அடுக்கவேண்டும் என்பதே கட்டளை. ஜெயித்தால் எவ்வளவு புள்ளிகள் வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் சொல்லவில்லை.

முதலில் குறைந்த எண்ணிக்கையில் ஆரம்பித்து அப்படியே உயர்த்திக்கொண்டு சென்றார் பிக் பாஸ். வண்ணங்கள் தமிழில் மட்டுமே சொல்லப்பட்டன. இதனால் இது யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் எப்படிப் புரியும் என்கிற கேள்வி உருவானது. அல்லது அவர்களுக்காக ஆங்கிலத்திலும் சொல்லப்பட்டதா என்றும் தெரியவில்லை. அது நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை.

இதில் போட்டியாளர்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டார்கள். ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள். அப்போதே பார்வையாளர்களுக்கு எழுந்த சந்தேகம் அடுத்தச் சில நிமிடங்கள் உண்மையானது. 

எளிதான முதல் சுற்றிலேயே தடுமாறினார் யாஷிகா. அதை ஜனனியும் சுட்டிக்காட்டினார். உடனே அடுத்தச் சுற்றுகளில் இரு அநியாயங்கள் நடைபெற்றன. பல்வேறு வண்ணங்களைக் கூறியபிறகு அவர்கள் அதை மறக்கவேண்டும், குழப்பமடைய வேண்டும் என்பதற்காக சில நொடிகளுக்குப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பாடல்கள் ஒலித்தபோது யாஷிகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய மூவருமே கடுப்பானார்கள். வண்ணங்களின் வரிசை மறந்துபோனதாக அவர்கள் சிணுங்கினார்கள். ஐஸ்வர்யாவோ அந்தப் பாடலுக்கு ஜாலியாக நடனமாடியவர் பிறகு அருகே இருந்த யாஷிகாவுக்கு வண்ணங்களின் வரிசையைச் சொல்லிக்கொடுத்தார். பாடல் சத்தமாக ஒலிக்கப்பட்டதால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அருகே இருந்த யாஷிகாவிடம் பேசினார். உண்மையில் மற்ற போட்டியாளர்கள் இதை எதிர்த்திருக்கவேண்டும். அல்லது பிக் பாஸிடம் முறையிட்டு போட்டியைப் பாதியில் நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் மற்ற நால்வருமே இதை எதிர்கொள்ளத் தெரியாமல் விழித்தார்கள். அதை ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் சாதகமாக்கிக்கொண்டார்கள். 

ஒரு தவறை ஐஸ்வர்யா செய்ய, யாஷிகாவும் தன் பங்குக்கு இன்னொரு தவறைச் செய்தார். கட்டைகளை அடுக்கும்போது ஐஸ்வர்யா சொல்லிக்கொடுத்தபடி அடுக்கியதோடு அருகில் இருந்த போட்டியாளர்களின் வரிசையையும் பார்த்து அதன்படி அடுக்கினார். இதற்கும் பிக் பாஸ் தரப்பிலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை. திங்கள் அன்று நடைபெற்ற டாஸ்கில் விஜயலட்சுமி, பாதுகாப்புக்காக கண்ணாடி அணிய முற்பட்டபோதே அதை பிக் பாஸ் குரல் உடனடியாகத் தடுத்தது. ஆனால் ஞாபகம் வருகிறதா என்று பெயரிடப்பட்ட அப்போட்டியில் அதற்கு எதிரான காரியங்களை ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் செய்தபோது அதை அங்கீகரிப்பதுபோல அமைதியாகவே இருந்தார் பிக் பாஸ். 

மேலும் இந்தச் சுற்றில் வெல்பவருக்கு எத்தனை புள்ளிகள் வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கவில்லை. ஆனால் ஐஸ்வர்யா வென்றுவிட்டார் என்று தெரிந்தவுடன் 200 புள்ளிகளுக்கு மேல் வாரி வழங்கப்பட்டன. யாஷிகாவுக்கு 120 புள்ளிகளும் ஜனனிக்கு 100 புள்ளிகளும் ஐஸ்வர்யாவுக்கு 210 புள்ளிகளும் கிடைத்தன. திங்கள் அன்று ஆரம்பித்த போட்டி, இதைவிடவும் கடினமானது. ஆனால் அதில் வெல்பவருக்கு 120 புள்ளிகள் என்பது ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அதைவிடவும் எளிதான இந்தப் போட்டிக்கு ஏன் இத்தனை புள்ளிகள்? அந்தப் புள்ளிகளை ஏன் முதலிலேயே சொல்லவில்லை? ஐஸ்வர்யா வென்றவுடன் தான் அதற்கு இத்தனை புள்ளிகள் என்று அனைவருக்கும் தெரியவந்தது. இரு சுற்றுகளின் முடிவில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தலா 230 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள்.

தன்னால் முதலிடம் வரமுடியாது என ஐஸ்வர்யாவுக்கு நன்குத் தெரிகிறது. அதனால் யாஷிகாவுக்குச் சாதகமாக விளையாடுகிறார் (அப்போதுதான் அவர் முன்னேறமுடியும் என்பதற்காக) என்று விஜயலட்சுமி, ஐஸ்வர்யா குறித்து தன் நண்பர்களிடம் குற்றம்சாட்டினார். ஞாபகம் வருகிறதா போட்டியில் ஐஸ்வர்யா திறமையாகவே விளையாடினார். ஆனால் அவர் ஜெயித்த போட்டிக்கு மட்டும் ஏன் இத்தனை புள்ளிகள் என்பது மட்டும்தான் ஒரே கேள்வி. எனினும் யாஷிகா வென்ற 120 புள்ளிகளும் நியாயமானதல்ல. ஐஸ்வர்யாவிடமிருந்து வண்ணங்களின் வரிசையைக் கற்றுக்கொண்டு, அருகில் இருந்தவரைப் பார்த்துதான் அவர் பெரும்பாலும் விளையாடினார். இதை ஆரம்பத்திலேயே பிக் பாஸ் தடுத்திருந்தால் பாலாஜி போல அவருக்கும் ஒரு புள்ளியும் கிடைக்காமல் இருந்திருக்கும்.

இப்போது சமூகவலைத்தளங்களில் இதுகுறித்தும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்களால் வேறு என்ன செய்யமுடியும்? எவ்வளவு முறையிட்டாலும் பிக் பாஸும் கேட்பதில்லை. கமலும் தலையிடுவதில்லை என்பதால் குறைந்தபட்சம் மக்கள் முன்பு இதைத் தெரியப்படுத்துவோம் என்று மீம்களைச் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். 

சமூகவலைத்தளங்களில் திட்டினால் மட்டும் போதாது, வாக்களிக்கவேண்டும் என்று கோபத்துடன் இருவாரங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார் கமல். அப்படி வாக்களித்தால் அதற்கு எந்தளவுக்கு மரியாதை இருக்கும் கமல்?

இது ஒரு ரியாலிட்டி ஷோ என்றாலும் மக்களின் வாக்குகளை வைத்து முடிவு எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிகழ்ச்சி. நாளைய முதல்வராகக் கனவு காணும் கமல் பொறுப்பேற்றுள்ள நிகழ்ச்சி. இதனால் இந்த நிகழ்ச்சி இதர ரியாலிட்டி ஷோக்களை விடவும் நியாயமாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் நடத்தப்படவேண்டும் என்று ஒரு சராசரி ரசிகன் விரும்புவதில் ஏதாவது தவறு இருக்கமுடியுமா? 

கடந்த வருடம் ஒரே ஒரு புகார் மட்டுமே ரசிகர்களுக்கு இருந்தது. காயத்ரி ரகுராமை கமல் சரியாகக் கேள்வி கேட்பதில்லை என. மற்றபடி மக்கள் கொண்டாடிய ஓவியாவுக்கு எவ்வித சலுகையும் பிக் பாஸ் குழு காட்டவில்லை. ஒவ்வொரு வாரமும் எவிக்‌ஷன் பரிந்துரையில் இடம்பெற்று மக்களால் காப்பாற்றப்பட்டார் ஓவியா. ஆரவ் ஜெயித்ததில் சிநேகன் ரசிகர்களுக்கு (அவருக்கு வாக்களித்தவர்களுக்கு) மனக்குறை இருந்தாலும் அதிலும் பெரிய அளவில் ரசிகர்களுக்குப் புகார் இல்லை.

இந்தமுறை? விதிமுறைகள் மீறப்படும்போது யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிரச்னைகள் வருவதில்லை என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். அதனால் இதை எதிர்த்து தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். இதனால்தான் கடந்த வாரத்துக்கு முன்பு ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டபோது அது கமலுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்த வாரம் வரை டாஸ்குகளில் அநியாயங்கள் நடப்பதும் அதைத் தட்டிக் கேட்காமல் பிக் பாஸ் குழு இருப்பதும் ரசிகர்களுக்கு மேலும் சோர்வை வரவழைக்கின்றன. இதற்குப் பிறகும் வாக்களிப்பதால் மட்டும் என்ன மாற்றம் வந்துவிடமுடியும் என்றே எண்ணுகிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சி, வாழ்க்கைப் பாடமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இப்போட்டியை வெல்பவர் நியாயமான முறையில் நடந்துகொள்பவராக இருந்தால் மட்டுமே அது அவருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கமலுக்கும் பெருமையளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். மீதமுள்ள சில நாள்களிலாவது சம அளவிலான போட்டியைக் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com