டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!

டிக்டாக் மூலமாக திறமைகளை வெளியே கொண்டு வந்தவர்கள் உள்ளார்கள்...
டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!

சலங்கைதுரை இயக்கியுள்ள இபிகோ 302 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கஸ்தூரி. இதில் அவர் காவல்துறை அதிகாரி வேடம் ஏற்றுள்ளார்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசியதாவது:

டிக் டாக் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது, தவறான செயல்களுக்குக் காரணமாக உள்ளது என அதைத் தடை செய்யச் சொல்கிறார்கள். 800 ஆபாச வலைத்தளங்களைத் தடை செய்தபோது அதைக் கருத்து சுதந்தரம் என்று சண்டை போடுவோம். ஆனால் டிக் டாக் செயலியை மட்டும் தடை செய்வோமா? ஏனெனில் அந்த 800 ஆபாச வலைத்தளங்களில் சன்னி லியோனும் பெயர் தெரியாத வெள்ளைக்காரப் பெண்களும் நடிக்கிறார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் நம் போனில் அதைப் பயன்படுத்தவில்லை. அதனால் அது சரி. பக்கத்து வீட்டில் நடப்பதை ஓட்டைப் போட்டு நாம் பார்த்தால் அது சரி. ஆனால், என் பொண்ணு போனில் டிக் டாக் இருக்கும். அதுதானே பிரச்னை! டிக் டாக்கினால் பல வாய்ப்புகள் பெற்றவர்கள் இருக்கிறார்கள். டிக் டாக் மூலமாக திறமைகளை வெளியே கொண்டு வந்தவர்கள் உள்ளார்கள். டிக் டாக் வழியாகக் கணிதப் பாடத்தை அழகாகக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் கூட உள்ளார்கள். அதையெல்லாம் நாம் யாராவது பார்த்தோமா? மக்களுடைய இந்தப் பாசாங்கை நிறுத்தவேண்டிய கட்டம் வந்துவிட்டது. சில உண்மைகள் ஏற்றுக்கொள்ள கசக்கத்தான் செய்யும் என்று பேசியுள்ளார். 

ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக டிக் டாக் மாறியுள்ளது. இதனால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, புளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது; அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  டிக் டாக் செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் செயலியை தயாரித்த சீன நிறுவனமான பைட்டி டான்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். எனினும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கலாம். ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்றால், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை தானாகவே ரத்தாகிவிடும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com