என் மொத்த வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அவனை நம்பியது மட்டுமே! இந்நாள் முதல்வர் குறித்த முன்னாள் முதல்வரின் கருத்து!

இதில் வரும் என் டி ஆர் தெய்வீகப்பிறவியாக இருந்த போதும் திடீரென்று லக்‌ஷ்மி பார்வதியின் முன் சாமான்யராகி கண்ணீரும் விடுகிறார்.
என் மொத்த வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அவனை நம்பியது மட்டுமே! இந்நாள் முதல்வர் குறித்த முன்னாள் முதல்வரின் கருத்து!

தெலுங்கில் மறைந்த ஆந்திர முதல்வரும், நடிகருமான என்டிஆரின் வாழ்க்கைச் சித்திரம் ‘கதாநாயகுடு’ என்ற பெயரில் திரைப்படமாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இது தவிர என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரம் ‘லக்‌ஷ்மிஸ் என் டி ஆர்’ என்ற பெயரில் மீண்டுமொரு திரைப்படமாக வெளிவரவிருக்கிறதா. ‘கதாநாயகுடு’ வின் இயக்குனர் க்ரிஷ் ஜகர்லமுடி என்றால் ‘லக்‌ஷ்மிஸ் என் டி ஆரின்’ இயக்குனர் ராம் கோபால் வர்மா. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இரண்டுமே என் டி ஆரின் வாழ்க்கைச் சித்திரங்கள் தான். ஆனால், இரண்டுமே வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. கதாநாயகுடு என் டி ஆரை கதாநாயகனாகவும், தெய்வீக மனிதராகவும் சித்தரித்தாலும் என் டி ஆரின் வாழ்க்கை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சேபிக்காத வண்ணம் அவர்கள் தங்களது தந்தையை வெளி உலகுக்கு ஒரு கடவுளாக்கிக் காட்டும் முனைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாழ்க்கைச் சித்திரம் அப்படியானது அல்ல. இதில் வரும் என் டி ஆர் தெய்வீகப்பிறவியாக இருந்த போதும் திடீரென்று லக்‌ஷ்மி பார்வதியின் முன் சாமான்யராகி கண்ணீரும் விடுகிறார். அந்தத் தருணத்தில் அதாவது தமது அந்திமத் தருணத்தில் என் டி ஆர் பார்வதியிடம் உதிர்க்கும் ஒரு கமெண்ட் தான் மேலே தலைப்பில் உள்ள வார்த்தைகள். 

‘என் மொத்த வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு, அவனை நம்பியது மட்டுமே’ என்பது. அந்த அவன் யார்? என்றால் ட்ரெய்லர் பார்க்காதவர்களுக்கும் கூட அப்பட்டமாகப் புரிந்திருக்க வேண்டும். சாட்ஷாத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் இன்றைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு குறித்துத் தான் என் டி ஆர் அவ்விதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஏன்? என்பது ஆந்திர அரசியலை உற்றுக் கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கக் கூடும்.

இதில் குழப்பம் என்னவென்றால்? படம் பார்க்கும் ரசிகர்கள் எந்த திரைப்படத்தை பயோபிக்காகக் கருதுவார்கள்? என்பதே! ஏனென்றால் இரண்டுமே அவரவர் பார்வையில் அவரவர் சுய பலன்களுக்கு ஏற்ப திரைக்காவியங்களாக்கி உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் என் டி ஆரின் உண்மையான வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அவரே நேரில் வந்து சொன்னால் மட்டுமே நிஜமென்று ஒப்புக் கொள்ள முடியும் போல. அத்தனை செயற்கைத்தனமாக இருவேறுவிதமான என் டி ஆரை முன் வைக்கின்றன இவ்விரு திரைப்படங்களும்.

பயோ பிக் எடுப்பது சம்மந்தப்பட்டவர்களை ஒரேயடியாகப் புகழ்ந்து பேசி தெய்வமாக்குவதற்கோ அல்லது இகழ்ந்து பேசி தூசிப்பதற்கோ அல்ல. உள்ளதை உள்ளவாறு சொல்லி குறிப்பிட்ட நபர்களைப் பற்றியும் அவர்களது செயற்கரிய செயல்களைப் பற்றியும் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பற்றியும் ஒரு தராசில் நிறுத்துப் பார்ப்பதைப் போல துல்லியமாக மக்கள் முன் ரசிகர்கள் முன் கொண்டு வைப்பதே பயோபிக் ஆக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்த இரண்டு திரைப்படங்களையுமே பாரபட்சங்களற்ற பயோபிக் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும். ஏதோ அவரவர் பெளருஷத்தைக் காட்டிக் கொள்ள அவரரவர் எடுத்த இரண்டு திரைப்படங்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com