செய்திகள்

இளையராஜா விழாவுக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

DIN

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தவுள்ள இளையராஜா-75 இசை விழாவுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.7.73 கோடிக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை. இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டால் அந்த விழாவிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நடத்தவும் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்று நீதிபதி தலைமையில் கூட்டவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள தொகை, நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்டும் வகையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கலந்தாலோசித்து, கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது.  மேலும் 2017-2018 ஆம் ஆண்டுகளின் கணக்கு விவரங்கள் விரைவில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். தற்போது நிகழ்ச்சி நடைபெறவுள்ள ஒய்எம்சிஏ மைதானத்துக்கு ரூ. 35 லட்சமும், இளையராஜாவுக்கு இதுவரை ரூ.25 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாக, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,  தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இளையராஜா-75 இசை விழாவுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழனன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம்,  இளையராஜா-75 இசை விழாவுக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT