இந்தப் படம் சில ஆண்களுக்குப் பிடிக்காது! ஐரா திரைப்பார்வை

நயன்தாரா - இந்தப் பெயர் தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு பெயரானதும், ஆண் மையச் சூழலில் சிக்கியுள்ள
Airaa Movie Review
Airaa Movie Review

நயன்தாரா - இந்தப் பெயர் தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு பெயரானதும், ஆண் மையச் சூழலில் சிக்கியுள்ள கோலிவுட்டில் தனியொரு பெண்ணாக இத்தனை ஆண்டுகள் கதாநாயகியாக நிலைபெறுவதும், தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை தருவதும் சாதாரண விஷயமில்லை. இத்தகைய வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளது. சாண்ட்ரா புல்லக், பெனிலுப் க்ரூஸ், ஈவா க்ரீன், ரேச்சல் வீஸ், நடாலி போர்ட்மென், ஏஞ்சலினா ஜோலி, ஜெனிஃபர் லாரன்ஸ், எம்மா ஸ்டோன், பிரியங்கா சோப்ரா என நீளும் இந்த வரிசையின் முதல் தமிழ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றால் மிகையில்லை. முதல் முறையாக கதாநாயகிக்காக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 1000 ஹோர்டிங், 700 பேருந்துகள் மற்றும் 500 ஆட்டோக்களின் பின்னால் விளம்பரம், பெரும் மால்கள் மற்றும் திரை அரங்குகளில் பெரிய LED விளம்பரங்கள் என எதிலும் பிரம்மாண்டம் என்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம்.

இத்தனை எதிர்ப்பார்ப்புகளுடன் ஒரு படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறது ‘ஐரா’ இரட்டை வேடத்தில் நயன்தாரா என்பதில் தொடங்கி, படத்தின் போஸ்டர்களில் காணப்படும் பட்டாம்பூச்சி எதைக் குறிக்கிறது, கலையரசனின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் என்னவாக இருக்கும்? யோகி பாபு நயன்தாரா நகைச்சுவை படத்தில் எந்தளவிற்கு இருக்கும்? இது என்ன வகையான படம் என்பது வரை நீண்டு கொண்டிருந்த எதிர்ப்பார்ப்புக்கு அழகான முற்றுப் புள்ளி இட்டிருக்கிறாள் ஐரா.

சென்னையின் பரபரப்பான வாழ்க்கையில் எல்லா வசதி வாய்ப்ப்புக்களுடன் தன்னுடைய திறமையை நம்பி வாழும் துணிச்சலான பெண் யமுனா (நயன்தாரா).  திருமணம் வேண்டாம் என்பதில் தொடங்கி, மீடியாவில் தான் என்ன செய்ய வேண்டும் என்பது வரை அவரது முடிவுகள் யாவற்றையும் அவரே எடுப்பவர். இத்தகைய சூழலில் ஒரே மாதிரியான வேலை செய்யப் பிடிக்காமல், வீட்டில் பார்த்த ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் மனமில்லாமல் அவர் மிகவும் நேசிக்கும் பாட்டியின் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சில நாட்கள் தங்கியிருக்க முடிவுசெய்து கிளம்பிச் செல்கிறார். முன்பு அவர் பணி புரிந்த மக்கள் மெயில் பத்திரிகைக்காக அவர் கூறியிருந்த யூட்யூப் சேனல் ஆரம்பிக்கும் திட்டம் மறுக்கப்பட்டதால் அதை தானே துவங்க முடிவெடுத்து களத்தில் இறங்குகிறார். இன்னொரு பக்கம், அமுதவன் (கலையரசன்) தன்னைச் சுற்றி நடக்கும் கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை தேடி கண்டடைகிறார். யமுனாவுக்கும், அமுதவனுக்கும் எப்படி சந்திப்பு ஏற்படுகிறது. அவர்களை இணைக்கும் ஒரே புள்ளியான பவானி (நயன்தாரா) யார் எனும் முடிச்சை அவிழ்க்கும் கதையை நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார் இயக்குநர் சர்ஜுன்.

ஒட்டுமொத்த கதையையும் அனாசயமாக தன் தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார் நயன். அதிலும் கருப்பு வெள்ளையில் படமாக்கம் செய்யப்பட்ட ப்ளாஷ்பேக் கதையில் பவானி கதாபாத்திரத்துக்கு வெகு நேர்த்தியாக உயிர் கொடுத்துள்ளார். அழுவதும், சிரிப்பதும், நெகிழ்ச்சியில் கண்களை மூடி, விழியோரத்திலிருந்து துளிர்க்கும் கண்ணீர் வழிந்தோட பார்க்கும் பார்வையிலும் சரி பிரமாதமான ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். பவானி யமுனா கதாபாத்திரங்களின் மாறுபாட்டினை தோற்றத்தால் மட்டுமல்லாமல் உடல்மொழியாலும், குரலாலும் வித்யாசப்படுத்தியிருக்கிறார். பிறந்தது முதல் வீட்டினர் மட்டுமல்லாமல் அனைவருமே வெறுத்து ஒதுக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தென்றலாக முகிழும் காதல் அதன் பின் அந்தக் காதல் அவரை என்னவாக்குகிறது என்பதை நுட்பமான பவானியில் வெளிப்படுத்தியுள்ளார். எல்லாம் இருந்தும் ஏதோவொன்று குறையாகவும் அதை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்திரமாக யமுனாவாகவும் தனது மிகையற்ற நடிப்பால் ஸ்க்ரீன் ஸ்பேஸ் மொத்தத்தையும் கவர்ந்துவிடுகிறார். கலையரசன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் யாவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். 

வாழ்க்கையில் சிலர் ஆசிர்வதிக்கப்படுவதற்கும், சிலர் அல்லல்படுவதற்கும் காரணம் என்ன? சக மனிதர்களை நாம் ஏன் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை? சிவப்பு நிறம் என்பதுதான் அழகா? ஒரு மனிதரை இந்தச் சமூகம் எந்த வகையில் மதிப்பீடு செய்கிறது? புறத்தோற்றம், ராசி போன்ற விஷயங்களை இன்னும் எத்தனை காலம் தூக்கி சுமக்கப் போகிறோம்? சுயநலம் அற்று வாழ ஒருபோதும் மனிதர்களால் முடியாதா? தோல்விகளில் துவண்டு போன ஒரு பெண்ணுக்கு எது உயிர்த்தேவையாக இருக்க முடியும்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது. அதற்கான பதில்களும் இங்கே தான் உள்ளன. ஒவ்வொருவரும் மனசாட்சியின் குரலைக் கேட்கப் பழகினால் போதும் இதற்கான தீர்வு கிடைக்கும்.

தனக்கான ஒரு வாழ்க்கை, தன்னை நேசிக்கும் ஒரு உயிர் இதுவே போதும் என்று ஏங்கும் பவானி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன் கோலிவுட்டுக்கு ஒரு நல்வரவு. மேகதூதம் பாடல் வரிகளும், படத்தின் பின்னணி இசையும் ஐராவுக்கு வலு சேர்க்கிறது. சுந்தரமூர்த்தி அடுத்தகட்ட இசையமைப்பாளராக உருவாகி வருவார் என்பதை பாடல் ஒன்றே நிறுவிவிட்டது. வழக்கமான பேய் படங்களில் வரும் ஒளிப்பதிவாக மட்டுமல்லாமல் மழை சார்ந்த காட்சிகளில் அழுத்தமும், கருப்பு வெள்ளைக் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கம் செய்திருக்கும் சுதர்சன் ஸ்ரீநிவாஸன் பாராட்டுக்குரியவர். மேலும் முதல் பாதி படத்தை தூக்கி நிறுத்திய வைத்திருக்கிறார் எடிட்டர் கார்த்திக் ஜோகேஷ். பிற்பாதியில் சிறிது கவனம் செலுத்தியிருந்தால் மேலும் இக்கதைக்கான மையம் வலுவாக இருந்திருக்கும்.

திருமணம் செய்வதும், ஒரு ஆணை அடைவதும்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் உயர் லட்சியமாக இருக்க வேண்டுமா என்ன? பவானி போன்று கிராமத்தில் வாழ்ந்து, சுற்றமும் நட்பும் ஒதுக்கி வாழும் பெண் நகரத்துக்கு வந்த பின்னும், சுயமாக சம்பாதிக்கும் ஆற்றல் வந்தபின்னும் ஒடுங்கி வாழ என்ன காரணம்? அவரை மதிக்கவும் நேசிக்கவும் ஒரு உயிரைக் கூட அவர் தேடிக் கண்டடைய இயலவில்லையா? நிச்சயம் நிதர்சனத்தில் அப்படியிருக்க முடியாது. நம்மைச் சுற்றி பல பவானிகள் இருக்கிறார்கள். ஒரு பெண் தன் உழைப்பால் வாழ்க்கையை எதிர்கொண்டு மகிழ்ச்சியாகவும் துணிவாகவும் வாழ முடியும் என்பவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நிற பேதம் என்பதும் கருப்பு நிறத்தை வெறுப்பதும் ஒரு பூர்ஷ்வா மனப்பான்மை. அது இந்தச் சமூகத்தில் இன்றும் தொடர்ந்தே இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பெண்கள் இன்று படிப்பிலும், சுய மரியாதையுடன் முன்னேறி வருகிறார்கள். அப்படியொரு பெண்ணாக பவானி இல்லாமல் போனதுதான் குறையே அன்றி, தனிப்பட்ட விதத்தில் அமுதவன் கூறியது போல பவானி பேரழகிதான். படத்தில் மிகச் சில குறைகள் இருந்தாலும், ஐரா நல்ல கதையம்சம் உள்ள முழுமையான ஒரு திரைப்படம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com