கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்

தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பரப்புரைக்காக துவக்கக் காட்சிகளை கமல் பயன்படுத்தியிருப்பது அநீதியானது. பார்வையாளர்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் அவமதிப்பு...
கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்

2013-ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் தொடர்ச்சி இது. இரண்டாம் பாகம் என்று சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டாலும் முன்கதை (prequel) மற்றும் பின்கதையின் (sequel) கலவையில் அமைந்த ஒரே திரைக்கதைதான் இது. இன்னமும் இறுக்கமாக எடிட் செய்து ஒரே திரைப்படமாகவே வெளியிட்டிருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது இரண்டாம் பாகம். முதல் பகுதியின் வசீகரத்தோடு ஒப்பிடும்போது இரண்டாம் பகுதி மங்கலாகவும் பரிதாபமாகவும் காட்சியளிக்கிறது. முதல் பாகத்தில் எஞ்சிப் போன காட்சிகளை வைத்து ஒப்பேற்றியது போலவும் தோற்றமளிக்கிறது.

இரண்டாம் பகுதிக்குச் செல்வதற்கு முன் பகுதி 1-ஐ சற்று சுருக்கமாக நினைவுகூர்ந்து விடலாம்.

நியூயார்க்கில் நடன ஆசிரியராக இருப்பவர் விஸ் என்கிற விஸ்வநாத். இவரது மனைவியான நிருபமா அணுசக்தி ஆய்வாளர். பெண்மைத்தனத்துடன் இருக்கும் விஸ்வநாத்திடமிருந்து விடுதலை பெற முயலும் நிருபமா, அவர் ஒரு RAW ஏஜெண்ட் என்பதை ஒரு சிக்கலான சூழலில் பிறகு அறிந்து பிரமிக்கிறார். விஸ்வநாத்தின் உண்மையான பெயர் விஸாம் அஹ்மத் காஷ்மீரி. இந்திய ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் இருக்கிறவர்.

இந்திய ராணுவத்தில் இருந்து தப்பி ‘தேடப்படும் குற்றவாளியாக’ அறியப்படும் விஸாம், அல் காய்தா தீவிரவாதக் குழுவில் இணைந்து உப தலைவர்களுள் ஒருவரான ஓமர் குரேஷியின் நம்பிக்கையைப் பெற்று அங்குள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதின் மூலம் உளவறியும் பணியில் ஈடுபடுகிறார். தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டிருக்கும் அமெரிக்கர்களை, விஸாமின் உதவியுடன் அந்நாட்டு ராணுவம் மீட்கும் முயற்சியில் ஓமரின் குடும்பம் சிதறுகிறது.

இதனால் கோபம் அடையும் ஓமர், ‘டர்ட்டி பாம்’ கொண்டு நியுயார்க் நகரை அழிக்க முனைய, ஓமரின் சதியை விஸாம் கண்டுபிடித்துத் தடுக்கிறார். ஓமர் தப்பித்து விட ‘ஒண்ணு அந்த ஓமர் சாகணும்; இல்ல நான் சாகணும். அப்பத்தான் இந்தக் கதை முடியும்’ என்று விஸாம் கூறுவதோடு முதல் பாகம் முடிகிறது. இந்தியாவில் இதன் தொடர்ச்சி இருக்கும் என்கிற குறிப்போடு இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளும் உடனே காட்டப்படுகின்றன.

இப்போது இரண்டாம் பாகம் – முதல் பாகத்தில் உள்ள இடைவெளிகளையும் கோடிட்ட இடங்களின் வெற்றிடத்தையும் நிரப்ப இரண்டாம் பாகம் முயற்சிக்கிறது. முதல் பாகத்தைப் போலவே சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் காட்சிகள் பயணிக்கின்றன. விஸாமின் பின்னணி என்ன? எப்படி அல்கொய்தாவில் இணைந்தார்? ஓமரின் குடும்பத்திற்கு என்னவாயிற்று? விஸாமிற்கும் ஓமருக்கான இந்தப் போரில் யார் வெற்றி பெற்றார் என்பதற்கான விடைகளை இரண்டாம் பாகம் விவரிக்கிறது.

**

இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணிபுரியும் விஸாம் (கமல்ஹாசன்), பயிற்சி பெறும் வீராங்கனையான அஸ்மிதா சுப்பிரமணியத்துடன் (ஆண்ட்ரியா) தகாத முறையில் பழகினார் என்கிற ‘பாவனையான’ குற்றச்சாட்டின் மீது ராணுவ விசாரணை மேற்கொள்ளப்பட்டு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறார். சிறையிலிருந்து ‘தப்பும்’ விஸாம், தேடப்படும் குற்றவாளியாக மாறுகிறார். ஆனால் இதுவொரு நாடகம்தான். ஆப்கானிஸ்தானில் உள்ள அல் காய்தா தீவிரவாதக்குழுவில் அவர் ஊடுருவதற்காக நிகழ்த்தப்படும் நாடகம். இதுதான் விஸாமின் பின்னணி.

இந்தியாவிற்குத் திரும்பும் விஸாமின் குழுவைக் கொல்ல சதி நடக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பிலிருந்தே சிலர் காரணமாக இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக லண்டன் நகரை அழிக்கும் ஒரு சதித்திட்டத்தைப் பற்றி விஸாம் அறிகிறார். இதற்குப் பின்னால் ஓமர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். ஓமரின் அந்தச் சதியையும் வெற்றிகரமாக தடுத்த பிறகு, விஸாமின் குடும்பம் கடத்தப்படுகிற ஆபத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஓமருடனான இந்த இறுதிப் போரில் விஸாம் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை மீதக்காட்சிகள் விவரிக்கின்றன.

**

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. ஆனால் திரைக்கதை லண்டனுக்கு நகரும் போது ஏற்படும் தொய்வு பிறகு அப்படியே நீடிக்கிறது. இந்தச் சேதத்தை பிறகு கமலாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடந்த காலமும் சமகாலமும் மாறி மாறி வந்து இணையும் திரைக்கதை உத்தி இந்தப் பாகத்திலும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் பெரும்பாலான பிரேம்களை கமலே ஆக்கிரமிப்பதின் மூலம் அவருடைய நடிப்புத்திறமையை பிரமிக்க முடிகிறது என்றாலும் அதுவே ஒருவகையில் பலவீனமாகவும் அமைந்து விடுகிறது.  இரண்டு பெண்களையும் இதர அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அனைத்து சாகசங்களையும் கமலே செய்வது அலுப்பூட்டுகிறது. ஒரு இந்திய உளவுத்துறை ஆசாமி, லண்டன் மற்றும் அமெரிக்காவில் நிகழவிருக்கும் சதிகளை மோப்பம் பிடித்து தன்னந்தனியாக தடுத்து நிறுத்துவதில் நம்பகத்தன்மையில்லை. அங்கெல்லாம் நம்மை விடவும் திறமையான உளவுத்துறை ஆசாமிகள் இருக்கிறார்கள்தானே?

ஆண்ட்ரியாவிற்குச் சிறிய சண்டைக்காட்சி கிடைப்பது ஆறுதல். முதல் பாகத்தில் பூஜா குமாரின் அறிவுத்திறன் பயன்பட்டது. ஆனால் இரண்டாவது பாகத்தில் பெரும்பாலும் அவரது உடல்திறன் மட்டுமே பயன்படுகிறது.

கமலின் புத்திசாலித்தனமான வசனங்கள் பல இடங்களில் பிரகாசமாகப் பளிச்சிடுகின்றன. ‘நல்லாத் தூங்கினீங்களா என்பதற்கு ‘ஸ்லீப்பர் ஆச்சே.. தூங்காம இருப்பேனா’ என்பது முதற்கொண்டு ‘RAW –ன்னா Reception and Wedding இல்ல’ என்பது வரை பல இடங்களில் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றன.

டபுள் ஏஜெண்ட் ஆக இருக்கும் அனந்த் மகாதேவின் பாத்திரத்தை, ‘நான் உன்னை மாதிரி கோட்டு போட்ட மாமா இல்லை’ என்று ஒரே வசனத்தில் உணர்த்தி விடுகிறார் கமல். ‘வெள்ளைக்காரன் இருநூறு வருஷமா சுரண்டினதை 64 வருஷத்திலேயே சுரண்டினவங்கதானே நீங்க?” என்று இந்திய அரசியல்வாதிகளின் ஊழல்களைக் கிண்டலடிக்கும் வசனம் பார்வையாளர்களிடம் பலத்த கைத்தட்டலைப் பெறுகிறது. ஓர் அமைதியான துரோகியின் பாத்திரத்தை அனந்த் மகாதேவன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

உளவுத்துறையின் இயக்கத்தை, தமிழ் சினிமாவில் மிக மிக நெருக்கமாக சித்தரித்த திரைப்படமாக விஸ்வரூபம் 2-வைச் சொல்லலாம். சிஐடி சங்கர் காலத்திலிருந்து வெகுவாக முன்னேறி விட்டோம். உளவாளிகள் பல கண்காணிப்புச் சூழலுக்குள் வாழ வேண்டிய பதற்றம், யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்கிற குழப்பம், இதனால் அவர்களின் உறவுகள் அடையும் ஆபத்து, உயர் அதிகாரிகளின் அரசியல் போன்றவை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில், விளையாட்டுப் பெண்ணாக பேசிக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, சட்டென்று தீவிரமாகி அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒட்டு கேட்கும் கருவியை தேடியெடுக்கும் காட்சி சிறப்பு.

இளமைப் பருவத்தின் காட்சிகள் பின்னணியில் சிதற, கமல் தன் தாயை (வஹீதா ரஹ்மான்) நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கும் காட்சி உருக்கமானது. அல்ஜைமர் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், வந்திருப்பது தன் மகன் என்பதை உணராமல் பேசிக் கொண்டிருப்பதும், வேறு வழியின்றி கமல் அதை ஏற்றுக் கொள்வதும் சிறப்பான காட்சி. சிறிது நேரமே வந்தாலும் வஹீதா ரஹ்மான் அசத்தியிருக்கிறார்.

படத்தின் இறுதிக்காட்சி அமைதியாகவும் சட்டென்று முடிந்து விட்டதாகவும் பலர் கருதக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருவகையில் அப்படியான நிறைவே இந்த திரைக்கதைக்கு ஓர் இயல்புத்தன்மையை அளிக்கிறது. ‘போய்ப் புள்ளகுட்டிங்களை படிக்க வைங்கடா’ என்னும் ‘தேவர்மகன்’ செய்தியை தென்தமிழ்நாட்டின் பின்னணியில் சொன்ன கமல், அதையே சர்வதேச தீவிரவாதப் பின்னணியிலும் அமைதியாகச் சொல்லியிருக்கிறார். ஓமரின் மைத்துனன் இன்ஜினியர் ஆவதும், மகன் டாக்டருக்கு படித்துக் கொண்டிருப்பதும் நமக்கு உணர்த்த விரும்புவது அதைத்தான்.

கமலின் உயர் அதிகாரியாக இயக்குநர் சேகர் கபூர் சிறப்பாக நடித்திருக்கிறார். உளவுத்துறையின் நடைமுறைகளைக் கண்டு புரியாமல் விழிக்கும் ஒரு சராசரியின் பாத்திரத்தை பூஜாகுமார் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். ஆண்ட்ரியாவிடம் சண்டையிட்டு வீழ்ந்து கிடக்கும் சலீம், ஓமரின் எள்ளலான பார்வையைக் கண்டதும் ஆவேசமாக எழுந்து ஆண்ட்ரியாவை வீழ்த்துவது, ஒரு காட்சி எப்படி நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான உதாரணம்.

தலைநகரின் அதிகார வட்டத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆக்கிரமித்திருப்பதையும் அதில் சில துரோகிகள் கலந்திருப்பதையும் படம் போகிற போக்கில்  சித்தரிக்கிறது. இந்த விஷயம் நிச்சயம் சர்ச்சைக்குள்ளாகும். ‘இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக கமல் சித்தரிக்கிறார்’ என்று முதல் பாகம் தொடர்பாக விமரிசனங்கள் எழுந்தன. இப்போது இரண்டாம் பாகம் தொடர்பாக அதன் மறுமுனையில் சர்ச்சைகள் எழக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்றுள்ளவர்களாக இருப்பதை கமல் அழுத்தமாக இதில் சித்தரிக்கிறார். டிரெய்லரில் இருந்த வசனத்தை மட்டும் பார்த்து விட்டு சிலர் முன்பு திட்டித் தீர்த்தது அபத்தமாகி விட்டது.

பலவீனமான திரைக்கதையாக இருந்தாலும் தொழில்நுட்ப விஷயங்களில் இத்திரைப்படம் சிறப்பாக இருக்கிறது. மிக மிக அண்மைக்கோணத்தில், விநோதமானதொரு பொருள் ஒன்று காட்டப்படுவதும் அது மெல்ல சுழன்று விரிவடையும் போது கமலின் கால் சலங்கையின் ஒரு பகுதியாக தெரியும் துவக்க காட்சி முதற்கொண்டு ஒளிப்பதிவின் பல சாகசங்கள் வியக்க வைக்கின்றன. கமலின் குழு எதிராளியால் தாக்கப்படும் போது ஏற்படும் கார் விபத்துக்காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீரின் அடியில் நிகழும் சாகசம் முதற்கொண்டு பொதுவாக அனைத்துச் சண்டைக்காட்சிகளுமே வசீகரத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒலிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

ஜிப்ரானின் பாடல்களும் பின்னணி இசையும் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றன. முதல் பாகத்தில் பிரபலமான ‘யாரென்று தெரிகிறதா’ என்கிற புகழ்பெற்ற பாடலுக்கு வேறு வண்ணத்தை திறமையாக தருவதில் ஜிப்ரான் பிரமிக்க வைத்திருக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் இருந்த அதிரடியும் பரபரப்பும் இரண்டாம் பாகத்தின் இசையில் இல்லை. ஷங்கர்-இசான்-லாய் கூட்டணியையே கமல் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

'இரண்டாம் பாகம் இந்தியாவில்' என்கிற குறிப்பு முதல் பாகத்தின் இறுதியில் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான காட்சிகள் லண்டன் நகரைக் காப்பாற்றுவதில் செலவாகின்றன. களத்தின் பின்னணி எங்கே என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

அரசியல் நுழைவிற்குப் பிறகு வெளியாகும் கமலின் முதல் திரைப்படம் என்பதால் தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பரப்புரைக்காக துவக்கக் காட்சிகளை கமல் பயன்படுத்தியிருப்பது அநீதியானது. பார்வையாளர்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் அவமதிப்பு என்று கூட சொல்லலாம்.

புகை, மது வரும் காட்சிகளில் அது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை இணைக்க வேண்டும் என்கிற நடைமுறை விதியினால், தன்னுடைய திரைப்படத்தின் வெளியீட்டை இந்தியாவில் அனுமதிக்க பிரபல இயக்குநர் வூடி ஆலன் மறுத்து விட்டார். பார்வையாளர்களின் நுகர்வுச் சுதந்திரத்தையும் நுண்ணுணர்வையும் மதிக்கும் செயல் இது. ஆனால், சினிமா பற்றி நன்கு தெரிந்த கமல் அரசியல் திணிப்புக் காட்சிகளை பார்வையாளர்களின் தலையில் சுமத்தியிருப்பது உவப்பானதாக இல்லை.

தமிழ் சினிமாவில், திரைப்படம் எனும் கலையைப் பல விதங்களில் முன்னகர்த்திச் செல்லும் கலைஞன் என்கிற வகையில் கமலின் இந்த முயற்சியை சகித்துக் கொள்ளலாமே தவிர, சிறப்பான திரைப்படம் என்று சொல்லி விட முடியாது.  அரசியல் மற்றும் சினிமா எனும் இரட்டைக்குதிரைச் சவாரியில் ஈடுபடத் துவங்கியிருக்கும் கமலின் முதல் அசைவே தடுமாற்றத்துடன் அமைந்திருப்பது துரதிர்ஷ்டமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com