திரை விமரிசனம்

வெற்றிமாறனின் ‘வட சென்னை’ - திரை விமரிசனம்

சுரேஷ் கண்ணன்

வட சென்னையைப் பின்புலமாக வைத்து ஏற்கெனவே சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றில் எதிலுமே வட சென்னையின் அசலான ஆன்மாவோ, கலாசாரமோ, மொழியோ வெளிப்படவில்லை. அதன் சாயல்கள்தான் மங்கலாக நிழலாகியிருக்கின்றன. பிறந்தது முதல் வடசென்னைவாசி என்பதால் இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். இந்த நோக்கில், சில போதாமைகள் இருந்தாலும் அசலான வட சென்னையைச் சித்தரிப்பதில் ஒருபடி முன்னேறியிருக்கிறார் வெற்றிமாறன். இவருடைய முந்தைய திரைப்படமான ‘பொல்லாதவனிலேயே’ இதற்கான மெல்லிய அடையாளங்கள் இருந்தன.

‘வெல்டிங் குமார், வெள்ளை ரவி, பாக்ஸர் வடிவேலு போன்ற பட்டப்பெயர்களுடன் கூடிய ரெளடிகளைப் பற்றியும் அவர்களின் குற்றங்கள் பற்றியும் செய்தித்தாள்களில் படித்திருப்போம். அவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன போன்றவை நமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ராஜன், குணா, செந்தில், தம்பி, வேலு, 'ஜாவா' பழனி போன்ற பாத்திரங்களின் மூலம் ரெளடிகளின் வாழ்வியலை இதில் சித்தரித்திருக்கிறார்கள். ரெளடி, காவல்துறை, அரசியல்வாதி ஆகியோருக்கு இடையே  உள்ள முக்கோண உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் அன்பு என்கிற சேரி இளைஞனின் வழியாக இந்தத் திரைப்படத்தில் விரிகின்றன.

ரெளடி குருவிடமிருந்து பிரிகிற சிஷ்யர்கள் பரஸ்பர விரோதத்துடன் தனித்தனியாக அமைக்கிற குழுக்கள், அவர்களின் இடையே உள்ள தொழில் போட்டி, அதன் காரணமாகப் பெருக்கெடுத்தோடும் ரத்தம், தொழில் கற்றுத் தந்த வாத்தியாரையே போட்டுத்தள்ள தருணம் பார்த்திருக்கும் துரோகம், பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகளாக உருமாறும் ரெளடிகள் போன்ற விஷயங்கள் எல்லாம் யதார்த்தத்திற்கு நெருக்கமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சேரிப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மைய சமூகத்தை நோக்கி முன்னகர முயன்றாலும், சூழல் அவர்களை இழுத்து எவ்வாறு பின்னே தள்ளுகிறது என்பதை பிரதான பாத்திரமான அன்புவின் மூலம் உணர முடிகிறது.

நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு கொலையை நிகழ்த்தி விட்டு மூச்சு வாங்கப் பதட்டத்துடன் பேசிக் கொள்வதில் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. கொலை செய்யப்பட்டவர் யார், அதற்கான காரணம் என்ன என்பதெல்லாம் ஏறத்தாழ படத்தின் இறுதியில்தான் தெரியவருகிறது. எண்பதுகளின் காலக்கட்டம் துவங்கி இரண்டாயிரத்தின் காலக்கட்டம் வரை விரியும் இதன் திரைக்கதை, சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையில் சுவாரசியமான நேர்க்கோடற்ற பாணியில் பயணிக்கிறது. படத்தின் ஆரம்பப் புள்ளியோடு தொடர்புடைய கொலைக்காட்சி ஏறத்தாழ இறுதியில்தான் காட்டப்படுகிறது.  'லாங் டேக்கில்’ அவல நகைச்சுவையுடன் கூடிய பரபரப்புடன் இதைக் காட்சிப்படுத்திய விதத்திற்காகவே வெற்றிமாறன் கொண்டாடப்பட வேண்டியவர். அத்தனை அற்புதமான காட்சியது.

கடற்கரைக்கு அருகில் இருக்கும் சேரிப்பகுதியைச் சேர்ந்த அன்பு (தனுஷ்) ஒரு நல்ல கேரம் விளையாட்டுக்காரர். அப்படியே முன்னேறி ஓர் அரசாங்க வேலையைக் கைப்பற்றி விடுவதுதான் இவரது லட்சியம். கூடவே இன்னொரு லட்சியமும் இருக்கிறது. பக்கத்து ஏரியாவில் இருக்கும் பத்மாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) டாவடித்து திருமணம் செய்து கொள்வது. அதில் ஏற்படும் ஒரு சர்ச்சையில்தான் அன்புவின் ‘ஏழரை’ துவங்குகிறது. பிறகு தொடரும் பல சம்பவங்களுக்கு அவன் அறியாமலேயே அன்பு மையப்புள்ளியாக இருக்கிறான். ஒருவேளை இவன்தான் படத்தின் நாயகனோ என்று பார்த்தால் இல்லை. இதையெல்லாம் பின்னால் இருந்து இயக்கும் இன்னொரு சக்தி இருக்கிறது. அது சந்திரா (ஆண்ட்ரியா). சேரிப்பகுதிக்கான தோற்றப் பொருத்தம் இல்லாவிட்டாலும் தன் அபாரமான நடிப்பால் அதைச் சமன் செய்திருக்கிறார் ஆண்ட்ரியா. கிட்டத்தட்ட பாஞ்சாலி சபதம்தான். தன் சபதத்திற்காக ஒவ்வொரு புள்ளியையும் அவர் சாமர்த்தியமாக இணைக்கும் விதம் அசர வைக்கிறது.

பல்வேறு காலக்கட்டங்களில் நகரும் திரைப்படம் என்றாலும் அந்தந்தச் சமயத்தின் தோற்றங்களுக்குச் சிறப்பாக பொருந்துகிறார் தனுஷ். அவரது மெல்லிய உடல்வாகு இதற்குத் தோதாக இருக்கிறது. படத்தின் நாயகன் தனுஷ் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் படத்தில் வரும் பிரதான பாத்திரங்களுள் ஒன்றாக மட்டுமே பெரும்பாலான காட்சிகளில் அவர் தெரிகிறார். சிறைக்கூடத்தில் எடுபிடிப் பையனாக இருப்பது முதற்கொண்டு பல வகையிலும் கீழிறங்கி நடித்ததற்குப் பாராட்டு. இயக்குநரிடம்  தனுஷ் தம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், பாக்சர் தீனா போன்றோர் திரைக்கதையுடனேயே பயணம் செய்கிறார்கள். அந்தந்த காலத்தின் தோற்றங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதில் டேனியல் பாலாஜியின் பங்களிப்பைப் பிரத்யேகமாக குறிப்பிடலாம். அமீரின் பாத்திரம் தனித்துத் தெரிகிறது. அதைச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

சாமி 2 –ல் ‘மிளகாய்ப்பொடியாக’ பொருந்தாமல் போன ஐஸ்வர்யா ராஜேஷ், இதில் வடசென்னை வசைகளை அநாயசமாக வீசும் பாத்திரத்தில் ‘நச்’செனவும் சில அந்தரங்க காட்சிகளில் ‘இச்’செனவும் சிறப்பாகப் பொருந்திப் போகிறார். ராதாரவி, சுப்ரமணிய சிவா, வின்சென்ட் அசோகன் போன்றவர்கள் துணைப்பாத்திரங்களாக வந்து போகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக வரும் சிறுவனைக் கூட அத்தனை ‘அசால்ட்டாக’ நடிக்க வைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி ஆகிய அரசியல்வாதிகளின் மரணச் செய்திகளை அந்தந்த காலத்தின் பின்புலத்தில் பயன்படுத்திக் கொண்டது ஒருவகையில் தேய்வழக்கு என்றாலும் தொடர்புடைய சம்பவங்களுடன் சிறப்பாக பொருந்திப் போகிறது. படத்தின் தலைப்பு ‘வட சென்னை’ என்றாலும் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் உள்அரங்கத்திற்குள் நடப்பது பலவீனம். மாறாக வெளிப்புறக்காட்சிகளை அதிகரித்திருந்தால் படத்தின் நம்பகத்தன்மை கூடியிருக்கும். வடசென்னையின் வழக்கு மொழியும் வசைகளும் ஏறத்தாழத் துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் எவர் மீதும் மையம் கொள்ளாமல் சம்பவங்களின் வழியாக மட்டுமே திரைக்கதை அலைகிறது.  புரிந்து கொள்ள சிக்கலாக மாறும்  அபாயம் இருக்கக்கூடிய திரைக்கதையை ‘வாய்ஸ் ஓவர்’ விவரிப்பில் வெற்றிமாறன் மிகச் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். சற்று மெனக்கிட்டாலே போதும், இந்தப் பாதையை பின்தொடர்ந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் சட்சட்டென்று மாறும் காட்சிகளாலும் அறிமுகங்களாலும் சிறிது சிரமம் ஏற்படுவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் முதல்பகுதி சிறைச்சாலைகளில் நடக்கும் ஊழலையும் மோசடியையும் துல்லியமான காட்சிகளுடன் அம்பலப்படுத்துகிறது. பல நூதனமான வழிகளில் சிறைக்கு உள்ளே கடத்தப்படும் போதைப் பொருள்கள், தினமும் லட்சக்கணக்கில் நடக்கும் வணிகம், காவல்துறைக்கும்  குற்றவாளிகளுக்கும் இடையே உள்ள கள்ளக்கூட்டணி, குறுநில மன்னர்களைப் போல் சிறையைப் பிரித்துக் கொண்டு ஆளும் முன்னணி ரெளடிகள், அவர்களுக்கு இடையே நிலவும் விரோதங்கள், சமரசங்கள் என்று குற்றவாளிகளைத் திருத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறைச்சாலைகள், குற்றங்களின் ஊற்றுக்கண்களாக இருக்கும் நடைமுறை அபத்தத்தை இந்தக் காட்சிகள் சிறப்பாக சித்தரித்திருக்கின்றன. நகர விரிவாக்கம் என்கிற பெயரில் சேரிவாழ் மக்கள் தங்களின் ஆதார வசிப்பிடங்களையும் பணியிடங்களையும் விட்டுக் கண்காணா தூரத்தில் அப்புறப்படுத்தப்படும் 'நில அரசியலையும்' இத்திரைப்படம் இறுதியில் பேசுகிறது.

சில குறைகளும் இல்லாமல் இல்லை. வடசென்னையைப் பின்புலமாகக் கொண்ட திரைப்படம் என்றாலே ரெளடிகள், வன்முறை, ரத்தம் என்கிற தேய்வழக்கை இந்தத் திரைப்படமும் பின்பற்றியிருப்பது நெருடலாக இருக்கிறது. வடசென்னை என்பது சமூக விரோதிகளால் நிரம்பியிருக்கும் பிரதேசம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் பிம்பத்தை இத்திரைப்படமும் உறுதி செய்வதை தவிர்த்திருக்கலாம். ஆனால் கதையின் மையம்  அதைத்தான் கோருகிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. துவக்கம் முதல் இறுதிவரை சுவாரசியத்தைத் தக்க வைத்திருக்கிற திரைப்படம் என்றாலும் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

சந்திரா தன் திட்டத்தை வசனங்களின் வழி வெளிப்படுத்தாமலேயே அது பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும். அரசாங்க வேலையை விரும்பும் அன்பு,  ராஜனைப் பின்பற்றி அந்த ஊரைக் காப்பதற்காக முடிவு செய்யும் திருப்பம் போதிய அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. இதைப் போலவே குணாவிடம் அன்பு விசுவாசமாக மாறும் சூழலிலும் அழுத்தம் இல்லை. தன் தம்பியின் எதிர்காலத்திற்காகத்தான் குணா அதைச் செய்கிறான். அன்புவின் நலனிற்காக அல்ல.

ஜாஸ் இசையையும் சென்னையின் கானாவையும் வசீகரமான கலவையில் பயன்படுத்துவதை ஆரம்ப காலம் முதலே வழக்கமாக வைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அந்தப் பாணிக்கு மிகப் பொருத்தமான திரைக்கதை இது  என்பதால் சந்தோஷ் புகுந்து விளையாடியிருக்கிறார். பின்னணி இசை பல இடங்களில் அமர்க்களமாக இருக்கிறது. மணிரத்னத்தின் பாணியில் பாடல்களைக் காட்சிகளோடு கரைய விட்டிருக்கிறார் இயக்குநர். அந்தந்த காலத்தின் பின்புலத்தை உணர்த்த திரைப்படங்களின் போஸ்டர்கள், கடை போர்டுகள் உள்ளிட்டு பல விஷயங்களை மெனக்கிட்டு உருவாக்கியிருக்கிருக்கும் கலை இயக்குநரைப் பாராட்டலாம். வெவ்வேறு காலக்கட்டத்தின் வேறுபாடுகளை வித்தியாசமான வண்ணங்களால் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

ஏறத்தாழ நான்கு காலக்கட்டங்களில், நேர்க்கோடற்ற பாணியில்  நிகழும் நீளமான திரைப்படம் என்பதால் எடிட்டரின் பணி இத்திரைப்படத்திற்கு முக்கியம். அதிகம் குழப்பம் ஏற்படுத்தாத கதையாடலாக இதை உருவாக்கித் தந்திருக்கிறார் வெங்கடேஷ்.

அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' திரைப்படத்திற்கு நிகரான படைப்பை தமிழிலும் சாதித்திருக்கும் வெற்றி மாறனின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 2009-ல் துவங்கப்பட்ட இந்தத் திட்டம், பல மாற்றங்களுக்குப் பிறகு தாமதமாக 2018-ல் வெளிவந்திருந்தாலும் தனது புத்துணர்ச்சியைத் தக்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. 'அன்புவின் எழுச்சி' என்கிற பெயரில் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு இறுதியில் வருகிறது.

ஆண்கள் அரசாளும் பெரிய பெரிய சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் பெண்கள் இருக்கும் அதே காவிய விஷயத்தை நவீன நகர மொழியில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறது 'வட சென்னை'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT