கனவு இப்படியும் வருமா? மாறுபட்ட கதையம்சம் கொண்ட குறும்படம்!

ஒருவர் காணும் கனவின் தொடர்ச்சி மற்றவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று சொல்கிறது நான்காம் விதி குறும்படம்.
கனவு இப்படியும் வருமா? மாறுபட்ட கதையம்சம் கொண்ட குறும்படம்!

நாம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது வரும் கனவுகளில் கூட பல வகை உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஒருவர் காணும் கனவின் தொடர்ச்சி மற்றவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று சொல்கிறது நான்காம் விதி குறும்படம். அனு சத்யா என்ற இளம்பெண் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு இளம்பெண் பிறந்த தினத்துக்காக தந்தையிடம் ஆசி பெறுவதிலிருந்து தொடங்குகிறது குறும்படம். பார்த்தால், அதுவொரு கனவு!

இந்தக் கனவு ஒரு புகைப்படக் கலைஞருக்கு வருகிறது. இதன் தொடர்ச்சி, ஒரு திருநங்கைக்கும், தொலைக்காட்சி நிருபருக்கும், பிறவியிலேயே பார்வையிழந்தவருக்கும் வருகிறது.

தனக்கு வந்த கனவு குறித்து முகநூலில் விளக்கம் கேட்கும் இளைஞரை அழைக்கிறார் மனோதத்துவவியல் நிபுணராக நடித்திருக்கும் ராம்ஜி (எவ்வளவு நாள் ஆயிற்று ராம்ஜியை திரையில் பார்த்து). படத்தில் ராம்ஜி கூறுவது போல், இந்தக் கனவை கண்ட நபர்கள் அனைவரையும் விதி ஒருங்கிணைக்கிறது.

அவர்களுக்கு வந்த கனவு என்ன? அந்தக் கனவால் நேரவிருக்கும் ஒரு அசம்பாவித சம்பவத்தை அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்களா? என்பதே குறும்படத்தின் முடிவு. சிறந்த திரைக்கதை மற்றும் வசனங்கள் ஆகியவற்றால் மட்டுமே இந்தக் கதையை ரசிகர்களுக்குப் புரிய வைக்க முடியும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் அனு சத்யா.

ராம்ஜியுடன் இயக்குநர் அனு சத்யா
ராம்ஜியுடன் இயக்குநர் அனு சத்யா

குமரேஷின் படத் தொகுப்பு கதையைப் புரிய வைப்பதற்குத் துணை புரிகிறது. கதைக்குத் தேவையான கோணங்களைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் சுபாஷ் மணியன். பொறியாளன் படத்தின் இசை அமைப்பாளரான எம்.எஸ்.ஜோன்ஸ் இந்தப் படத்துக்கு இசை மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களின் (தீபக், ருத்ரா, ஈஷ்வர், ஆல்பர்ட், மங்கை) முதல் எழுத்துகளை ஒன்றிணைத்தால் Dream என்று முடியும்.

இந்தப் படத்தை இயக்குநர்கள் ராஜு முருகன், வேல்ராஜ், அருண்ராஜா காமராஜ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் டுவிட்டரில் ஷேர் செய்து வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். ராம்ஜி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்குத் தேவையான கச்சிதமான தேர்வு. ஒரு தலை காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை கொலை செய்வதையும், அந்தப் பெண்ணை ஆயுதங்கள் கொண்டு தாக்குவதையும் கடுமையாக இந்தப் படத்தின் வழியே எதிர்க்கிறார் இயக்குநர் அனு சத்யா.

படம் பற்றி அவர் கூறுகையில், ‘இன்செப்சன் படத்தை இயக்கிய கிறிஸ்டோஃபர் நோலன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். கனவு தொடர்பாக அவர் எடுத்திருந்த அந்தப் படம் எனக்கு பிடிக்கும். கனவை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் இயக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி நான்காம் விதி கதையை உருவாக்கினேன்.

இந்தப் படத்தை சத்யம் திரையரங்கில் திரையிட்டோம். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர் மித்ரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

காதல் என்ற பெயரால் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இந்தப் படத்தை எடுக்க நினைத்தேன்’ என்று கூறிய அனு சத்யாவுக்கு வெள்ளித்திரையில் விரைவில் தடம் பதிக்க வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com