எனக்கு சினிமா மோகம் அதிகம்! இப்படி சொன்னவர் யார்?

பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட ஆளுமைமிக்க இயக்குநர்களின் படங்களில் நடித்த
எனக்கு சினிமா மோகம் அதிகம்! இப்படி சொன்னவர் யார்?

பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட ஆளுமை மிக்க இயக்குநர்களின் படங்களில் நடித்த போதிலும், இன்னும் திருப்புமுனைக்காக காத்திருக்கிறார் விக்னேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விக்னேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள சமீபத்திய வரவு 'ஆருத்ரா'. முதன் முறையாக இப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இது குறித்து அவரிடம் பேசியபோது... 'எனக்கு சினிமா மோகம் அதிகம். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமாதான். பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு திருப்புமுனை இல்லை. நண்பர் பா. விஜய் கேட்டு கொண்டதற்காக ஆருத்ராவில் வில்லன் வேடம் ஏற்றேன். அது அவரின் அன்புக் கட்டளை. தவறிப் போன 'சேது' படம் பற்றி இப்போதும் பலர் பேசி வருகிறார்கள். அதற்காக இப்போதும் வருத்தம் உண்டு. என் நண்பன் பாலா அதன் மூலம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. 'சேது' மாதிரி 'வண்ண வண்ண பூக்கள்' படமும் ஏழு நாட்கள் நடித்தப் பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகவில்லை. வலிகளுக்கு மருந்தாக ஒரு நாள் ஜெயிக்கும் காலம் வரும்'' என்றார் விக்னேஷ். 

ஸ்ரேயா சில மாதங்களுக்கு முன் அந்தேரி கொச்சேவ்' என்பவரை மணந்தார். இப்போது சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'நரகாசூரன்' விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை 'துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவுக்கு வரும் ஸ்ரேயா பேசும் போது... 'திரைக்கதைதான் இதில் என்னை நடிக்க வைத்தது. பிடித்த சில படங்களில் இதுவும் ஒன்று. எனது கதாபாத்திரத்துக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்று எண்ணி உள்ளேன். தமிழில் நான் அதிக கவனம் செலுத்தவில்லையா என்கிறார்கள். அப்படி இல்லை. எனக்கேற்ற கதாபாத்திரங்கள் வரும்போது நான் ஏற்று நடிக்கவே செய்கிறேன். 'சிவாஜி' படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் இனிமையானது. அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். என் திருமண வாழ்க்கை எனது தனிப்பட்ட விஷயம் என்பதால் அதுபற்றி வெளியில் பேசுவதில்லை. மற்றபடி மொழி பாகுபாடில்லாமல் நான் நடித்து வருகிறேன். அடிக்கடி வெளிநாடு செல்வதுபற்றி கேட்கிறார்கள். எனக்கு பிடித்திருக்கிறது அதனால் செல்கிறேன். நடன பின்னணியில் ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது' என்கிறார் ஸ்ரேயா. 

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சர்கார்'. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் இப்படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சென்னை, கொல்கத்தா, லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அடுத்தடுத்த கட்டங்களாக இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படக்குழுவினரோடு வரலெட்சுமி உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாடல்கள் வெளியாக இருக்கின்றன. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகிறது. 

விகடனில் வெளிவந்த 'மறக்கவே நினைக்கிறேன்' தொடர் மூலம் பரிச்சயம் ஆனவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றிய இவர், தற்போது இயக்கி வரும் படம் 'பரியேறும் பெருமாள்'. பா.ரஞ்சித், தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்கும் முதல் படம். திருநெல்வேலியை கதைக் களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. கதிர் கதநாயகனாக நடிக்கிறார். 'கயல்' ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்து பரவலான வரவேற்புகளைப் பெற்றுள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. 

பவன்குமார் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம் 'யு டர்ன்'. தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் வரிசையில் இடம் பிடித்து அதைப் பூர்த்தியும் செய்துவிட்டது இப்படம். கடந்த 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதில் நடித்தது குறித்து சமந்தா கூறியதாவது... 'கன்னடத்தில் யு டர்ன் ட்ரெய்லரை பார்த்தவுடனே அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப் பட்டேன். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படம் உருவாகியுள்ளது. ஆதி, என் முதல் படமான 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் நடித்த ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிக்கின்றனர். நான் பத்திரிகையாளராக வந்து துப்பறிகிறேன். ஒரு காட்சியில் போலீஸ் ஆதி என்னை மிரட்டி விசாரிக்கும்போது, நிஜமாகவே நான் அழுதுவிட்டேன். பொதுவாக, கிளிசரின் போட்டு அழச் சொன்னாலே நான் பதற்றமாகி விடுவேன். காரணம், கிளிசரின் போட்டால் என்னால் அழ முடியாது. ஒரிஜினலாக கண்ணீர் வடிப்பதுதான் பிடிக்கும். ஆக்ஷன் ஹீரோயின் வேடங்கள் பிடிக்கிறது. அதற்காக இப்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்கிறேன்' என்றார் சமந்தா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com