'நாடகக் காவலர்’ ஆர்.எஸ்.மனோகரை நினைவிருக்கிறதா?

தமிழ் சினிமாவில் சில மறக்க முடியாத சிலர் வில்லன் நடிகர்கள் இருந்துள்ளனர்.
'நாடகக் காவலர்’ ஆர்.எஸ்.மனோகரை நினைவிருக்கிறதா?

தமிழ் சினிமாவில் சில மறக்க முடியாத வில்லன் நடிகர்கள் இருந்துள்ளனர். சிலர் குரலாலும், சிலர் நடிப்பாலும், இன்றளவும் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார்கள். டி.எஸ்.பாலையா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரை அத்தனை சீக்கிரம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மறந்துவிட முடியாது.

‘நாடகக் காவலர்’ என்று போற்றப்படும் ராமசாமி சுப்ரமணிய மனோகர் (ஆர். எஸ். மனோகரின்) இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மி நரசிம்ஹன். இவர் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு முடித்தவர், பச்சையப்பாஸ் கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்த பட்டாரி ஆவார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார்.

அக்காலத்தில் ஜே.ஆர்.ரங்கராஜு என்பவர் எழுதிய துப்பறியும் கதை 'ராஜாம்பாள்'. இந்தப் தலைப்பில் படமெடுக்க புதுமுகங்களைத் தேடினார்கள். அப்போது லக்ஷ்மி நரசிம்மனைப் பற்றி கேள்விப்பட்டு அவரை அழைத்து நடிக்கச் செய்தனர். அவரும் அருமையாக நடிக்கவே உடனே அவரை தமது படத்துக்காக தேர்ந்தெடுத்தார். ஏற்கனவே பள்ளி காலத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்ததால், மனோகர் என அவருடைய பெயரை மாற்றி நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தில் வீணை பாலச்சந்தர் வில்லனாக நடித்திருந்தார். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.

1956-ம் ஆண்டு வெளிவந்த ‘நல்ல வீடு என்ற படத்தில் மனோகருக்கு கதாநாயகன் வேடம் சிவாஜி கணேசனுக்கு வில்லன் மற்றும் கதாநாயகன் பாத்திரம். ‘கானல் நீர்’ என்ற படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். போலவே 1952-ம் ஆண்டு வெளியான ‘தாயுள்ளம்’ என்ற படத்தில் ஜெமினி கணேசன் வில்லன் மனோகர் கதாநாயகன். நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு ஆகியோரும் அப்படத்தில் நடித்தனர். காலச் சுழற்சியில் 1959-ம் ஆண்டு வெளிவந்த ‘வண்ணக்கிளி’ என்ற படத்தின் மூலம் நிரந்தர வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் ஆர்.எஸ்.மனோகர், அதன் பின் கொஞ்சும் சலங்கை, இதயக்கனி, அனாதை ஆனந்தன், சங்கிலி, பறக்கும் பாவை, யாருக்குச் சொந்தம், எதிரிகள் ஜாக்கிரதை, அம்மா எங்கே, கொஞ்சும் குமரி, நாலும் தெரிந்தவன், நீதி, நூற்றுக்கு நூறு, நீ, நான், தாயே உனக்காக போன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்ப்பெற்றார்.

மனோகர் நேரடியாக தமிழ் திரைக்கு நடிக்க வரவில்லை. சர்க்கார் உத்தியோகம் என்று அக்காலத்தில் அழைக்கப்படும் மத்திய அரசு அஞ்சல் துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் பொழுதுபோக்காக நாடகங்களை நடத்தினார். தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்த மனோகர்  மேடை நாடகங்களில் நடிப்பில் ஆர்வம் உடையவராக இருந்தார். தனது கனவுகளை பின் தொடரத் தெரிந்த அக்கலைஞன் விரைவில் 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் ராவணனாக நடித்து அழியாப் புகழ் பெற்றுவிட்டார்.  அதன் பின் அப்பெயரே அவருக்கு அடைமொழியானது. அவரது திரை வாழ்க்கைக்கும் முக்கிய காரணியாகியது.

1950-ம் ஆண்டு சென்னையில் பிரபல வக்கீலாக இருந்து கொண்டே, அமச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் மனோகர் இணைந்து நாடகங்களில் நடித்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய நாடகக் குழுவிலும் அடிக்கடி நடித்தார். திரைப்படங்களில் வெற்றிகரமான வில்லன் கதாபாத்திரங்களை நடித்துக் கொண்டே நாடகத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் மனோகர். அவரது இந்த ஆர்வம் சொந்தமாக 1954-ம் ஆண்டு ஒரு நாடகக் குழுவை உருவாக்கியது. நேஷனல் தியேட்டர்ஸ் என்கிற நாடகக் குழு விரைவில் புகழை ஈட்டியது.

அதன் பின் அவர் போட்ட அத்தனை நாடகங்களும் பெரும் வெற்றி பெற்றன. ஆர்.எஸ்.மனோகரின் நாடகத்தை மக்கள் விழிகள் விரிய பார்த்ததன் காரணம் அதன் பிரம்மாண்டமான அரங்கு வடிவமைப்பு. திரைப்படங்களில் காட்சிப்படுத்துவதைப் போலவே தனது நாடகங்களுக்கு பெரிய செட்டுக்களை போடுவார் மனோகர். அவரது நாடகங்கள் பெரும்பாலும் புராணக் கதையாக இருக்குமாதலால் தந்திரக் காட்சிகள் நிறைந்திருக்கும். இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை அளித்து, சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.மனோகரின் மற்றொரு தனித்துவம் அவர் நாடகங்களில் நாயகன், வில்லன் என்ற அடையாளங்களை அன்றே மாற்றியவர். அவ்வகையில் தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார். பொதுவாக மக்கள் கதாநாயர்களாக வணங்கும் கதாபாத்திரத்தை வில்லனாகவும், வில்லனாக அறியப்படும் கதாபாத்திரங்களை கதாநாயகனாகவும் ஆக்குவார். லங்கேஸ்வரன் நாடகமே இதற்கு சான்று. மேலும் அவருடைய புகழ்பெற்ற சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். மேலும் காடகமுத்தரையன், சூரபத்மன், சிசுபாலன் என்று பல நாடகங்களை இவ்வகையில் போட்டுள்ளார். பலவிதமான புராண கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, மிக எளிமையாக கதை சொல்லல் முறையில் நாடகமாக்கியவர் மனோகர். 

தன்னுடைய நாடகத்தில் எவ்வித பிசகும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் ஆர்.எஸ்.மனோகர். அதற்கென ஒவ்வொரு நாடகத்திற்கும் குறைந்தது 30 நாட்களாவது ஒத்திகை பார்ப்பார். தொழில் சார்ந்தும் சொந்த வாழ்க்கையிலும் கண்ணியமானவர். நண்பர்களுக்கு உகந்தவர், நல்லாசான் என்று அனைவரும் போற்றும் வகையில் வாழ்வாங்கு வாழ்ந்த வித்தகர் அவர். இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர் அவர். 2006-ம் ஆண்டு தனது 81-வது வயதில் மறைந்தார் ஆர்.எஸ்.மனோகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com