ஸ்பெஷல்

சட்டவிதிகள் ஒன்றும் பாறையில் பொறிக்கப்பட்டவைகள் அல்ல! மராட்டிய இயக்குநர் சைதன்ய தம்ஹானே பேட்டி!

ராம் முரளி

இந்திய திரையுலகில் புதிதாக உருவெடுத்துவரும் நம்பிக்கை மிகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் சைதன்ய தம்ஹானே. 2014-ம் ஆண்டில் வெளியான இவரது முதல் திரைப்படமான கோர்ட், திரையிடப்பட்ட தினத்திலிருந்தே பலத்த விவாதங்களை ஊடகங்களில் தோற்றுவித்திருந்தது. இந்திய நீதித்துறையின் இயங்குமுறையை எளிய மனிதர்களின் வாழ்வினூடாக அணுகி பதிவு செய்திருந்த அத்திரைப்படம், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சில அரிதான திரையாக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கீழ்நிலை நீதிமன்றங்கள் குறித்த அபத்த சித்தரிப்புகள் தனக்களித்த சோர்வின் காரணமாகவே இத்திரைப்படம் எடுக்கும் உந்துதலை அடைந்ததாக தம்ஹானே குறிப்பிடுக்கிறார். வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது, அதோடு ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என பல்வேறு அங்கீகாரமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. தனது முதல் திரைப்படத்திலேயே இந்திய நீதித்துறை குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ள தம்ஹானே மீது அடுத்தடுத்த படைப்புகளுக்கான எதிர்ப்பார்ப்புகள் குவிந்திருக்கின்றன. தம்ஹானேவிடம், கேரவன் செய்தியாசிரியர் மாணிக் ஷர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் இது.   

கோர்ட் திரைப்படத்துக்கான உந்துதல் உண்டாகும் முன்பாக, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

நான் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தேன். அதோடு, எனது பதினேழாவது வயதிலிருந்தே எழுத்துச் சார்ந்த பணியில் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். எனது பத்தொன்பதாவது வயதில் சில சுயாதீன படைப்பாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கினேன். அதில், சுயமாக எனது கையிருப்பு தொகையை செலவிட்டு 2005-ம் ஆண்டில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட Four Step Plan எனும் ஆவணப்படமும் அடக்கம். அதன் பிறகு நான், 2009-ல் டென்மார்க்கில் வசிக்கும் போது ‘சாம்பல் நிற யானைகள்’ எனும் நாடகத்தை எழுதினேன். அதற்கும் அடுத்த ஆண்டில் சிறிய அளவில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். எனினும், இவை மூலமாக எனக்கு பொருளீட்டும் சாத்தியம் உருவாகாமல் இருந்தது. எனது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக எனக்கு நெருக்கடி அளித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த காலக்கட்டத்தில்தான் எனது வாழ்க்கையிலேயே அதீத நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தேன். என்னால், மேசையை தேய்த்துக் கொண்டு ஒரேயிடத்தில் அமர்ந்து காலத்தை கடத்துகின்ற பணியினில் கவனத்தை செலுத்த இயலாமல் இருந்தது. அதே தருணத்தில் எனது தினசரிகளுக்கான பணத் தேவையும் அதிகரித்தபடியே இருந்தது. சரியாக, இந்த நாட்களில்தான் Court திரைப்படம் குறித்த முதல் கரு என்னில் உருவாக துவங்கியது. 

Court திரைப்படத்துக்கான  உந்துதல் தனிப்பட சுய அனுபவத்தின் மூலமாக உண்டாகியதா அல்லது பல்வேறு சம்பவங்கள் அளித்த படிப்பினைகளின் மூலமாக அதனை குறித்து சிந்திக்க துவங்குனீர்களா?

ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. எனக்கு எப்போதும் ஆய்வு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதில் மிகுதியான விருப்பமுண்டு. நான் சில வழக்குகளை தீவிரமாக பின்தொடர்ந்தபடியே இருந்தேன். எனினும், எது நீதிமன்றத்தை குறித்த திரைப்படம் ஒன்றை உருவாக்கலாம் என்கின்ற தூண்டுதலை அளித்ததென்றால், பொதுவாக மைய நீரோட்ட திரைப்படங்களில் காண்பிக்கப்படுகின்ற கீழ்நிலை வழக்கு மன்றங்கள் குறித்த அபத்தமான சித்தரிப்புகள்தான். அதோடு, நாட்டுபுற இசைக் கலைஞர்களான சம்பாஜி பகத் (Sambhaji Bhagat) முதலியோரின் செயல்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.

வழக்குகளில், நான் ஜீத்தன் மரண்டியின் (Jitan Marandi) வழக்கை தொடர்ச்சியாக கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன். அடையாளச் சிக்கலை எதிர்கொண்டிருந்த  குழப்பம் மிகுந்த வழக்கு அது. அந்த வழக்கு நீதித்துறையை நையாண்டித் தன்மையில் நெருங்கி அணுகும் எண்ணத்தை எனக்களித்தது. இதைத் தவிர, பல்வேறு வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் செய்தித்தாள்களில் கிடைக்கின்ற குறிப்புகளை சேகரித்தல் போன்றவை அக்காலங்களில் எனது தினசரி தொடர் நடவடிக்கையாக மாறியிருந்தது. நான் வெவ்வேறு கண்ணோட்டத்தில் நீதித்துறை குறித்த தகவல்களை சேகரித்து ஆய்வு செய்த பிறகே, திரைப்படத்துக்கான வடிவம் குறித்து சிந்திக்கத் துவங்கினேன்.

விமர்சகர்கள் இத்திரைப்படத்திற்கு எதிர்மறையாக முன்வைத்த கருத்தென்றால், தற்கொலையை ஊக்குவிக்கும் செயல்பாடு என்கின்ற 306 சட்ட விதியை திரைப்படத்தில் கையாண்டிருப்பதுதான். இந்த விதியைப் பொருத்தளவில், தேசத்தின் மிக முக்கியமான நீதிமன்றங்கள் கூட கையாள்வதில் தோல்வியுற்றிருக்கிறது. இதில் உளவியல் ரீதியிலான அழுத்தம் அதிகமிருக்கிறது. எப்படி இந்த வழக்கை திரைப்படத்தில் கையாளலாம் என தீர்மானித்தீர்கள்? உங்களது ஆய்வுகளில் இது குறித்த தகவல்கள் ஏதேனும் உங்களுக்கு கிடைத்திருந்ததா?

கோர்ட் திரைப்படத்துக்கு தேவையான அனைத்து தகவல்களும் என்னிடம் இருந்தன. என்னிடத்தில் ஒரு உதாரண வழக்கு மட்டும் இல்லாமல் இருந்தது. தெஹெல்காவில் எஸ்.ஆனந்த் என்பவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை வாசித்ததற்கு பிறகுதான், இந்த வழக்கு குறித்த எண்ணம் எனக்குள் எழுந்தது. ஆனந்த் அக்கட்டுரையில் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களை பற்றி எழுதியிருந்தார். அவர்களது பரிதாபத்திற்குரிய அவல நிலை என்னை கலங்கடித்தது. அதோடு, நான் தற்கொலை சம்பவம் தொடர்பான கட்டுரை ஒன்றையும் அதே நேரத்தில் வாசித்தேன். உடனடியாக, எனது எண்ணத்தில் இவ்விரு சம்பவங்களும் பிணைந்து கொண்டுவிட்டன. ஆனால், எனது திரைப்படமென்பது குறிப்பிட்ட ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை மட்டுமே ஆராய்வதில் தனது கவனத்தை குவித்திருக்கவில்லை. இயந்திரத்தன்மையிலான அதன் இயங்குமுறையை காட்டிலும், நீதி விசாரணையை மானுடவியல் தன்மையில் நெருங்கி அணுகவே நான் விரும்பினேன். நான் இது தொடர்பாக உரையாடிய எல்லோரிடமும் ஒரு கருத்து பொதுவாக இருந்தது. அந்த விவாதங்கள், ‘தற்கொலையை தூண்டுதல்’ எனும் சட்டத்தை பற்றியது மட்டுமே அல்லாமல், அந்த சட்டத்தை சீர்திருத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்துவதாய் அமைந்திருந்தன. எவர் ஒருவரும் கேள்வியெழுப்பக்கூடாது என்று சொல்ல சட்ட விதிகள் ஒன்றும் பாறைகளில் பொறிக்கப்பட்டிருக்கவில்லை. இதைத்தான் கோர்ட் திரைப்படம் கூடுமானவரையில், ஆய்வு செய்திருக்கிறது. அதோடு, கோர்ட் திரைப்படத்தில் நான் கையாண்டிருக்கும் இந்த கருப் பொருளானது இது வரையிலும் எவராலும் வெளிப்படுத்தப்படாததோ அல்லது அலசி ஆராயப்படாததோ அல்ல என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

கோர்ட் போன்ற எதார்த்தவாதத்தை சார்ந்திருக்கும் படைப்புகளுக்கு, அதனது நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதனால், அதீத உண்மைத் தன்மையுடன் யதார்த்தமாக திரைப்படத்தில் நடிப்பது எவ்வளவு சிக்கல் மிகுந்தது? அதோடு, உங்களது நடிகர்களிடம் உண்மைக்கு நெருக்கமான நடிப்பை எப்படி உங்களால் பெற முடிந்தது?

இந்த திரைப்படம் உண்மையை கூர்ந்து நோக்க முயலும் ஒரு படைப்பு. அதனால், நடிகர்களிடமிருந்து அசலான உணர்வுகளை பெறுவது உண்மையிலேயே மிக மிக முக்கியமான பணிதான். இந்த திரைப்பட உருவாக்கத்திலேயே அதிக சவால் மிகுந்த பகுதியாக நடிகர்களை கையாளுவதுதான் இருந்தது. தொடர்ச்சியான செறிவான நடிப்பை நான் திரையில் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன். இலக்கணத் தன்மையில் ஒரு ஒழுங்குடன் நடிகர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுத் தன்மை இருக்க வேண்டுமென விரும்பினேன்.

ஆனால், இத்திரைப்படத்தில் எண்ணிக்கை அளவில் பல நடிகர்கள் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் 80 சதவிகிதம் மக்கள் நடிப்புத் துறையில் முன்னனுபவம் இல்லாத சராசரி மனிதர்கள். ஒரு சிலர் நாடக அனுபவம் கொண்டவர்கள் என்றாலும், மிகுதியானவர் இதற்கு முன்பு ஒரு போதும் கேமிராவின் முன்னால் நின்றவர்களில்லை. எங்களிடம் 1800 மனிதர்களின் சுய விபரப் பட்டியல் இருந்தது. அதிலிருந்து பத்து மாத கால அவகாசத்தில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே நடிப்புத் சோதனையை மேற்கொண்டோம். படத்தில் பல காட்சிகளை ஒற்றைய நீண்ட ஷாட்டாக எடுக்க திட்டமிட்டிருந்ததால், நடிகர்களின் குறைகளை படத்தொகுப்பின் போது பூசி மொழுகுவது சாத்தியமில்லை என்பதை துவக்கத்திலேயே உணர்ந்திருந்தோம்.

படப்பிடிப்பு தினத்தில் ஒரேயொரு நடிகர் ஏதேனும் ஒரு சிறிய தவறை செய்துவிட்டால் கூட நாங்கள் மீண்டும் முதலில் இருந்து அந்தக் காட்சிப் பதிவை துவங்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் ஒரு நாளுக்கு ஒரேயொரு முழுமையான ஒற்றை காட்சிப் பதிவை மட்டும் பதிவு செய்வது என்று முடிவெடுத்திருந்தோம். எனினும், அந்த ஒரு காட்சிப்பதிவும் குறைந்தது நாற்பதிலிருந்து அறுபது முறையாவது மீண்டும் மீண்டும் படம் பிடிக்கப்பட்டது. அதாவது அத்தனை டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது என்று சொல்கிறேன். எல்லோருடைய பொறுமையையும் சோதிக்கக் கூடிய மிக கடினமான வேலைதான் இது என்றாலும், மிக அதிக உண்மைத்தன்மையை திரையில் கொண்டு வர, நாங்கள் இதனையெல்லாம் அனுபவித்தே ஆக வேண்டியிருந்தது.

கோர்ட் திரைப்படம் எப்போதும் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றே வரையறுக்கப்படும். ஏதாவதொரு தருணத்தில், இந்த திரைக்கதை உங்களுடன் பேச வேண்டுமென்று விரும்புனீர்களா? இந்தியாவில் தயாரிக்கப்படும் பெருவாரியான திரைப்படங்களைப் போல உங்களது எண்ணத்தை ஏதேனுமொரு புள்ளியில் பதிவு செய்ய வேண்டுமென விரும்புனீர்களா?

இந்தக் கேள்விக்கான பதிலை இரு பகுதிகளாக பிரித்து உங்களிடம் தெரிவிக்கிறேன். முதலில், தனி மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தாத வெறும் கருத்துருவாக்க செயல்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. அதாவது, ஒற்றை கோணத்திலேயே எதுவொன்றையும் நம்மால் அணுகிவிட முடியாது. அனைத்து கலை வடிவங்களிலும், இயல்பாகவே அதன் படைப்பாளியை பிரதிபலிக்கின்ற ஒரு குவி மையம் சுயமாக உருவாகியிருக்கும். ஆம். மைய நீரோட்ட திரைப்படங்களில் இந்த குவிமையம் என்பது வெகு அப்பட்டமாக கையாளப்படுகிறது என்பது உண்மைதான். அங்கு அது நாயக உருவில் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், சுயபிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையற்றத்தன்மையிலோ ஒரு படைப்பாளியின் மனம் வெளிப்படுத்தப்படாத அல்லது இயங்காத ஒரேயொரு திரைப்படத்தைக் கூட என்னால் சிந்திக்க முடியவில்லை. இரண்டாவது, இந்தத் திரைப்படம் தனி மனிதரொருவரை மட்டும் பின்தொடராமல், பெரிதும் ‘நீதித்துறை’ எனும் கருத்துருவாக்கத்தை சார்ந்தே இயக்கம் கொள்கிறது என்றாலும், திரைக்கதை எழுதும்போது வலிந்து அவசரகதியில் ஒரு கருத்தை முன்மொழிந்துவிட வேண்டுமென்றோ, ஏதேனுமொரு தரப்பினரின் பின்னால் நின்று எழுத வேண்டுமென்றோ ஒருபோதும் கருதியதில்லை. கருத்துருவாக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியை, நாங்கள் கையாண்டிருக்கிறோம் என்றாலும், எந்தவொரு கலை வடிவமும் இறுதியில், உறுதியான முடிவை முன் வைத்து நிறைவு கொள்வதில்லை என்றே கருதுகிறேன். எப்போதும் பல்வேறு ஊகங்களுக்கு இடமளித்தே ஒவ்வொரு திரைப்படமும் நிறைவுகொள்கிறது.

தனிப்பட்ட வகையில், இந்த திரைப்பட உருவாக்கத்தில் எது மிகுந்த கடினத்தன்மைமிக்க பணியாக இருந்தது. திரைக்கதை எழுதுவதா? அல்லது முன் அனுபவமில்லாத நடிகர்களுடன் இணைந்து வேலை செய்வதா? அல்லது படத்தின் இறுதியில் வருகின்ற அந்த ஒற்றைய நீண்ட நெடிய காட்சிப்பதிவா?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், திரைக்கதை எழுத்துதான் கோர்ட் திரைப்பட உருவாக்கத்தில் அதிகச் சிக்கல் மிகுந்த பணியாக இருந்தது. எழுதுவது என்பதுதான் இந்த பிரபஞ்சத்திலேயே தனிமையில் மேற்கொள்ளக் கூடிய ஒரேயொரு பணி. அது சமயங்களில் என்னை துன்புறுத்தியிருக்கிறது. படப்பிடிப்பை துவங்கியதற்கு பிறகு, நூற்றுக்கணக்கான மனிதர்கள் நம்மை சூழ்ந்திருப்பார்கள். ஆனால் எழுதும் போது, அதிலும் எளிதில் மற்றவர்களிடம் தெளிவுற பகிர்ந்து கொள்ளவியலாத ஒன்றை எழுதும் போதும் அது உண்மையிலேயே மிகுந்த மனவேதனையை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அது பலமுறை எனக்குள் தனிமையுணர்வை மேலெழுப்பியிருக்கிறது. சமயங்களில், இனி ஒருபோதும் இந்த பணியை செய்யப் போவதில்லை என்றெல்லாம் எனக்குள்ளாக நான் சத்தியம் செய்திருக்கிறேன்.

நீங்கள் உங்களை முக்கியத்துவம் வாய்ந்த திரையுலக படைப்பாளியாக கருதுகிறீர்களா? அதாவது, சமூகத்திற்கு எது தேவையாய் இருக்கிறதோ அதற்கு முன்னுரிமை அளிப்பவராகவும், அறிவுபூர்வமான படைப்புகளுக்கு போதிய கவனம் வழங்காதவராகவும் கருதுகிறீர்களா?

அத்தகைய விதிகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஒவ்வொரு முறையும் எனக்குள்ளாகவே என்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அதனால், எனக்கு எது செய்ய வேண்டும் என தோன்றுகிறதோ அதனை பின்தொடர்ந்து செல்வேன். இப்படிதான் செயல்பட வேண்டுமென்கின்ற வரையறுக்கப்பட்ட பாணிகளில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. 

ஆனந்த் காந்தி பல தருணங்களில் உங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். ஷிப் ஆஃப் தீசிஸ் திரைப்படத்தில் ஆனந்த் காந்தியுடன் பணியாற்றிய வினையும், குஷ்பு ரங்காவும் தங்களது ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் நண்பர்களாக இருக்கிறீர்கள். அதோடு உங்களது படைப்புகளும் வெகுவான கவனிப்பும் அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. திரைத்துறையின் மூலமாக, ஒருவித விழிப்புணர்வை இந்திய மக்களிடத்தில் உருவாக்க முடியுமென்று கருதுகிறீர்களா?

ஆமாம். நாங்கள் எல்லோரும் நெருக்கமான நண்பர்கள். அதோடு ஆனந்த் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு ஆதரவு அளித்திருக்கிறார். மாற்றத்தை குறித்து பேசுகையில், நாங்கள் அப்படியான பொது மக்களின் விழிப்புணர்வில் ஒரு தூண்டுதலை உண்டாக்க வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. அல்லது குறிப்பிட்ட ஏதேனுமொரு ஸ்தாபனத்தின் முகவராகவும் இருக்க விரும்பவில்லை. ஆனால், நான் எதிர்பார்ப்பது என்னவெனில், புதிது புதிதான இளைஞர்கள் திரைத்துறையில் பல நல்ல மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்யமான போக்கை உருவாக்க வேண்டும். பரீட்சார்த்த முயற்சிகளுக்கான சாத்தியங்கள் உருவாக வேண்டும். பல புதியவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த வேண்டும். மைய நீரோட்ட சினிமா எனும் கருத்தாக்கம் எப்போதும் எதிர்மறை அர்த்தத்திலேயே பொருள் கொள்ளப்படும் நிலை மாற வேண்டும். திரைப்பட படைப்பாக்கத்தின் பல்வேறு நிலைகளிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும். ஒவ்வொருவரும் பிரத்யேக பாணியிலான திரையாக்கங்களை உருவாக்க வேண்டும்.

இதுவரையில் பெற்றிருக்கும் அங்கீகாரத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஏன் ஒருவர் கோர்ட் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு காரணத்தை முன்வையுங்கள்?

இந்த கேள்விக்கு நான் அளிக்கக் கூடிய மிக எளிமையான பதில் என்னவென்றால், இந்தத் திரைப்படம் மிகவும் கேளிக்கைமிக்கது. நீங்கள் நன்றாக சிரிக்க வேண்டுமென விரும்பினால், நிச்சயமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.           

தமிழில்: ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT