எனக்கு 'டயட்' என்ற சொல்லே பிடிக்காது! நடிகை சரண்யா பொன்வண்ணன் பேட்டி!

ல்லோருக்கும் தாய்தான் எல்லாம் என்றாலும், எனக்கு ஒரு படி மேல் என்று தான் கூற வேண்டும்.
எனக்கு 'டயட்' என்ற சொல்லே பிடிக்காது! நடிகை சரண்யா பொன்வண்ணன் பேட்டி!


அழகான அம்மா நடிகை. தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் நடித்து பாராட்டுப் பெற்றவர். தனக்கு 'பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்  

இடம்: என்றுமே எனக்கு என் வீடு தான் மிகவும் பிடிக்கும் என்றாலும், அமைதியான சூழ்நிலையில், தென்றல் ஜில் என்று தாலாட்ட, மரங்கள் அடர்ந்த சாலை, மலைகள் சூழ்ந்துள்ள இடம், இவை எல்லாமே கிடைக்கும் கொடைக்கானலில். இப்படிப்பட்ட இடத்தில் சில நாட்களாவது தங்கலாம் என்று விருப்பம். முதலில் வீடே வாங்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நமக்கு இங்கு இருக்கும் பொறுப்புகளும் அதிகம். வேலைப் பளுவும் அதிகம். அதனால் வீடு வாங்கும் எண்ணத்தை மறந்துவிட்டு சில நாட்கள் அங்குத் தங்கி வர நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

தாய்: எல்லோருக்கும் தாய்தான் எல்லாம் என்றாலும், எனக்கு ஒரு படி மேல் என்று தான் கூற வேண்டும். என் தாய்க்கு தெரியாததே  இல்லை என்றும் கூறும் அளவிற்கு வீட்டைச் சிறப்பாக கவனித்துக் கொள்வார். அவர் தையற்கலையில் வல்லவர். பல்வேறு மொழிகள் பேசுவார். தன் குடும்பத்தை கண்கள் இமை காப்பது போல் காத்து வந்தவர். இவை எல்லாவற்றையும் விட அன்புக்கு என்றுமே பஞ்சம் வைக்காதவர்.

உணவு: எனக்கு 'டயட்' என்ற சொல்லே பிடிக்காது. வாய்க்கு ருசியாகச் சாப்பிடாமல் என்ன வாழ்க்கை இது என்று நினைப்பேன். என்னைப் பொருத்தவரை சைவம், அசைவம் என்று பாகுபாடில்லாமல் பசிக்கும் போதெல்லாம் நான் சாப்பிடுவேன். இந்த வாக்கியத்தைக் கவனிக்கவும். பசிக்கும் போதெல்லாம் என்றுதான் கூறினேனே தவிர பிடிக்கும் போதெல்லாம் என்று கூறவில்லை.ஆக பசித்தால் சாப்பிடு என்று தான் நாம் பொருள் கொள்ளவேண்டும். 

என் பள்ளி: DSOFT பள்ளி நான் ஆரம்பித்து நடத்தி வருவது, சுமார் 4 ஆண்டுகளாக. DSOFT என்பதன் விரிவு என்ன தெரியுமா? Designing & School of Fashion Technology. இந்தப் பள்ளியில் தற்போது சுமார் 150 மாணவியர் படிக்கிறார்கள். 6 மாத வகுப்புகள். வேலை இல்லாத பலர் எங்கள் பள்ளியில் படித்துப் பணியாற்றி வருகிறார்கள். 

வெளிநாடு: எனக்கு ஒவ்வொரு நாடும் ஒரு சில விஷயத்தில் பிடிக்கும். உதாரணமாக துபாய், பொருள் வாங்க. காரணம் அங்குதான் பொருள் வாங்கும் திருவிழாவே ஒவ்வொரு வருடமும் நடக்கிறதல்லவா? இயற்கை எழிலுக்கு என்றால் பல்வேறு நாடுகளைச் சொல்லலாம். அதில் மனதிற்கு ரம்மியமானதாகவும், இதமான குளிர், மரங்கள் அடர்ந்த சாலை, எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்று இருக்கும் காட்சி. இப்படி எல்லாமே இருக்கும் இடம் சுவிட்சர்லாந்து.  ’டென்மார்க்' என்றால் பால் சம்பந்தப்பட்ட பொருளை வகைவகையாக வாங்கலாம். இப்படி ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் சொல்லிக்கொண்டே போகலாம். 

திட்டமிடல்: நான் எதையுமே திட்டமிட்டு செய்ய விரும்புவேன். காலையில் 5 மணிக்கே எழுந்து விடுவேன். இரவு 10 மணிக்கு மேல் எந்த ராஜா எந்தப் பட்டணத்தை பிடிக்கக் கூப்பிட்டாலும் NO தான். இரவு படப்பிடிப்பு என்றால் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். அதே போல் விழாக்கள் என்றாலும் கிடையாதுதான். இதற்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு என் வேலைகளை நான் வைத்துக் கொள்வேன். நான் புத்துணர்ச்சியுடன்  இருந்தால்தான் முகம் கேமராவில் பளிச்சென தெரியும். அதே போல் வெளியூர், வெளிநாடு என்றால் அதற்கேற்றாற் போல் என்னை நான் மாற்றிக் கொண்டு தூங்கி எழுந்து விடுவேன். 

சுத்தம்: நாம் என்றுமே சுத்தமாக இருக்கவேண்டும்.  வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நாம் நுழையும் போது கால் கைகளை அலம்பிவிட்டு வீட்டிற்குள் செல்லவேண்டும். அதே போன்று எந்த வேலை செய்தாலும் நாம் செய்த வேலை முடிந்தவுடன் அறையைப் பெருக்கி விட்டுச் சுத்தமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். 

குடும்பம்: நான் கொடுத்து வைத்தவள் என்று தான் கூறவேண்டும். என் கணவர் வீட்டு  விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அதே சமயம் இரு குழந்தைகள் மீது அலாதியான பாசம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது என்றால் அவர்தான் முதலில் வந்து நிற்பார். என் மகள் பிரியாதர்சினி, சாந்தினி இருவரும் இன்று மருத்துவத்துறையில் பயின்று வருகிறார்கள். குடும்பத்திற்காகவே நானும் என் கணவரும் பல்வேறு வகையான தியாகங்களை எங்களால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே எனக்கு எல்லாம் என்று முடிவுடன் இருக்கிறேன். 

தேசிய விருது: சிறந்த நடிகைக்கான தேசிய விருது எப்பொழுதுமே கதாநாயகிகளுக்கு தான் கிடைக்கும். 2010 ஆண்டு வெளிவந்த  ’தென்மேற்கு பருவக்காற்று' என்ற படத்தில்  நடித்ததற்காக எனக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது என்று செய்தி வந்தவுடன்,  நான் முதலில் இதை நம்ப மறுத்தேன். காரணம், அதில் நான் ஒரு குணசித்திர வேடம் ஏற்று நடித்திருந்தேன். புது டில்லி சென்றப் பிறகுதான் அங்கு பலருடன் நான் பேச, அவர்கள் கூறியது என்ன தெரியுமா? நல்ல நடிப்பு எங்கு இருந்தாலும் நாங்கள் விருது கொடுப்போம் என்பதுதான். உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று இதைக் கூறலாம்.  

பொழுது போக்கு:  பொழுதை போக்குவதற்கு  நேரம் கிடைப்பதில்லை. அன்று எனக்கும் என் குழந்தைகளுக்கும் துணி எடுத்து நானே டிசைன் செய்து தைப்பது என்று பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன். அப்படி இல்லாவிட்டால் இளையராஜா பாடல்கள் கேட்பது என்று இருப்பேன். இன்று நான் டிசைன் செய்வது என் மாணவர்களுக்காக என்று மாறியப் பிறகு நேரமின்மை அதிகமாகிவிட்டது. என் ஒரு கண் நடிப்பு, மற்றொரு கண் DSOFT.  இதற்கே எனக்கு நேரம் போதவில்லை. பொழுது இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று இன்று தோன்றுகிறது.  

- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com