ஸ்பெஷல்

சாண் ஏறினால் முழம் சறுக்கும் தமிழ் சினிமா!

சுரேஷ் கண்ணன்

ஒரு அடி முன் நகர்ந்தவுடனேயே பல அடிகள் பின் சறுக்கும் போக்கு தமிழ் சினிமாவில் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மெல்ல ஒரு மாற்றம் மலரத் துவங்கும்போது ஒரு பெருமுதலீட்டுத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அந்த மாற்றத்தை ஓர் அலை போல அடித்துவிட்டுச் செல்கிறது. பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் மூலம் எண்பதுகளில் உருவாகிய மாற்றத்தை ‘சகலகலாவல்லவன்’ போன்ற அப்பட்டமான வணிகத் திரைப்படங்கள் துடைத்து அழித்தன.

புதிய தலைமுறை இயக்குநர்கள் நுழைந்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சமகாலத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. மாற்றத்தை உருவாக்கும் இளம் தலைமுறையினரே இந்த வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பது கசப்பான முரண். குறும்பட உலகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு முதலாவதாக வந்த பாலாஜி மோகன், ‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்கிற குறிப்பிடத்தக்க ரொமாண்டிக் காமெடி படத்தை உருவாக்கினார். ஆனால் அவரே பிற்பாடு மாரி 1, 2 என்று ‘மாறி’ப் போனார்.

அதே கதைதான் கார்த்திக் சுப்புராஜ் என்கிற இளம் இயக்குநருக்கும். ‘பீட்சா’ என்கிற குறிப்பிடத்தகுந்த திரில்லர் திரைப்படத்தில் துவங்கிய அவரது பயணம், ‘பேட்ட’ என்னும் வணிகப்படத்தில் வந்து நின்றிருக்கிறது.

*

மெல்ல மலர்ந்து வரும் மாற்றத்தை, பெருமுதலீட்டுத் திரைப்படங்கள் எப்படி ஒரே கணத்தில் இடித்துத் தள்ளுகின்றன என்பதற்கு சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்களே நல்ல உதாரணம்.

இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னால், ‘இவற்றில் எந்த திரைப்படத்தை முதலில் பார்ப்பீர்கள்?’ என்று பார்வையாளர்களைத் தேர்வு செய்யச் சொன்ன வாக்கெடுப்புகளைச் சமூகவலைத்தளங்களில் பார்த்தேன். வேடிக்கையான வாக்கெடுப்பாக இருந்தாலும் சமகால ரசிகர்களின் மனோநிலையையும் எதிர்பார்ப்பையும் அதில் கண்டுகொள்ள முடிந்தது. ஏறத்தாழ 70 சதவீதம் பேர் ‘பேட்ட’ திரைப்படத்தையே முதலில் பார்ப்பேன் என்பதாகத் தெரிவித்திருந்தனர். எளிதில் யூகித்திருக்கக்கூடிய முடிவுதான்.

தனக்குப் பின்னால் பல வருடங்கள் கழித்து நடிக்க வந்த அஜித்துடன் இன்றும் போட்டி போடுமளவிற்கு ரஜினியின் வசீகரமும் வணிகச்சந்தையும் தொடர்ந்து இருப்பது ஆச்சரியமான சாதனைதான். அதுவே இந்த வாக்கெடுப்பின் முடிவில் தெரிந்தாலும் அதையும் தாண்டி சில காரணங்கள் இருக்கின்றன.

‘பேட்ட’ திரைப்படத்தை முதலில் பார்ப்பேன் என்று ரசிகர்கள் தெரிவித்ததற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

‘இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவது போன்ற எரிச்சலூட்டும் விஷயங்களை விட்டு விட்டு தன் வயதுக்கேற்ற திரைப்படங்களில் நல்ல கதையைக் கொண்ட திரைப்படங்களில் ரஜினி நடிக்க வேண்டும்’ என்கிற பொதுவான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கிடையே கூட இருந்தது. ‘லிங்கா’ போன்ற தேய்வழக்கு மசாலா திரைப்படங்களின் தோல்விக்கு அதுவே காரணம். குறிப்பாக அமிதாப் பச்சனை முன்னுதாரணமாகக் கொண்டு நல்ல கதையம்சமுள்ள, வயதிற்குப் பொருத்தமான மாற்றுத் திரைப்படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நியாயமானதும் கூட. (தன்னுடைய துவக்க கால சினிமாப் பயணத்தில் அமிதாப் பச்சனின் பாணியையே ரஜினி தமிழில் பின்பற்றினார் என்பதையும் நினைவுகூரலாம்).

பார்வையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை ரஜினியும் உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. எனவே வழக்கமான இயக்குநர்களை விட்டு விலகி இளம் இயக்குநரான பா.இரஞ்சித்தைத் தேர்ந்தெடுத்தார். ‘கபாலி’ உருவாகியது. வயதான ‘டானாக’ ரஜினி நடித்தார். அவர் ‘நடிப்பதற்கான’ சந்தர்ப்பங்களும் அந்தத் திரைப்படத்தில் இருந்தன. அதேசமயத்தில் வணிக சினிமாவிற்கு உண்டான அம்சங்களும் அதில் இருந்தன. சமன் செய்யக்கூடிய இந்தக் கலவையை இரஞ்சித் சிறப்பாகவே உருவாக்கியிருந்தார். ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி பொதுவான பார்வையாளர்களும் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள். படம் வெற்றியடைந்தது. 

எனவே இதே கூட்டணியை அடுத்தத் திரைப்படத்திலும் தொடர முடிவு செய்தார் ரஜினி. ‘காலா’ உருவாகியது. ஆனால் கபாலி அளவிற்கு இது வரவேற்பை அடையவில்லை. இந்த இரண்டு திரைப்படங்களிலும் பேசப்பட்ட ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் சிலருக்கு ஒவ்வாமையாக இருந்ததோ என்னவோ. ‘தலைவர்.. பழைய மாதிரியே நடிச்சா நல்லாயிருக்கும்’ என்கிற மனோபாவம் ரசிகர்களிடையே பெருகத் துவங்கியது.

இந்த நிலையில்தான் இளம் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட’ திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வந்தது. தீவிர ரஜினி ரசிகரான கார்த்திக், ‘இதுவொரு rajinified திரைப்படமாக இருக்கும்’ என்று தெரிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான பார்வையாளர்களும் உற்சாகமடைந்தனர். தந்த வாக்குறுதியின்படியே ‘பேட்ட’யை உருவாக்கினார் கார்த்திக். ரஜினியின் அதுவரையிலான பாணியை ஒரு பறவைப் பார்வையில் வேகமாக திரும்பிப் பார்த்தது போல் இருந்தது ‘பேட்ட’. ரஜினியின் பழைய தோரணைகள் பொருத்தமான இடங்களில் ஆங்காங்கே சிறப்பாக தூவப்பட்டன. முதல் பாதியில் வேகமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பகுதியில் எங்கெங்கோ அலைபாய்ந்து எங்கோ இடித்துக்கொண்டு சட்டென்று நின்றது.

*

கார்த்திக் சுப்புராஜ் இளம் இயக்குநர்களிடையே ஒரு நல்ல வரவாக கணிக்கப்படுகிறார். மணி ரத்னமே இவரைப் பாராட்டுமளவிற்கு இவரது படங்களில் திரைக்கதை உருவாக்கம் சிறப்பாக இருந்தது. இவரின் ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு வகைமைகளைக் கொண்டிருந்தது. எனவே இதுபோன்ற அடையாளத்துடன் இருக்கும் இயக்குநர், ரஜினியுடன் கூட்டணி அமைக்கும்போது அதுவொரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எஸ்.பி. முத்துராமன் வகையறா உருவாக்கும் அப்பட்டமான மசாலா சினிமாவாகவும் இல்லாமல், கார்த்திக்கின் தனித்தன்மையுடனும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக ‘பேட்ட’ அமைந்தது துரதிர்ஷ்டமானது. என்றாலும் இதையும் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அப்பாடா! இரஞ்சித்திடமிருந்து தப்பி வந்த ரஜினியைக் காண்பதற்கு உற்சாகமாக இருக்கிறது’ என்று மகிழ்கிறார்கள். முன்னகர்ந்த ரஜினியை, பின்னுக்கிழுத்து ஒரு ‘rajinified’ படம் உருவாக்கப்பட்டது, ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம். இயக்குநருக்கும் தமிழ் சினிமாவிற்கும் அதுவொரு பின்னடைவுதான். தேய்வழக்கு மசாலா பாணியை ரஜினி தொடர்ந்து கையாள்வதற்குச் சலிப்பை வெளிப்படுத்தியவர்களே, ஒரு இடைவெளிக்குப் பின் அதை மீண்டும் வரவேற்பது கசப்பான நகைமுரண்.

இரஞ்சித்தின் மூலம் ரஜினியின் பாணி சரியாகவே முன் நகர்ந்து சென்றது. ‘ரெட் சிப்’ பொருத்தப்பட்ட ரோபோ, தான் செய்த அட்டூழியங்களை உணர்ந்து தன் பாகங்களைத் தானே கழற்றிக் கொண்டதைப் போல (எந்திரன்), தன் திரைப்படங்களின் வணிக அம்சங்களை ஒவ்வொன்றாக அகற்றி, சமகால அமிதாப் பச்சனை முன்னுதாரணமாகக் கொண்டு மாற்று முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே ரஜினியின் சிறந்த எதிர்கால தேர்வாக இருக்கக்கூடும்.

அவரது வணிகச்சந்தை இன்னமும் சிறப்பாக இருக்கும்போது அவர் ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற கேள்வி ஒருபக்கம் நியாயமானதுதான். ‘நீங்கள் நடித்த திரைப்படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?” என்ற கேள்வி ரஜினியிடம் ஒருமுறை கேட்கப்பட்டபோது ‘முள்ளும் மலரும்’ என்று நேர்மையாகப் பதில் சொன்னார் ரஜினி. தன் இதுவரையிலான திரைப்பயணத்தில் எத்தனையோ வணிக வெற்றிகளை அவர் பார்த்து விட்டார். இனி மீதமுள்ள காலக்கட்டத்தில் அவருடைய மனதிற்கும் வித்தியாசமான ரஜினியை காண விரும்பும் பொதுவான பார்வையாளர்களுக்கும் திருப்தி தரக்கூடிய ‘முள்ளும் மலரும்’ மாதிரியான சிறந்த முயற்சிகளை அவருடைய வரலாற்றுப் பக்கங்களில் இணைப்பது சிறந்த முன்னகர்வாக இருக்கும்.

‘வரும்.. ஆனா வராது...’ என்கிற நகைச்சுவைக்கு ஏற்ப, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ‘அரசியல் வருகை’ என்கிற அவல நகைச்சுவை நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வருங்கால ரசிகர்களும் நினைவுகூரக்கூடிய நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களில் அவர் தன்னை ஒப்படைத்துக்கொள்வது சிறந்தது என்று தோன்றுகிறது.


இப்போது அஜித். 

‘விஸ்வாசம்’ திரைப்படத்தை முதலில் பார்ப்பேன் என்று முப்பது சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்தற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. சிவா + அஜித் கூட்டணியில் வெளியாகும் நான்காவது திரைப்படம் ‘விஸ்வாசம்’. அஜித்தின் கடைசி மூன்று படங்களையும் இயக்கியிருப்பவர் சிவாதான். எனவே இதுகுறித்தான சலிப்பும் எரிச்சலும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான பார்வையாளர்களிடையேயும் இருந்தன. இதற்கு முந்தைய திரைப்படமான ‘விவேகத்தை’ அஜித் ரசிகர்கள் வீம்பாகக் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை.

உண்மையில் ‘விவேகம்’ நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு வெகுஜன சாகசத் திரைப்படம். நவீன ஆயுதங்கள் மற்றும் கணினி மாய்மாலங்கள், சர்வதேசப் பின்னணி என்று ஒரு ‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்படத்திற்கான அம்சங்கள் அதில் நிறையவே இருந்தன. ஹாலிவுட் பாணியைப் போல நேர்மையாக முயற்சித்திருந்தால் ‘தமிழில் ஓர் ஆங்கிலப்படம்’ என்கிற பாவனையான விளம்பர வரி உண்மையாகவே சாத்தியமாயிருந்திருக்கலாம். ஆனால் இயக்குநர் சராசரி ரசிகர்களின் மனோபாவத்தையும் மனதில் இருத்தி, பொருந்தாத சென்டிமென்ட் காட்சிகளை இணைத்ததால் படம் அபத்த நகைச்சுவையாகி விட்டது. வில்லன்கள் ஆவேசமாக துரத்தி வரும் பைக் சேஸிங் காட்சியில், ஒரு நல்ல சேதியை கேட்ட மகிழ்ச்சியில், நாயகன் நிறுத்தி நிதானமாகச் சாமி கும்பிட்டுக் கிளம்புவது, நாயகனும் வில்லனும் ஆவேசமாகச் சண்டை போடும்போது அவர்களை விடவும் ஆவேசமாக நாயகி பாட்டு பாடுவது போன்ற நகைச்சுவைகள் இத்திரைப்படத்தின் தீவிரத்தன்மையைச் சீர்குலைத்தன. இதையொட்டி இயக்குநரின் மீது நிறைய கசப்புகளும் விமரிசனங்களும் பார்வையாளர்களிடமிருந்து எழுந்தன.

என்றாலும் அடுத்தத் திரைப்படத்திற்கான இயக்குநர் பொறுப்பை சிவாவிடமே ஒப்படைத்தார் அஜித். ‘விவேகத்தின்’ மீதான விமரிசனங்கள், இயக்குநருக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கவேண்டும். எனவே வீரம், வேதாளத்தைப் போன்று ஆக்ஷன் + சென்ட்டிமென்ட் கலவையை வைத்து மறுபடியும் உள்ளூர் பாணியில் ‘விஸ்வாசத்தை’ உருவாக்கியிருக்கிறார்.

‘முதலில் பார்க்க விருப்பம்’ வாக்களிப்பில் பின்தங்கியிருந்தாலும் இத்திரைப்படமும் ‘பேட்ட’ திரைப்படத்திற்கு நிகரான வணிக வெற்றியைப் பெற்று வருகிறது. ‘குடும்ப சென்ட்டிமென்ட்’ என்னும் நோக்கில் ரசிகர்களைத் தாண்டி பொதுமக்களும் திரளாக வருவதாகச் சொல்கிறார்கள். ‘பேட்ட’யில் முதல் பாதியும் ‘விஸ்வாசத்தில்’ பின்பகுதியும் நன்றாக இருந்தன, இரண்டையும் சேர்த்து ஒரு திரைப்படமாக உருவாக்கியிருந்தால் அற்புதமாக இருக்கும்’ என்றொரு கருத்தை முன்வைக்கிறார் ஒரு வெகுஜன ரசிகர்!

இதனிடையே, இரு படங்களின் வசூல் விவரங்களை வைத்து இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களும் அடித்துக் கொள்கிறார்கள். நான் படிக்கும் காலத்தில் எட்டாம் வகுப்பிலேயே நிறுத்தி விட்ட இதுபோன்ற சண்டைகளை, ‘வளர்ந்த குழந்தைகள்’ இன்னமும் தொடர்வது நகைப்புக்குரியது. ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம்தான் ஒரு ரசிகனுக்கு முக்கியம். வசூல் பற்றிய விவரங்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் படவேண்டிய கவலை.

ஹாலிவுட் திரைப்படங்களைப் போன்று இங்கும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணியை அஜித் உருவாக்க விரும்பியது ஒருவகையில் சரியான முன்னகர்வே. ஆனால் அதில் நிகழ்ந்த கோளாறுகள் பின்னடைவைச் சந்திக்கவே, மறுபடியும் ‘பாசமலர்’ போன்ற பழைய உணர்ச்சிக் காவியங்களிடம் இயக்குநரும் நடிகரும் சரணடைய வேண்டியிருக்கிறது. இந்த நோக்கில் ரஜினிக்கு நேர்ந்த அதே விபத்து அஜித்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்தச் சூழலுக்கு இயக்குநர்களை விடவும் மக்களின் ரசனையையே பிரதானமான காரணமாக சுட்ட முடியும். ஒரு வணிகச்சந்தையின் போக்கை வாடிக்கையாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். சரியான மாற்று முயற்சிகளையும் தரமான வெகுஜன சினிமாக்களையும் மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆதரித்தால் தேய்வழக்குப் பாணி வணிகத் திரைப்படங்கள் மெல்ல ஒழிந்து போகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT