"ரஜினியைப் பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்!'னு  சொல்லி பிரம்மிச்சு போய்ட்டார்": பாலசந்தர் நினைவலைகள்

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 89-ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி நமது 'சினிமா எக்ஸ்பிரஸ்' பழைய இதழ்களில் வெளிவந்த பாலசந்தர் தொடர்பான செய்திகளில் இருந்து ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு இங்கே.
"ரஜினியைப் பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்!'னு  சொல்லி பிரம்மிச்சு போய்ட்டார்": பாலசந்தர் நினைவலைகள்

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தரின் 89-ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி நமது 'சினிமா எக்ஸ்பிரஸ்' பழைய இதழ்களில் வெளிவந்த பாலசந்தர் தொடர்பான செய்திகளில் இருந்து ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு இங்கே..!

என் அறிமுகங்கள்: ரஜினிகாந்த் குறித்து கே. பாலசந்தர்

ரஜினிகாந்த்கிட்ட எனக்கு முதல்ல  பிடிச்சது அவரோட ஸ்பீட். தன்னம்பிக்கையோட கூடிய ஒரு அலட்சியம். 'கலாகேந்திரா' ஆபிஸ்ல இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ குரூப் குரூப்பா வரவழைச்சு பார்த்தப்பவே ரஜினிகிட்ட ஒரு ஸ்பார்க் தெரிஞ்சது. எனக்கு ரஜினி எங்கயோ  போகப் போறார்னு மனசுல தெரிஞ்சு போச்சு.

இந்த ரோல் (அபூர்வ ராகங்கள்) உன்னோட கெபாசிட்டிக்கு நான் தந்த ரோல்னு நினைச்சுக்காத. உனக்குன்னு ஒன்னு வச்சிருக்கேன். அதுக்கு முன்னால உன்ன நானும், என்ன நீயும் நல்லா தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தனும்கிறதுக்காகத்தான் இந்த சின்ன ரோல் இப்ப தந்திருக்கேன்னு அப்பவே ரஜினிகிட்ட நான் சொன்னேன். ரஜினிக்காக நான் யோசிச்சு வைச்சிருந்த ரோல் 'மூன்று முடிச்சு'.

ஹிந்தி நடிகர் ராஜ்குமாருக்கு 'அபூர்வ ரகங்கள்' படத்தை போட்டுக் காட்டினப்ப,  படத்துல ரஜினியை பார்த்துட்டு , 'ஹூ ஈஸ் திஸ் பாய்? வெரி ஸ்மார்ட்! சொல்லிட்டு அப்படியே பிரம்மிச்சு போய்ட்டார் ராஜ்குமார். ரொம்ப சின்ன ரோல்லயே தன்னைப் பத்தி பேச வச்ச ரஜினியை, சரியான நேரத்துல திசை திருப்பி, ஹீரோவாக்கின பெருமை எஸ்.பி. முத்துராமனையே சாரும்.

பேட்டி: பிரசன்னா

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.82 இதழ்)

&&&&&

இவர்களைப் பற்றி: கே.பாலசந்தர்  பற்றி நடிகை ஸ்ரீவித்யா

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்ததெல்லாம் சுவையான அனுபவங்கள்.'நூற்றுக்கு நூறு' தான் என் முதல் படம் அவருடன்.

அதில் எனக்கு வித்தியாசமான ரோல். பொதுவாவே எனக்கு படத்தில் டூயட் பாடுவது பிடிக்காது. அவையெல்லாம் எனக்குத் தேவையில்லை என்றே சொல்வேன். சொல்கிறேன்.

அந்தப் படத்தில் எனக்கு கதாநாயகி வேடம் இல்லை. ஒருமாதிரியான வில்லி வேடம்தான். பாலசந்தர் படத்தில் நடிக்க ஆரம்பித்ததும்தான் பலவிஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

அதற்கு முன்பு வரை படங்களில் டையலாக் என்றால் அது டையலாக் போலவே இருக்கும். இன்னதுதான்..இப்படித்தான் பேசணும் என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டுதான் எழுதுவார்கள்.

அந்த ட்ரெண்டை மாற்றினார் பாலசந்தர். இயல்பாய், யதார்த்தமாய், சர்வ சாதாரணமாய் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது அவர்தான்.          

அது போல நடிப்பிலயும் 'கேமராவைப் பார்க்காம நடி; கேமராங்கறது நம் சவுகரியத்துக்குத்தான். அதைக்கண்டு பயப்படவே கூடாது. கேமரான்னு ஒன்னு இருக்கறதா நினைக்காம நடி.என்பார்.

புது ஆர்ட்டிஸ்ட்,பழைய ஆர்ட்டிஸ்ட், பெரிய, சிறிய ஆர்ட்டிஸ்ட் என்கிற பேதமே அவர் பார்த்ததில்லை.

யாராக இருந்தாலும் சரியா வந்தா சரி.   இல்லேன்னா சரியா வர வைப்பார். எல்லோரையுமே ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவார். ஆர்டிஸ்ட்டுக்கு பந்தாவெல்லாம் கூடாது அப்டிங்குறத வலியுறுத்தி வற்புறத்துனதுல அவருக்கு முதலிடம் உண்டு. எந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையை பதிப்பார். பாலசந்தரோட பல படங்களில் நடிச்சிருந்தாலும் நான் அவரோட பேசினது கொஞ்சம்தான்.

சினிமாவில் ஒவ்வொரு நாள் நடிக்கிறதுக்கு ஒரு அனுபவம். தினமும் புதிது புதிதாய் ஏதாவது கத்துக் கொண்டிருக்கேன்.      

பாலசந்தரின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதுவரை எனக்கு மேக்கப்பில் எந்த நுணுக்கம், அவசியம் எதுவும் தெரியாது. கண் ஐப்ரோ எப்படி எழுதுவது என்று கூட  தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்படி என்று பாலசந்தர்கிட்ட போய் கேட்டேன். 

இதையெல்லாமா போய் அவரிடம் கேட்பார்கள் ..என்று மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.     ஆனால் பாலசந்தர் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ஒரு குடும்பத்துப்பெண், எப்போதும் பிசி, குடும்ப வேலை, பலவிதமான பொறுப்புகளுக்கு இடையே அவளுக்கு அலங்கரிக்க  முடியாத நிலை. இந்த ரோலுக்கு எப்படி மேக்கப் இருக்க வேண்டும் என்று அவர்தான் சொல்லித்தந்தார்.   

பேட்டி: பிரசன்னா

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.06.84 இதழ்) 

&&&&&

இவர்களைப் பற்றி: பாலச்சந்தர் குறித்து சரிதா

நான் ஒரு ஏ .கே.எம் அல்லது அ.கெ .மு. புரியலையா? அறிவு கெட்ட முட்டாள். பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார் .அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த யூனிட்டை பொறுத்த வரைக்கும் நான் எல்லாருக்கும் ஒரு குழந்தை. எனக்கு இருக்குற இன்னொரு பேர் 'சிசு'. அந்த பேர்லயும் என்னைக் கூப்பிடுவாங்க.

யூ  நோ ..ஐ  வாஸ் அ க்ளே .வெறும் களிமண். என்னை மெதுவா பக்குவமா 'மோல்ட்' பண்ணி ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் வாங்கித்  தந்தவர் பாலசந்தர். இதைச் சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.

பாலச்சந்தரோட ஒரு படத்துலயாவது நடிக்க மாட்டோமான்னு  ஏங்குற பல பேருக்கு மத்தியில. அவரோட பதினைஞ்சு படங்களில் நான் ஒர்க் பண்ணியி ருக்கேன். 

நடிப்புன்னா என்ன? அதனோட கன  பரிமாணங்கள் என்ன? இதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு  பாலச்சந்தர் யூனிவர்சிட்டிய விட உயர்ந்த இடம் வேற என்ன இருக்கு?

வித்தியாசமான சாலஞ்சிங் ரோல்களா  பாத்து ஒத்துக்கோ; ஒரு பட காரெக்டர் மாதிரி இன்னொன்னு இருக்க கூடாது.  எந்த ஆர்ட்டிஸ்டோட நடிப்பும் ஒன்னை இன்ஃப்ளுயென்ஸ் பண்ணிடாதபடி ஜாக்கிரதையா இருக்கணும். - இதெல்லாம் எனக்கு அவரோட சின்சியரான அட்வைஸ்

அவர் எங்கிட்ட சீனை சொல்லிட்டு, யோசிச்சு வெச்சுக்கோன்னு சொல்லிட்டு கொஞ்சம் டைம் கொடுப்பார். இப்படிப்  பண்ணலாமா , அப்படிச் செய்யலாமா என்று மனசுக்குள் நூறு முறை ரிகர்சல் நடத்திப் பார்த்துக் கொள்வேன். "என்ன,எப்படிப் பண்ணப் போற?" என்று அவர் என்னைக் கேட்கும் போது நாலைந்து விதமா செய்து காட்டுவேன். பளிச்சுன்னு ஒரு விதம் அவருக்குப் புடிச்சுப் போகும். அப்படியே செய் என்று சொல்லி சில மாற்றங்கள் செய்து காட்டுவார். அதை அப்படியே ரிபிட் பண்றப்ப பிரமாதமா அமைஞ்சுடும். இவ ஆர்டிஸ்டுதான , இவ சொல்லி நாம என்ன கேட்கிறது.. இந்த மாதிரி இன்ஹீபிஷென்ஸ் எதுவும் இல்லாம இருக்கறது அவரோட தனிச்சிறப்பு..

பேட்டி: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.84 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com