ஸ்பெஷல்

சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...

சரோஜினி

சினிமா நாஸ்டால்ஜியா!

சங்கராபரணம் திரைப்படத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் இப்போது ஃபேஷனாகி வரும் மியூசிக் ஷோக்கள் வாயிலாக அத்திரைப்படத்தில் பாடல்களையேனும் அறியாதவர்களென எவருமிருக்க வாய்ப்பில்லை. படத்தின் இயக்குனர் கே.விஸ்வநாத். தெலுங்குத் திரைப்பட உலகினரால் ‘கலாதபஸ்வி’ எனக் கொண்டாடப்படுபவர். இவர் எடுத்த திரைப்படங்கள் அத்தனையிலுமே நிச்சயமாக கலாப்பூர்வமான ரசனை அதிகம். தெலுங்கில் எடுக்கப் பட்ட இவரது திரைப்படங்கள் பின்னர் நிச்சயம் தமிழ் பேசவும் மறந்ததில்லை. அப்படி நமக்குக் கிடைத்தவையே சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்ளிட்ட திரைப்படங்கள். இவற்றில் சங்கராபரணம் திரைப்படத்தை எடுத்து முடித்து விட்டு அத்திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காண்பித்த போது அன்று அதை வாங்க ஒருவரும் முன் வரவில்லை. 

இயக்குனரின் சொந்த பெரியம்மாவின் மகனான பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் அத்திரைப்படத்தில் சோமையாஜூலுவின் மருமகனாக நடித்திருப்பார். அவரிடம் கூட கே. விஸ்வநாத், இந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உனக்குத் தருகிறேன். ஒன்றரை லட்ச ரூபாய் அளித்தால் போதும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், காசே பெரிது, தனக்கு சம்பளம் தராமல் தட்டிக் கழிக்கவே இயக்குனர் இப்படிக் கூறுகிறார் என்று நினைத்து ‘அதெல்லாம் முடியாது, என் நடிப்புக்கு சம்பளம் கொடுங்கள், அது போதும் என்று பிடிவாதம் செய்து அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டதாக சமீபத்தில் ‘அலிதோ சரதாக’ எனும் தெலுங்கு ஊடக நேர்காணல் ஒன்றில் நடிகர் சந்திரமோகன் தெரிவித்திருந்தார்.

அப்போது தனக்கு புத்தி இல்லாமல் போனதால் அந்தப் படத்தின் தமிழ்நாட்டு உரிமை தனக்கு கை மேல் பலனாக வந்த போது அதன் அருமை தெரியாமல் தான் அதை உதாசீனம் செய்து விட்டதாகவும்.

அதே படத்தை ஆச்சி மனோரமா மற்றும் மேஜர் சுந்தரராஜன் குழுவினருக்கு சென்னையில் ஆச்சிக்கு சொந்தமான தியேட்டரில் திரையிட்டுக் காட்டியபோது படத்தை நெக்குருகிப் போய் பார்த்த ஆச்சி படம் முடிந்தபின்னரும் கூட எழுந்து கொள்ளாமல் அழுது கொண்டே இருந்ததோடு... அந்தப் படத்தின் இயக்குனரான கே.விஸ்வநாத்தை அழைத்து, இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்த உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை. இந்தப் படத்தை யாருக்கு விற்றிருக்கிறீர்கள் என்று விசாரித்து... படத்தை வாங்க ஆளில்லை என்பதை அறிந்து அதிர்ந்து போய் ‘இந்தாங்க ஸ்பாட் பேமண்ட்... இந்தப் படத்தை வாங்க ஆளில்லையா! இதோ இப்போதே நான் வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறேன்’ என்று பட உரிமையை வாங்கி வெளியிட்டதாகவும்... வெறும் ஐந்தரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட படம் ஆச்சிக்கு முழுதாக ஐந்தரை கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்ததாகவும் சந்திரமோகன் தெரிவித்தார். 

சங்கராபரணம் திரைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதை திரைக்கு கொண்டு வர முடியாமல் தவித்த இயக்குனர் கே.விஸ்வநாத் படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே தனது முகத்தை சவரம் செய்து கொள்வதாக உத்தேசம் எனக்கூறி வேதகால முனிவர்களைப் போல நீளமான தாடி வைத்துக் கொண்டு அலைந்ததெல்லாம் அந்த நாள் ஞாபகங்கள் என உற்சாகமாக அந்த நினைவுகளை எல்லாம் சுவாரஸ்யமாக நடிகர் அலியுடன்  நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருந்தார் சந்திரமோகன்.

காலத்துக்கும் கொண்டாடப்பட்டு வரும் அனைத்து திரைப்படங்களின் பின்னணியிலும் இப்படிப் பலப்பல சுவாரஸ்யங்கள் ஒளிந்திருப்பது ஆச்சர்யம் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT