முதல்வர் ஜெயலலிதா

தமிழகம் தந்த கலை தாய்...!

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாய் வேதவல்லி. தனது இரு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியளித்து, அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வேதவல்லி சென்னைக்கு வந்தார்.
திரைப்படத்தில் நடிப்பதற்கேற்ற முகபாவம் கொண்ட வேதவல்லியை தங்களது படங்களில் நடிக்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டவுடன், முதலில் அவர் தயங்கினார். பின்னர், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், திரையுலகில் நடிகை சந்தியாவாக அறிமுகமானார். அவரை அறிமுகப்படுத்தியவர் கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் கெம்பராஜு.
 

10 வயதுச் சிறுமியாக...:

நாடகம், திரைப்படம் என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சந்தியா, எப்போதாவது ஜெயலலிதாவை படப்பிடிப்புக்குச் அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை எம்.ஜி.ஆர் நடித்த படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு 10 வயதுதான் இருக்கும். சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவைப் பார்த்து "உன் பெயர் என்ன' என்று எம்ஜிஆர் கேட்டதும், அதற்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார் ஜெயலலிதா. "ஏன் உனக்குத் தமிழ் தெரியாதா' என்று எம்.ஜி.ஆர் கேட்க, அதற்கும் ஆங்கிலத்திலேயே அவர் பதில் அளித்தார்.

சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர் அந்த இடத்தைக் கடந்து சென்றார். அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை... இந்தச் சிறுமியைத்தான் பின்னாளில் இதே ஆங்கிலப் புலமைக்காக மாநிலங்களவை உறுப்பினராக தில்லிக்கு அனுப்பப் போகிறோம் என்று...!

இதே ஆங்கில மொழிப் புலமைதான், ஜெயலலிதாவுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதற்கும் காரணமாக அமைந்தது.

முதல் நாடக வாய்ப்பு... சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படித்துக் கொண்டிருந்த போது, ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் கிடைக்காமல் இருந்தது. பின்னர், நண்பர்கள் மூலமாக ஜெயலலிதா குறித்து கேள்விப்பட்டு, சந்தியாவை அணுகினர். நாடகம் என்பதால் சந்தியாவும் சம்மதித்தார்.

ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் திறன் படைத்த ஜெயலலிதாவுக்கு, அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர்தான் பத்திரிகையாளர் சோ.
 

ஆங்கில படத்தில் அறிமுகம்...:

இதே காலகட்டத்தில்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியின் மகன் சங்கர் கிரி, தான் தயாரிக்கவிருந்த ஆங்கில ஆவணப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த வாய்ப்புக்கு ஜெயலலிதாவை, சங்கர் கிரியிடம் ஒய்.ஜி. பார்த்தசாரதியும், சோவும் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சங்கர் கிரி சற்றும் தாமதிக்காமல், உடனே சந்தியாவைச் சந்தித்து, ஜெயலலிதாவை தனது படத்தில் நடிக்கக் கேட்டுக் கொண்டார்.

ஆங்கிலப் பட வாய்ப்பு, அதுவும் குடியரசுத் தலைவரின் மகன் தயாரிக்கும் படம் என்பதால், தனது மகளுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் சந்தியா. படிப்புதான் முக்கியம் என்பதால், அதற்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் படப்பிடிப்பில் பங்கேற்றார் ஜெயலலிதா.

1961-ஆம் ஆண்டு எபிசில் (Epistle) ஆங்கிலப் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவை, அந்தக் கனவுலகம் முழுமையாக வசப்படுத்திக் கொண்டது. ஆனால், அந்த ஆங்கிலப் படம் அவருக்கு எந்தப் பாராட்டையும் பெற்றுத் தரவில்லை.

பின்னர், ஜெயலலிதாவின் முதல் இந்தியத் திரைப் படமாக அமைந்த படம் சின்னத கொம்பே. 1964-ஆம் ஆண்டு வெளியான கன்னட படம் இது. இந்தத் திரைப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பரவலான பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது.
 

தமிழில்...:

1965-ஆம் ஆண்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஜெயலலிதா. அதன் பிறகு, அவர் தெலுங்கு திரைப்படத்திலும் அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையை மெருகேற்றிக் கொண்டார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆயிரத்தில் ஒருவன், குமரிப் பெண், தாய்க்கு தலைமகன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, யார் நீ, பணக்காரப் பிள்ளை, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ரகசிய போலீஸ் 115, அடிமை பெண், என் அண்ணன், எங்க மாமா, நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், பட்டிக்காடா பட்டணமா, ராமன் தேடிய சீதை, நீதி, டாக்டர் பாபு, கங்கா கௌரி, அன்பைத் தேடி, இரு தெய்வங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ஜெயலலிதா வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடனும் ஜெயலலிதா நடித்தார்.

1968-ஆம் ஆண்டு தர்மேந்திரா நடித்த இஜத் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்தார்.

அரசியலில் நுழைவதற்கு முன்பாக, அவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவாக அமைந்தது 1980-ஆம் ஆண்டு வெளியான நதியைத் தேடி வந்த கடல் திரைப்படம்.

ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். நீங்க நல்லா இருக்கணும் என்ற தலைப்பிலான அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அந்தப் படம் 1992-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

எம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.


ஜெயலலிதா நடித்த மொத்த படங்கள் - 125

தமிழ்-86, தெலுங்கு -29, கன்னடம்-6,
மலையாளம் -1, ஹிந்தி-2, ஆங்கிலம்-1
ஜெயலலிதா 1968-இல் ஒரே ஆண்டில்
21 படங்கள் நடித்து சாதனை செய்துள்ளார்.
எம்ஜிஆருடன் ஜெயலலிதா நடித்த
படங்களின் எண்ணிக்கை-27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT