தினமணி வாசகர் போட்டிகள்

லீவ் கிடைச்சா டூர் கிளம்பற ஆளா நீங்க? போட்டி உங்களுக்காகத் தான்? பதில் சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்!

கார்த்திகா வாசுதேவன்

செப்டம்பர் 27, வருடா வருடம் உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப் படுகிறது. சுற்றுலா செல்வதைக் கொண்டாட ஒரு ஸ்பெஷல் தினமா? என்று ஆச்சர்யப் படுகிறீர்களா? இந்தியர்களான நம்மில் பெரும்பாலானோருக்கு வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா செல்லும் பழக்கம் கூட இல்லை எனும் போது இப்படியொரு ஸ்பெஷல் தினம் இருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கும். சுற்றுலா செல்வதை செலவாகக் கருதக் கூடியவர்கள் இருக்கும் தேசத்தில் சுற்றுலா தினத்தைக் கொண்டாடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது சதவிகிதம் குறைவு என்பதால், சுற்றுலா செல்லும் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் விதத்தில் சர்வ தேச அளவில் செப்டம்பர் 27 ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்து வருடா, வருடம் சில ஸ்பெஷல் தீம்களை எல்லாம் உருவாக்கி அதன் அடிப்படையில் சுற்றுலா தினம் கொண்டாடப் பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தினத்திற்கான தீம் சுற்றுலாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பங்கு என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக அளவிலோ அல்லது உள்ளூர் அளவிலோ எந்த வகையிலாவது சுற்றுலாவை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் தொழிநுட்பங்களின் பங்கு எத்தகையது என்பதை விளக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான தீம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டிலுள்ள புதாபெஸ்ட்டில் இந்த தீம் அடிப்படையிலான கண்காட்சிகள், துறை வல்லுனர்களின் கலந்துரையாடல்கள், சுற்றுலாவை வளர்க்கும் விதத்திலான உலகத் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் திரையிடல் போன்றவற்றுடன் சர்வ தேச சுற்றுலா தினம் கொண்டாடப் படவிருக்கிறது. 

உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள் இல்லையா? இப்போது வாசகர்களுக்கு ஒரு கேள்வி.

இன்றென்ன தேதி? 21.9.18.

இந்த ஆண்டின் முக்கால்பாகத்தைக் கடந்து விட்டோம். ஆண்டு இறுதிக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

இந்த 2018 ஆம் ஆண்டில் துவக்கம் முதல் இன்று வரை நீங்கள் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ எங்காவது சுற்றுலா சென்று திரும்பினீர்களா? அங்கே கழித்த இனிமையான நிமிடங்களைப் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் ஆக்கி மனம் சோர்வுறும் தருணங்களிலும் மகிழ்ச்சி மிதமிஞ்சிய தருணங்களிலும் மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்த்து உங்களுக்கு நீங்களே புத்துணர்ச்சியூட்டிக் கொள்கிறீர்களா? அம்மாதிரியான சுவாரஸ்யமான, வாழ்வின் இனிய சுற்றுலா அனுபவங்களைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள். உங்களது சுற்றுலா அனுபவங்கள் மேலும் பலருக்கு சுற்றுலா செல்லும் ஆசையைத் தூண்டட்டும். அதுமட்டுமல்ல, சிறந்த சுற்றுலா அனுபவங்களைப் பகிர்பவர்களுக்கு தினமணியின் சிறப்புப் பரிசுகளும் உண்டு.

நீங்கள் செய்ய வேண்டியவை...

  1. மனித வாழ்வில் சுற்றுலா அவசியமா?
  2. கீழே பட்டியலிடப்பட்டுள்ள சுற்றுலா வகைகளில் உங்களுடையது எந்த வகை?
  3. நீங்கள் இதுவரை தனியாகவும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடனும் எத்தனை முறை சுற்றுலா சென்றிருக்கிறீர்கள்?
  4. இதுவரை நீங்கள் மேற்கொண்ட சுற்றுலாக்களில் உங்களால் மறக்க முடியாத சுற்றுலா எது? 
  5. மறக்க முடியாத சுற்றுலா அனுபவங்களைப் பற்றி சுவாரஸ்யமாக விவரியுங்கள்!
  6. சுற்றுலாக்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய முக்கியமான மாற்றங்கள் அல்லது தாக்கங்கள்?
  7. சுற்றுலாக்களுக்கு திட்டமிடல் அவசியமா?
  8. சுற்றுலாவின் மூலமாக நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?

 
மேற்கண்ட 8 கேள்விகளுக்கும்  தமிழில் பதில் எழுதி அனுப்புங்கள்... பதில்கள் ஒற்றை வார்த்தைகளில் இருக்கக் கூடாது. குறைந்த பட்சம் பள்ளியில் இன்பச் சுற்றுலா கட்டுரை எழுதி இருப்பீர்களே, அந்த அளவுக்காவது உங்களது சுற்றுலா பற்றிய விவரங்களுடன் இருக்க வேண்டும். சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்களுடன் அனுப்பினால் சாலச் சிறந்ததாக இருக்கும்.

*ஆங்கில பதில்களும், ஒற்றை வரி பதில்களும் நிராகரிக்கப் படும்.

உங்கள் பதில்களை dinamani.readers@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

எதற்காக இப்படியொரு முயற்சி என்றால் சிலர் சுற்றுலா என்ற பெயரில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமாகப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால், அந்தப் பயணங்களை அவர்கள் முழு மனநிறைவுடனும், சுற்றுலா பற்றிய புரிதலுடனும் தான் நிகழ்த்துகிறார்களா என்று புரியவில்லை. ஏனெனில், சிலருக்கு நாங்கள் இந்த ஆண்டு உலகச் சுற்றுலா சென்று வந்தோம் என்று சொல்லிக் கொள்வதே போதுமானதாக இருக்கிறது. அந்தச் சுற்றுலா மூலமாக அவர்கள் பெற்ற அனுபவங்கள் என்றால் வெறும் புகைப்படங்கள் மட்டுமே என்றாகி விடுகிறது. அங்கே சென்றும் லேப் டாப்பை நோண்டிக் கொண்டும், மொபைலில் மேய்ந்து கொண்டும் கொட்டிக் கிடக்கும் அதிசயங்களின் முக்கியத்துவத்தை உணராதவர்களாகவும், அதற்காக செலவிட்ட தொகையின் முக்கியத்துவத்தை உணராதவர்களாகவுமே பலரும் தங்களது சுற்றுலாக்களை வெறும் கடமைக்காக மேற்கொள்கிறார்கள்.

சுற்றுலாக்கள் கடமையைக் கழிப்பதற்காக திட்டமிடப்பட வேண்டியவை அல்ல வாழ்வின் புத்தம் புது தரிசனங்களுக்கானவை! எனும் ஞானம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு. என்பதை அறியவே தினமணி இணையதளம் இந்தப் போட்டியை நடத்துகிறது.

ஏனெனில் பெரும்பாலானோருக்கு ஒரு நினைப்புண்டு. சுற்றுலா என்ற பெயரில் ஊர் சுற்றுவது  ‘காசுக்குப் பிடித்த கேடு’ என்று. அது அப்படியல்ல வாழ்வின் புதுமையான அனுபவங்களைப் பெறுவதற்கான குரு தட்சிணை அல்லது மூலதனம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அயல்நாட்டாரைப் பாருங்கள். தங்களது வாழ்வு மொத்தத்தையும் அவர்கள் சுற்றுலாவுக்காகவே அர்ப்பணித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். ஆண்டு தோறும் 3 மாதங்களை அவர்கள் இதற்கெனவே ஒதுக்கி வைக்கிறார்கள். இங்கென்றால் நமக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வதே ஆகச் சிறந்த கஷ்டங்களில் ஒன்றாகி விடுகிறது.

சுற்றுலாவில் பல வகைகள் உண்டு.

  • ஆன்மீகச் சுற்றுலா ( கோயில மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வது)
  • இன்பச் சுற்றுலா (குடும்பத்துடன் ரிஸார்ட், 
  • கல்விச் சுற்றுலா (வேறு மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் கல்வியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சுற்றுலா)
  • மருத்துவச் சுற்றுலா ( சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா)
  • அட்வெஞ்சர் சுற்றுலா (த்ரில்லான பயணங்கள் மற்றும் விளையாட்டுக்களைத் திட்டமிட்டு செல்லும் சுற்றுலா)
  • அடாமிக் சுற்றுலா (அணு ஆராய்ச்சி நிலையங்கள், மியூசியங்களுக்குச் செல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுற்றுலா)
  • பெர்த் சுற்றுலா (அயல்நாட்டுக் குடியுரிமை பெறுவதன் பொருட்டு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வேறு நாடுகளுக்குச் செல்வது)
  • தொழில் சுற்றுலா (தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான பயிற்சி நிமித்தம் மேற்கொள்ளப்படும் சுற்றுலா)
  • விண்வெளிச் சுற்றுலா ( விண்வெளிப் பயணங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும் சுற்றுலா)
  • விர்ச்சுவல் சுற்றுலா ( உட்கார்ந்த இடத்திலிருந்து நீங்கள் விரும்பும் இடங்களுக்கு கணினி வாயிலாக முழுத்திருப்தியுடன் சென்று வரும் சுற்றுலா)
  • மதச் சுற்றுலா (சிலர் தங்களது மதத்தை உலக அளவில் பரப்புவதற்கென்று திட்டமிட்டு மதச் சுற்றுலா மேற்கொள்ள்வதும் கூட சுற்றுலா வகைகளில் ஒன்றாகத் தொன்று தொட்டு நடத்தப்படுகிறது)
  • கல்லினரி சுற்றுலா (வெவ்வேறு நாட்டு உணவு வகைகள் மற்றும் அவற்றின் சிறப்பைப் பற்றி அறிந்து தங்கள் நாட்டில் அவற்றை அறிமுகப்படுத்த நடத்தப்படும் சுற்றுலா)
  • கல்ச்சுரல் சுற்றுலா ( கலை மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா)
  • ஃபேஷன் சுற்றுலா
  • சுற்றுச்சூழல் மேம்பாட்டுச் சுற்றுலா 
  • ஜங்கிள் சுற்றுலா
  • இலக்கியச் சுற்றுலா
  • பேக்கேஜ் சுற்றுலா
  • கடல் பயணம்
  • ஸ்போர்ட்ஸ் சுற்றுலா
  • ஹனிமூன்
  • சைக்கிள் சுற்றுலா
  • ரோட் ட்ரிப்

இப்படி ஏராளமான வெரைட்டியில் உலக அளவில் டூர்கள் திட்டமிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மை சமுதாயத்தினருக்குத் தெரிந்த சுற்றுலாக்கள் என்றால் வெகு சிலவே.

சுற்றுலாக்கள் மனதுக்கு நிம்மதியையும், உற்சாகத்தையும் தரக்கூடியவை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவை தரக்கூடிய அனுபவங்கள் லட்ச லட்சமாகக் காசைக் கொட்டி கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலுமாக நாம் ஏட்டில் கற்றுக் கொள்ள இயலாத பொக்கிஷமான படிப்பினைகளையும் வழங்கக்கூடியவை. அதையெல்லாம் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

ஆகவே, உங்களது சுற்றுலா ஸ்பெஷல் அனுபவங்களை மேற்கண்ட 8 கேள்விகளுக்கான பதில்கள் வாயிலாக நீங்கள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். சிறப்பான பதில்கள் மற்றும் சுற்றுலா அனுபவப் பகிர்வுகளுக்கு வழக்கம் போல தினமணி இணையதளத்தின் சிறப்புப் பரிசுகள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT