நடுப்பக்கக் கட்டுரைகள்

வீரத்தை வீழ்த்தவில்லை!

த.கே.வினாயகமூர்த்தி


கஜாபுயல் உருவாகி, தமிழகத்தைத் தாண்டிப் போனபோது, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. அநேகமாக, கஜா புயல், சென்ற வழியில் இருந்த தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், சவுக்கு, நெல்லி மரங்கள், நெற்பயிர், மக்காச் சோளம், வாழை ஆகிய அனைத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது. ஆடு- மாடுகளையும், கோழிகளையும் இரக்கமில்லாமல் இழுத்துச் சென்று விட்டது. 
இந்திய விவசாயிகளுக்கு, இயற்கைதான் தாய். அவர்களது கடின உழைப்புதான் தந்தை. விவசாயத்தை நம்பிய இந்திய நாடு, பருவகாலம் தவறாத போதெல்லாம் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தி
ருக்கிறது. விவசாயிகளிடமிருந்துதான் எண்ணற்ற பழமொழிகள், பாடங்கள், அறிவுரைகள் இந்திய வாழ்க்கை முறையாக வளர்ந்து வந்துள்ளன. எனவேதான், விவசாயம் ஒரு தொழில் அல்ல; அது இந்தியமக்களின் வாழ்க்கை முறை என்று கூறுவார்கள். 
தற்போது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பூமண்டலம் முழுமையிலும் பருவ கால மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வெப்ப அதிகரிப்பால் பருவ காலங்களில் மாற்றம் ஏற்பட்டு, பல நாடுகளில் பலவகையான பேரிடர்கள் ஏற்படுகிற செய்தியையும் படிக்கிறோம். வட துருவம், தென் துருவம் ஆகிய இரு பகுதிகளிலும் பனிக்கட்டிப் பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாது, எரிமலைகள் பொங்கி எழுந்து பல நகரங்களைப் பொசுக்கி வருகிறது. 
நம் நாட்டை விடதொழில் வளர்ச்சியிலும், செல்வ வளத்திலும், ராணுவ பலத்திலும் பல மடங்கு சக்தியுடைய அமெரிக்காவில், கடந்த சில ஆண்டுகளில் சுனாமி, புயல், எரிமலை, காட்டுத்தீ ஆகியவற்றால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ராணுவ பலமிருந்தும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல், 90 பேர் எரிந்து போயினர்; 300 பேர் காணாமல் போயினர். கடந்த பல நாள்களாக எவ்வளவோ முயற்சித்தும், மலை எரிவதைக்கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனை நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பது ஒருவகையில் நல்லது. மாடி வீடு கட்டி வாழ்பவன், பூமி அதிர்ச்சியால் நிச்சயம் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிசெத்துப்போவான். ஆனால், குடிசைவீடு இடிந்து எவனும் சாகமாட்டான்; காயம் அடையலாம். இந்த வகையில் நமக்கு சேதக்கணக்கு குறைவு. 
இங்கே வறுமை கோரமாக இருப்பினும், போராடி வாழ வழி இருக்கிறது. எனவே, ஆடு - மாடு, வீடு - காடு என்பதோடு மூத்தோரையும் இழந்திருந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரக் கூடாது. எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், அதற்கு மாநில அரசு லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
ராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழப்போரின் வாரிசுகளுக்கு மட்டுமே மாநில அரசு உதவ வேண்டும். மக்கள் மன உறுதியை இழக்காமல், எந்தச் சூழலிலும் சொந்தக்காலில் நிற்பேன் என்ற மனஉறுதியைப் பெறவேண்டும். மதங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்க - விவசாயிகள் சங்க அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்கள், உடன் பிறந்தோர் என யாரையும் நம்பமுடியாமல் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்கிறான் என்றால், இது குறித்து அறிஞர்களும், சான்றோரும் சிந்திக்க வேண்டும்.
இயற்கைப் பேரிடர், மனித சக்தியாலோ, விஞ்ஞான வளர்ச்சியாலோ தடுத்து விடக் கூடியதல்ல. எனவே, மழை - புயல் கண்டு அஞ்சத் தேவையில்லை. யார் மீது பழி போடவும் தேவையில்லை. இது மனிதர்களால் உருவாக்கப்படுவது அல்ல. ஆளும் கட்சியாலும் இதைச் செய்ய முடியாது; எதிர்க்கட்சியாலும் இதனைத் தடுக்க முடியாது. ஆனால், பேரிடர் அழிவுக்குப் பின் பக்கபலமாக இருந்து, தக்க உதவிகளை விரைந்து செய்யமுடியும். 
தமிழ்நாட்டிலுள்ள சிலஅரசியல் கட்சிகள், தங்கள் கட்சியில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றன அக்கட்சியினர் மேடையில் கூறுகிற புள்ளிவிவரக் கணக்கைப் பார்த்தால், பொதுமக்களை விட கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதைப் போல தெரிகிறது. ஒரு கட்சியில் ஒரு கோடி உறுப்பினர் என்றால், இரண்டு கோடி கரங்கள் என்று அர்த்தம். 
மாநாடுகளுக்கு, தேர்தல் பேரணிகளுக்குத் திரட்டப்படுகிற உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்காவது பேரையாவது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏன் அனுப்ப முடியவில்லை? மக்களுக்கு சேவை புரியும் பண்பை, கட்சிகள் தங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 
வானிலை முன்னறிவிப்பு என்பது பாதி விஞ்ஞானம் - மீதி யூகம் என்றுதான் உள்ளது. புயல் வருகிற வேகம், வரும் பாதை, செல்லும் பாதை இவற்றைத் துல்லியமாகக் கூற முடியாது. அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால்கூட இவற்றைக் கறாராகக் கூற முடிவதில்லை. எனவே, வானிலை அறிவிப்பாளரை குறைகூறிப் பயனில்லை. 
அவர்களின் முன்னறிவிப்பின்படி இதுவரை வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. அது இந்த ஆண்டு உபரியாகப் பெய்யும் என்றார்கள். மாறாக, பதினாறு மாவட்டங்களில் மழை மிகமிகக் குறைவாகப் பெய்துள்ளது. சில மாவட்டங்களில் மட்டும் அதிகமாகப் பெய்து கெடுத்திருக்கிறது. 
எனவே, வேட்டி கொடுத்தோம், இரண்டு லட்சம் பேருக்கு சமைத்துப் போட்டோம், தென்னை மரத்துக்கு, ஆடு, மாடு, கோழி, நெற்பயிர்ஆகியவற்றுக்கும் இழப்பீடு உண்டு - என்ற நாடக பாணி சடங்குகளை விட்டுவிட்டு அரசு புதிய திட்டங்களைத் தீட்ட வேண்டும். நீரியல் வல்லுநர்கள், பொருளியல் வல்லுநர்கள், பொதுப்பணித்துறையில் பணியாற்றியோர் கூடி விவாதித்து, திட்டத்தை வகுக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் கட்சி உறுப்பினர்களை சமூக நல்லிணக்க வழியில் வாழப் பழக்க வேண்டும். 
பாலியல் வன்முறைகளை சிந்தனையாலும் நினைக்காத கற்பின் காவலர்களாக அவர்களை ஆக்க வேண்டும். எந்த உறுப்பினரும் மதுக் கடையை நாடாதவராக இருக்க வலியுறுத்த வேண்டும்.
ஆட்சியாளர்கள், புயல் நிவாரணப் பணிகளில் காவல் துறையினரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இவர்களிடம் வாகனங்கள்உண்டு; தொலைத் தொடர்பு வசதி கருவிகள்உண்டு. இயற்கைப் பேரிடரின் தடங்கல்களைத் தாண்டும் உடல் வலிமையும் உண்டு. 
ஆனால் மனிதநேயத்தோடு, துன்புறும் மக்களுக்கு உதவும் உணர்வு உருவாக்கப்பட வேண்டும். இவர்களுக்குத்தான்எல்லாவீடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கும்.
ஆட்சியாளர்கள் இத்தகைய இயற்கைப் பேரிடர் அறிவிப்பு வந்தவுடன், குடி தண்ணீர், கழிவறைகளுக்கு முன்னேற்பாடு செய்யவேண்டும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளுக்கு பத்து நாள்களுக்குப் பயன்படுமாறு ஜெனரேட்டர்களை வைக்க வேண்டும். 
சோழர்கள் காலத்தில், காவிரியில் வரும் உபரி நீரை, சேதத்தைத் தவிர்க்கும் விதமாக கொள்ளிடம் வழியாக வழியனுப்பி வந்தனர். ஆனால், தற்போது, மக்கள்தொகைப் பெருக்கத்தால் தேவை அதிகரித்துள்ளது. 
எனவே, கொள்ளிடத்தின் வழியாகக் கடலுக்குச் சென்றடையும் தண்ணீரை மேட்டூருக்கும், கரூருக்கும் இடையில் தகுந்த இடம் பார்த்து தடுப்பணை கட்டி, தென் மாவட்டங்களை நோக்கி காவிரியின் உபரிநீரை கூடங்குளம் சென்றடையச் செய்யவேண்டும். 
இதனால், தென்மாவட்டங்களில் சிலலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறலாம். குடிநீர்த் தட்டுப்பாட்டையும் தவிர்க்கலாம்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில் குளங்கள் அனைத்திலும் மழைக்காலத்தில் மழைநீரைப் பெருக்க திட்டம் வகுக்கவேண்டும். தொழிற்சாலைகள்கட்ட அனுமதி தரும்போது, அவற்றை தொழில்வளர்ச்சி பெறாத மாவட்டங்களில் கட்டினால், அதற்கு மானியம், மின்கட்டணச் சலுகை, வரிச் சலுகை தரப்படும் என ஊக்குவிக்கலாம். 
நகர்ப்புறங்களை ஒட்டிக் கட்டப்படும் தொழிற்சாலைகள்தான், அவற்றிலிருந்து வரும் நச்சுக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். ஆறு, குளங்கள், ஏரிகளில் நச்சுக்கழிவுகளை விடுவோரின் தொழிற்சாலைகள் மூடப்படும் என்பதோடு, அவர்களுக்கு அனுமதி கொடுத்தோருக்கும், தொழிலதிபர்களுக்கும் தண்டனை உண்டு என அறிவிக்க வேண்டும்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களின் மீட்புப்பணி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இருப்பினும், எல்லா கிராமங்களுக்கும் மின்வசதியை மீட்டுக்கொடுக்க காலதாமதம் ஆகிறது என்பதால், மத்தியஅரசின் துணை ராணுவத்தினரை, மாநில அரசு உடனே அழைக்க வேண்டும்.
கஜாபுயல், தமிழர்களின் மரங்களைச்சாய்த்திருக்கலாம்; ஆனால், அது தமிழர்களின் வீரத்தை வீழ்த்திவிடவில்லை; தன்னம்பிக்கையைத் தகர்த்து விடவில்லை என்பதை நிரூபிக்கத் தந்த வாய்ப்பாகக் கருதி அரசு மீட்புப் பணிகளைத் திட்டமிட வேண்டும்.

கட்டுரையாளர்:
முன்னாள் மாநிலச் செயலர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT