உயர்கல்வியின் தரமும் வெற்றியும்

ஒரு நாட்டின் வளர்ச்சியில் உயர்கல்வியின் தரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியக் கல்விமுறை பாடபுத்தகங்களைச் சார்ந்து உள்ளதே தவிர,

ஒரு நாட்டின் வளர்ச்சியில் உயர்கல்வியின் தரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியக் கல்விமுறை பாடபுத்தகங்களைச் சார்ந்து உள்ளதே தவிர, அறிவாற்றலை மேம்படுத்தும் கல்வியாக இல்லை. மாணவர்களின் திறமையை, தேர்வுகளையும் மதிப்பெண்களையும் கொண்டு நிர்ணயிக்காமல், படைப்பாற்றல் மற்றும் தனித்தன்மையைக் கொண்டு நிர்ணயிக்கும் முறை கல்விமுறையில் ஏற்பட வேண்டும்.
தனியார்மயமாக்கலின் விளைவாக, கல்வி வியாபாரமாக்கப்பட்டு, அதன் நோக்கத்தையும், மதிப்பையும் இழந்ததோடு அதன் தரமும் வலுவிழந்து உள்ளது.
உயர்கல்வியின் முக்கிய அம்சங்களான சாத்தியம், சமநிலை, தரம் ஆகிய மூன்றும் ஒருசேர ஊக்குவிக்கப்படவில்லை. இவை வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டு, தரம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு உயர்கல்வியின் ஒட்டு மொத்த பதிவு விகிதத்தை  (Gross Enrollment Ratio - GER)உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. வரும் 2030-ஆம் ஆண்டு, தேசிய ஒட்டுமொத்த பதிவு விகிதம் சராசரியாக 30 சதவீதமாக உயரும் என்று நிதி ஆயோக் கருதுகிறது.
இதில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் 45 சதவீதத்திற்கும் மேலாக இருக்குமென்றும் மற்ற மாநிலங்கள் தங்கள் ஒட்டுமொத்த பதிவு விகிதத்தை மேம்படுத்தக் கடும் முயற்சி வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றது.
உயர்கல்வி நிறுவனங்கள் திறமையான செயலாற்றல் மிக்க ஆளுமையை உருவாக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் அந்நிறுவனத் தலைவரின் சிந்தனையும், செயலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதில் ஏற்படும் எந்த ஒரு தவறும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல்கலைக்கழகங்களில் மிகச்சிறந்த ஆளுமைத்திறன் கொண்ட தலைவர்களாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.எல்.முதலியார், கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் அசுதோஸ் முகர்ஜி, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரி, மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் ரகுநாத் பரஞ்பி, அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அமர்நாத் ஜா மற்றும் அரிவான்ஸ் ராய் பச்சன் ஆகியோர்களைக் குறிப்பிடலாம்.
பல்கலைக்கழக மானிய குழு(UGC) தன்னுடைய ஒன்பதாவது திட்டத்தில் சிறந்த திறன் கொண்ட பல்கலைக்கழகம் (UPE)  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது 16 பல்கலைக்கழகங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 12-ஆவது திட்டம் வரை தொடரும். 
இந்த 16 பல்கலைக்கழகங்களுள் 11 பல்கலைக்கழகங்கள் மேற்கு வங்கம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. 
இதன் பின்னர், பல்கலைக்கழக மானியக்குழு துறை சார்ந்த திறன் கொண்ட மையங்கள் (CPEPA) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிறந்த திறன் கொண்ட பல்கலைக்கழகங்கள் திட்டத்தைப் பெற பல்கலைக்கழகங்களுக்கு அளவுகோல் நிர்ணயித்துள்ளது. திறன் கொண்ட திட்டம் மூலம் பல்கலைக்கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் மற்றும் துறை சார்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தற்போது நாடெங்கும் இதுபோன்று 23 மையங்கள் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 மையங்கள் தமிழ்நாட்டிலும், 3 மையங்கள் கர்நாடகாவிலும் உள்ளன.
துரதிருஷ்டவசமாக இந்த திட்டங்களை வல்லுநர்கள் முழுமையாக மதிப்பாய்வு செய்யவில்லை. மேலும், பல்கலைக்கழகங்களால் இதற்கென ஒதுக்கிய நிதியை சரிவர பயன்படுத்தவில்லை. இதற்கிடையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சிறந்த கல்வி நிறுவனம் (IOE) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. 
இதன் மூலம் 3 அரசு நிறுவனங்களும், 3 தனியார் நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க உள்ளன.
நாம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எல்லோருக்குமான உயர்கல்வியை உருவாக்க வேண்டுமா? அல்லது உலகத் தரம் என்ற பெயரில் மிகச்சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டுமா? என்பது இந்த தருணத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும். 
உயர்கல்வியின் வெற்றி, ஆசிரியரையே சாரும். ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்களை நாட்டின் தலைசிறந்தவர்களோடு ஒப்பிடும் அளவிற்கு அவர்களுக்குத் தன்னம்பிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த உதவ வேண்டும். அத்தகைய தன்னம்பிக்கையே உயர்கல்வி நிறுவனத்தின் பெருமையாக மாறி, அதுவே ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக உருவெடுக்க உதவும். இதுவே ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். 
தேவையான வசதிகள், சிறந்த நிர்வாக சீர்திருத்தம், நெகிழ்வுத் தன்மை, ஊக்குவிக்கும் பண்பு மற்றும் பாராட்டுதல் ஆகியவைகளைச் சரியாக செயல்படுத்தும்போது சிறந்த ஆசிரியர்கள் உருவாகிறார்கள். பல்கலைக்கழகங்களின் வெற்றி என்பது ஆசிரியர்களின் தரம் மற்றும் ஊக்கத்தை பொறுத்தே அமையும். குருவிற்கு மாற்றாக என்றும் கூகுள் மாறாது.' ஊக்கம், உற்சாகம் நிறைந்த ஆசிரியர்களே ஒரு தலை சிறந்த நிறுவனத்தின் முக்கியத் தேவை. 
உயர்கல்வியின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கினை உணர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு இரண்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டு கல்வி மையங்களை (IUTC)காகிநாடா மற்றும் வாராணசி ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது. மேலும் அடிப்படை ஆராய்ச்சியை ஊக்குவிக்க பிரதமரின் அறிவியல் குழுவின் வழிகாட்டுதலின் பெயரில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி' என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளது. 
நமது பாடத்திட்டங்கள் செய்முறை அறிவையும், தொழில்முறை அனுபவங்களையும் அளிப்பதில்லை. இந்நிலையை உணர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் பல்கலைக்கழக மானிய குழு செயல்திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தை ஆரம்பித்தது. இதற்காக செயல்திறன் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பை கல்லூரிகளில் தொடங்கியது. தேசிய திறந்த நிலைப் பள்ளி  (NOS)  தேசிய தொழிற்கல்வி தகுதி நிர்ணய மேலாண்மை வாரியம் (NWEQF)  உடன் சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. பின்னர் தேசிய தகுதி மேம்பாட்டு மையத்தின் (NSDC)  உதவியுடன் தேசிய செயல்திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) என மாற்றப்பட்டது.
இந்திய தயாரிப்பு, திறன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய மூன்று செயல்திறன் அடிப்படையிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் இணையவழி கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் MOOC'S, NPTPEL, e-Pathshala, e-learning  முதலான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பயணப்பட மாணவர்களின் திறமைய ஊக்குவிக்க Choice Based Credit System (CBCS)என்ற மிகச் சிறந்த திட்டத்தை MHRD/UGC உருவாக்கியுள்ளது. 
சமீபத்தில் Global Initiation of Academic Networking (GIAN)  திட்டம் மூலமாக வெளிநாட்டு ஆசிரியர்களை வரவழைத்து 2/3 கிரடிட் வகுப்புகளை அளிக்கும் திட்டங்களை MHRD/uGc MOOC's  திட்டம் மூலம் கொண்டு வந்துள்ளது. இதுTimes Higher Education  மற்றும் Qs தரவரிசை பட்டியலில் நமது கல்வி நிறுவனங்கள் பங்கு பெற சரியான நேரத்தில் எடுத்த முயற்சியாகும் NIRF தரவரிசையில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து கூடுதல் பேராசிரியர் அனுமதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல பல்கலைக்கழகங்களில் அறிவு சார்ந்த உள்ளுணர்வுள்ள அறிவுரை அளிக்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதற்கு பல்கலைக்கழகங்களை சூழ்ந்துள்ள அரசியல், ஊழல் முக்கிய காரணம். இவை ஆசிரியர்களின் ஊக்கத்தையும் கல்வியின் தரத்தையும் குறைத்துவிடும். நிர்வாகத் துணிச்சலே தரமான நிறுவனம் அமைய இன்றியமையாததாகும். 
நிறுவன சுயாட்சி என்பது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தரத்திற்கும் இன்றியமையாததாகும். இளங்கலை கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தகுதி வாய்ந்த சில கல்லூரிகள் சுயமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை தாங்களே தங்களது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், சரியான மதிப்பீடு முறையை அறிமுகப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள 441 தன்னாட்சி கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்காக 155 கல்லூரிகள் தமிழ்நாட்டிலும், 78 கல்லூரிகள் ஆந்திர பிரதேசத்திலும், 49 கல்லூரிகள் கர்நாடகாவிலும் உள்ளது. 
RUSA  மூலம் கிளஸ்டர் கல்லூரி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்டுள்ள IOE குறியீடு கொண்ட பல்கலைக்கழகங்கள் தங்களுக்கென சிறந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் கலாசாரம் மற்றும் நாட்டின் உண்மையான தேவைகளை புரிந்து செயல்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளை திரும்பவும் 
செய்ய நினைப்பதையும் நகலெடுப்பதையும் விட்டுத் தள்ள வேண்டும். உண்மைத்தன்மையும் படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். 
இன்றைய காலக்கட்டத்தில் புதுமையை விட, படைப்பு சிந்தனை மிக முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த திட்டங்களின் வாயிலாக சிறந்த இலக்கை அடைய சரியான வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் தனக்கான தரத்தையும் பெருமையையும் உருவாக்கும் போதுதான் அதை இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களோடு அடையாளப்படுத்திக் கொள்வர்.

கட்டுரையாளர்: 
முன்னாள் துணைத்தலைவர், 
பல்கலைக்கழக மானியக் குழு, 
புது தில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com