நம்ப முடியாத நண்பர்கள்

அணு ஆயுதம் என்பது பேரழிவினை ஏற்படுத்தக்கூடியது. அது மட்டுமல்ல, ஆயிரம் அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடு என்பதால் மட்டும் ஒரு நாடு தன்னை வல்லரசு என்று கூறிக்கொண்டு நிம்மதியாக இருந்துவிட முடியாது;

அணு ஆயுதம் என்பது பேரழிவினை ஏற்படுத்தக்கூடியது. அது மட்டுமல்ல, ஆயிரம் அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடு என்பதால் மட்டும் ஒரு நாடு தன்னை வல்லரசு என்று கூறிக்கொண்டு நிம்மதியாக இருந்துவிட முடியாது; ஓரிரண்டே அணுகுண்டுகளை வைத்திருக்கும் நாடானாலும் கூட, அதைக் கண்டு ஓர் உலக வல்லரசு பயந்துதான் ஆக வேண்டும் என்பதே உண்மையாகும்.
கடந்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் சந்தித்த உச்சி மாநாடு உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், அணு ஆயுதப் பரவல் குறித்துக் கவலை கொண்ட எல்லோரிடத்திலும் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் அணுகுண்டுகளைத் தாங்கி நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளுக்கான சோதனைகளை வட கொரியா சளைக்காமல் மேற்கொண்டு வந்ததால், கொரிய தீபகற்பத்தில் நீடித்த ஒரு போர்ச் சூழல் இருந்து வந்தது. 
மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்திவந்த கூட்டுக் கடற்படைப் பயிற்சி காரணமாகவும் வட கொரிய எரிச்சலடைந்திருந்தது. ஐநா சபை மூலமாக அமெரிக்கா தன் மீது கொண்டுவந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் வட கொரியா கோபம் அடைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தனது நீண்டதூர ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்க நகரங்களையும், அமெரிக்கக் கடற்படையினரையும் தாக்கப் போவதாக பகிரங்க மிரட்டலையும் விடுத்து வந்தது. வடகொரிய நாட்டின் மலை ஒன்று, அணுவெடிப்புச் சோதனையால் சுமார் பதினோரு அடிகள் இடம் பெயர்ந்ததாக செயற்கைக்கோள் தகவல் தெரிவித்ததையும் உலகம் கவலையுடன் உற்று நோக்கியது.
அமெரிக்கா, வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவு மிகவும் கீழ்நிலைக்குச் சென்றதற்கு அவ்விரு நாட்டு அதிபர்களின் பொறுப்பற்ற, சவடால் பேச்சுக்களும் ஒரு காரணமாக அமைந்தது. 
லிபியாவின் அதிபர் கர்னல் கடாஃபியின் நிலைதான் கிம்முக்கு ஏற்படும் என்று டிரம்ப் பேசியதும், டிரம்பை வடகொரிய அதிபர் தரக்குறைவாக விமர்சித்ததும் உலக நாடுகள் அனைத்தையும் முகம் சுளிக்கவைத்தன. 
இந்த நிலையில், வடகொரிய - அமெரிக்க அதிபர்கள் நேருக்கு நேராகச் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. வடகொரிய - தென் கொரிய எல்லையில் அவ்விரு நாட்டு அதிபர்கள் சந்தித்துப் பேசியது போர் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்க - வடகொரிய அதிபர்களின் உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவும் பெருமளவு உதவியது. சிங்கப்பூரும் தன் பங்குக்கு ஒத்துழைத்து, இரு அதிபர்களையும் வரவேற்றுத் தனது நாட்டிலேயே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தது.
சிங்கப்பூர் சென்றால் எனது உயிருக்கு ஆபத்து' என்று கிம் சொல்ல, உச்சி மாநாட்டைப் புறக்கணித்து வட கொரியாவுக்குப் பாடம் கற்பிப்போம்' என்று அமெரிக்கா அறிவிக்க, பரஸ்பர எரிச்சலூட்டல்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், ஒரு வழியாக உச்சி மாநாடு நடக்கவே செய்தது.
தன்னைப் பற்றிய எந்தவிதமான ரகசியத் தகவல்களும் யாருக்கும் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக, தனக்காக ஒரு பிரத்தியேகக் கழிவறையையே தனது நாட்டிலிருந்து கிம் கொண்டு வந்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
உச்சி மாநாடு முடிந்த நிலையில், நமது நாட்டில் புதிய தேர்தல் கூட்டணி கண்ட தலைவர்களைப் போல, கிம்மும் டிரம்ப்பும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டார்கள். வட கொரியா தனது அணு ஆயுதங்களை அழித்து விடும்' என்று கிம்மும், அணு ஆயுதங்கள் இல்லாத வட கொரியாவுக்கு வேறு எந்த நாட்டிடமிருந்தும் அச்சுறுத்தல் இல்லாதவாறு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும்' என்று டிரம்ப்பும் பேட்டியளித்தபோது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
உச்சி மாநாடு முடிந்தவுடன் அமெரிக்கா திரும்பிய டிரம்ப், என் இனிய அமெரிக்க மக்களே, இனி நமக்கு அணு ஆயுதத் தொந்தரவு இல்லை; இன்றிரவு பயமின்றி நிம்மதியாக உறங்குங்கள்' என்று அறிக்கை எல்லாம் கொடுத்தார்.
சில நாள்கள்தான் ஆயிற்று. இடையில் என்ன நடந்ததோ -
வடகொரியாவினால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது' என்று திடீர் அறிக்கை விட்டிருக்கிறார் டிரம்ப். 
இதன் உண்மையான காரணத்தை உலகளாவிய ராஜதந்திரிகள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். அது அணுஆயுத அச்சுறுத்தலா என்பது தெரியவில்லை. அல்லது, ராஜதந்திர அனுபவமற்ற இளம் வயதினராகிய வடகொரிய அதிபரைக் குழப்பத்தில் ஆழ்த்தி வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறதா என்றும் புரியவில்லை.
எது எப்படியாயினும், இன்னொரு நாகசாகி, ஹிரோஷிமா அனுபவத்துக்கு இவ்வுலகில் யாருமே தயாராக இல்லை என்பதே உண்மை.
உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் நட்பு நாடு, பகை நாடு என்று தனித்தனிப் பட்டியல் உண்டு. இந்த வேளையில் பார்த்தால் வடகொரியாவும் அமெரிக்காவும் நண்பர்கள் போலத்தான் தோன்றுகின்றன. அதே சமயம், பரஸ்பரம் நம்பிக்கையிலாத நண்பர்களாக அந்நாடுகள் இருப்பதும் கண்கூடு.
இவ்விரண்டு நாடுகளைத் தவிர்த்த பிற நாட்டு மக்கள் அனைவரும் தத்தமது கடவுளர்களிடம் இனி இப்படி வேண்டிக்கொள்ளலாம். நண்பர்களிடமிருந்து எங்கள் நாட்டைக் காப்பாற்று. எங்களது பகைவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com