வணிகப்போரில் இந்தியா

தொழிற்புரட்சிக்குப் பின் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் போன்ற நாடுகள் உலகின் பல நாடுகளை வணிக முறையிலேயே அடிமைப்படுத்தின.

தொழிற்புரட்சிக்குப் பின் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் போன்ற நாடுகள் உலகின் பல நாடுகளை வணிக முறையிலேயே அடிமைப்படுத்தின. ஆனால், சாம்ராட்டுகள்' என்று பாராட்டப்படும் அசோகர், அக்பர், சிவாஜி போன்றோர் காலங்களிலும் கூட, படைபலம் இருந்தும் எந்த நாட்டின் மீதும் எல்லை கடந்து சென்று கொள்ளையிட்டு, பிற நாட்டு மக்களை அடிமைப்படுத்திய அவமானமான வரலாறு இந்தியாவிற்குக் கிடையாது. இந்த வரலாற்றுப் பெருமை நமக்கு புகழ்பெற்றுத் தந்திருந்தாலும், நம் நாட்டை சோதனைக்கும் உள்ளாக்கி வருகிறது.
அண்மைக்காலமாக இந்திய அரசியலாரும், இந்தியா வல்லரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டு வருகின்றனர். நம் நாட்டு மக்கள் நமக்கு நல்லரசு வேண்டுமா அல்லது படைபலத்தைக் குவித்து வல்லரசு என்ற பட்டயத்தைப் பெற்றாக வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். 
வல்லரசு என்பது, படைபலத்தையும், குறிப்பாக, ஆயுத வலிமையையும், நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பையும் அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. எனவேதான், இந்தியாவின் நிலப்பரப்பில் பத்தில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கும் உள்ள ஜெர்மனி வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போர்களைத் தொடங்கி நடத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் விளைவித்த நாடு ஜெர்மனி. எனவே, இரத்த கறை படிந்திருந்தாலும் அதற்கு வல்லரசு என்ற இடம். அதேபோன்று, இங்கிலாந்தும் பிரான்சும் சேர்ந்தாலும், நிலப்பரப்பில்-மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும். இருப்பினும், அவையெல்லாம் வல்லரசு என்ற பெருமையையும், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளன.
உலக நாடுகளின் வருமான மொத்த அளவைப் பற்றி வெளியாகியுள்ள அறிக்கையின்படி, செல்வபலத் தரவரிசையில் ஆறாவது இடத்திலிருந்த பிரான்சை முந்திக் கொண்டு, இந்தியா ஆறாவது இடத்துக்கு வளர்ந்துவிட்டதாக உலக வங்கி 2017-ஆம் ஆண்டுக்கான கணக்கின்படி அறிவித்திருக்கிறது.
அதாவது, இந்திய நாட்டின் ஓராண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) 2.597 டிரில்லியன் டாலர் என்றும், ஆனால் அதே ஆண்டில் பிரான்சின் மொத்த உற்பத்தி 2.582 டிரில்லியன் என்பதால், இந்தியா பிரான்சைவிட முந்திவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் சீனா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் தொடர்ந்து இடம் வகிக்கிறது. நான்காவது இடத்தில் ஜெர்மனி நிற்கிறது. ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து, ஆறாவது இடத்தில் இந்தியா. இது ஓரளவு மகிழ்ச்சி தரும் செய்தி என்றாலும், இதை மட்டும் படித்துவிட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. 
இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையை விளக்கக்கூடியவை அல்ல. ஏனெனில், பிரான்சின் மக்கள்தொகை ஆறு கோடியே எழுபது லட்சம். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியைத் தாண்டிவிட்டது. எனவே, தனிநபர் வருமானம் (Per Capita Income) என்பதுடன், வாழ்க்கைச் செலவுப்புள்ளியை (Cost of Living) சேர்த்து கணக்கிட்டால், இந்தியா மனிதவள தரவரிசையில் எண்பது நாடுகளுக்குப் பின்னாலே போய்விடுகிறது. குறைகள், வறுமை எனப் பார்த்தால் முதல் சில இடங்களுக்குள் வந்துவிடுகிறது. 
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகப் போர் ஒன்றை பிரகடனம் செய்துள்ளார். அவருடைய போர்ப் பிரகடனம், இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வரிப்போர் என்றோ, அல்லது வணிகப்போர் என்றோ குறிப்பிடப்படவில்லை. அவருடைய பிரகடனத்தில், சீனாவைத்தான் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நாடு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் சீனப் பொருள்கள் மீது கலால்-சுங்க வரிகளைக் கடுமையாக உயர்த்தி இருக்கிறார். சீனப் பொருள்கள் அமெரிக்காவில் அதிகமாக விற்கப்படுவதால் தங்கள் நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். சீனா, பொருட்களுக்கான பட்டய விதிகளை(Patent Rights) மதிக்காமல், சகல பொருட்களையும் சட்டவிரோதமாக உற்பத்தி செய்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மூன்றரை லட்சம் கோடி டாலர் அளவுக்கு புதிய வரிகளை சீனப் பொருட்கள் மீது விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சீனா, இதற்கு பதில் கூறும் வகையில், ஏறத்தாழ அதே அளவு வரியை சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது விதித்திருக்கிறது.
டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ள வரிப்போர் சீனாவுடன் மட்டும் முடியவில்லை. அது ஈரானுக்கு எதிரான பொருளாதார முற்றுகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரானிடமிருந்து எண்ணெய் உள்பட எந்தப் பொருளையும் எந்த நாடும் வாங்கக்கூடாது; இதை மீறி எந்த ஒரு நாடாவது ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் உட்பட, எதை வாங்கினாலும், அமெரிக்காவின் எதிரியாகக் கருதப்படும்' என்ற அறிவிப்பு இந்தியா போன்ற நாடுகளையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.
ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது' என்ற அமெரிக்காவின் அறிவிப்பை சீனா, ஜெர்மனி, துருக்கி, சிரியா போன்ற நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்தியாவோ, ஏற்கவோ, மறுக்கவோ முடியாத இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறது. 
இந்தியா, சவூதி அரேபியாவையடுத்து இராக், ஈரான் போன்ற நாடுகளிடமிருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. அதில் இராக்குக்குள் அமெரிக்கப் படை நுழைந்தபின், இந்தியாவால் அங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வாங்க முடியவில்லை. அதேபோன்று, கடாபி கொல்லப்பட்ட பின், ஈரானிலிருந்தும் எண்ணெய் வாங்க முடியவில்லை. இங்கெல்லாம் டாலர் இல்லாமல், இந்திய ரூபாயில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த காலம் இருந்தது. அது இப்போது அடைபட்டுவிட்டது. 
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபொழுதே அமெரிக்கா இதேபோன்ற முற்றுகை அறிவிப்பை வெளியிட்டது. அப்பொழுது, இந்தியா-ஈரான் குழாய் மூலம் எண்ணெய் பெறும் ஒப்பந்தம் கைவிடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி எண்ணெய் வாங்கியிருந்தால், பெட்போல்-டீசல் நமக்குக் குறைவான விலையில் கிடைத்திருக்கும். அது அமெரிக்க அச்சுறுத்தலால் அன்று கைவிடப்பட்டது. அதனால், மலிவான விலையில் எரிபொருள் கிடைக்கக்கூடிய வாய்ப்பை இந்தியா இழந்தது. ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கினால் அதற்கு ஈடாக இந்தியப் பொருள்களை வாங்கிக்கொள்ள இரான் ஒப்புக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் மிரட்டலால் அந்த வாய்ப்பையும் இந்தியா இழக்க நேரிட்டது.
ஆனால் இதே காலத்தில் சீனா, கொரியா, துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகள் இரானுடனான தங்களின் ஒப்பந்தத்தைக் கைவிடவில்லை. எனவே அந்த நாடுகள், 1990-இல் இருந்து தொடர்ந்து ஈரானிடமிருந்து எரிபொருள் பெற்று வருகின்றன. ஜெர்மனி, இப்போதும் டிரம்ப்பின் அறிவிப்பை நிராகரித்து விட்டது. ஐரோப்பிய நாடுகள் பலவும் டிரம்ப்பின் அறிவிப்பை ஏற்க மறுத்து விட்டன. 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற முடிவெடுத்தபின், டிரம்ப் இங்கிலாந்துக்குச் செல்கிறார். அமெரிக்காவின் 51-ஆவது மாநிலம்' என்று ஜான் பாஸ்டர் டல்லசால் வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து, டிரம்ப்பை அரசு மரியாதையுடன் வரவேற்றாலும், இங்கிலாந்து மக்கள் டிரம்ப்பின் வரவை எதிர்க்கின்றனர். டிரம்ப்பின் வர்த்தகப் போர் பிரகடனம் உலக அமைதிக்கு பேராபத்து ஏற்படுத்தக்கூடியது என்று ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் எச்சரித்து வருகின்றனர். 
டிரம்ப்பினுடைய பல அறிவிப்புகளில், புலம்பெயர்ந்து வருவோரைத் தடுப்பது, அமெரிக்கர்கள் அல்லாத பணியாளர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவது போன்ற அறிவிப்புகள், அமெரிக்க நண்பர்களாக இருந்த பல நாட்டவரை எதிரிகளாக்கி வருகின்றன. மெக்ஸிகோ நாட்டில் அதிபருக்குப் போட்டியிட்டவர்களில் டிரம்ப்பை விமர்சித்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்த பின்னணியில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோ ராணுவ பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று வேண்டிய டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு விழுக்காடு ராணுவ தளவாடங்களுக்காகச் செலவிட வேண்டுமென எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் இது சாத்தியமில்லை என்று மறுத்துள்ளன. 
2017 கணக்குப்படி, நேட்டோவுக்காக அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுமாகச் சேர்ந்து செலவிடும் மொத்த பணம் 1.053 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.69.41 லட்சம் கோடி) ஆகும். இதில் அமெரிக்கா 706.1 பில்லியன் டாலரை (சுமார் ரூ.48.38 லட்சம் கோடி) செலவிடுகிறது. இதற்கடுத்து, இங்கிலாந்து 61.5 பில்லியன் டாலர் (சுமார் 4.21 லட்சம் கோடி) செலவிடுகிறது. இதர ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து 285.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.19.57 லட்சம் கோடி) செலவிடுகிறார்கள். ஆக, மொத்த செலவில் 67 விழுக்காட்டை அமெரிக்கா தாங்க வேண்டியிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். 
இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை விளக்குவதற்கான ஆதாரங்களாகத் தெரிகின்றன. இதை, வர்த்தக வழியில் தீர்க்க முடியாத ஒரு புதிய நிலையிலும் அமெரிக்கா சிக்கியுள்ளது. 
கடந்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்கா, அமெரிக்க-சீன வர்த்தகத்தில், சீனாவிடமிருந்து ஆறு டிரில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை கடன் பெற்றுள்ளது. எனவே, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வரிப்போர் என்று கூறினாலும், அது இந்தியா போன்ற நாடுகளை மட்டும்தான் பாதிக்கக்கூடியதாக இருக்கும். சீனாவைப் பொருத்தவரையில் அது வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் மோதும் சக்தியைப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலை அதுபோன்று இல்லை. ஈரானுடன் ஒரு துறைமுகத்தை பலப்படுத்தவும், எண்ணெய்ப் படுகை ஒன்றை பயன்படுத்தவும் இந்தியா போட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
போர் எதுவும் தாமாக வெடிப்பது இல்லை. அவை வலுத்த நாடுகள் தாங்கள் வகுத்த வழியைக் கடைப்பிடிக்க கையாளும் கடைசி ஆயுதம் ஆகும். வணிகப் போர்கள் ஆயுதப் போர்களாக மாற்றப்படும். இந்தியா, அதன் வரலாற்றுப் பெருமைக்கு ஏற்ப, அந்த வலைக்குள் சிக்காது, தன் பாரம்பரிய வழியில் நடைபோடும் என்று நம்புவோம்.

கட்டுரையாளர்: 
முன்னாள் மாநிலச் செயலர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com