நடுப்பக்கக் கட்டுரைகள்

குற்றச்சாட்டு எதற்காக?

ப. இசக்கி

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி வருகிறார். ஒரு கட்சியின் மேடைப் பேச்சாளர் இப்படிக் கூறினால் அதனைப் பொருள்படுத்தாமல் விட்டுவிடலாம். ஆனால் குற்றச்சாட்டைக் கூறுபவர் மத்திய அமைச்சர். எனவே, அவர் சொல்வதில் ஏதேனும் பொருள் உண்டா எனப் பார்க்க வேண்டும்.
பொதுவாக, ஒரு மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து மத்திய அரசின் நுண்ணறிவுப் பிரிவு (இன்டெலிஜென்ஸ் பீரோ) மாநில காவல்துறைக்கு அறிக்கை அனுப்பும். மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படுவதும் உண்டு. அவ்வாறு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவோ அல்லது உள்துறை அமைச்சகமோ அறிக்கை அனுப்பி இருந்தால் அது மாநில காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிந்திருக்கும்.
தமிழ்நாடு-கேரளம்-கர்நாடக மாநில எல்லைகள் சந்திக்கும் மலை மாவட்டமான நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாகத்தான் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த 2016-இல் 117 முறை மாவோயிஸ்ட்கள் தென்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு 90-ஆக குறைந்துள்ளது. அதிலும் 86 கேரளத்திலும், 3 கர்நாடகத்திலும், ஒரே ஒரு "தென்படல்' மட்டும் நீலகிரியிலும் நிகழ்ந்துள்ளது. உள் மாவட்டங்களில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சிலர் அவ்வப்போது கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு, மாநில காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரோ, துணை முதல்வரோ இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, "பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் என்னும் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர். தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக அவரிடம் நம்பகமான தகவல் இருந்தால் அதை மாநில அரசுக்கு தெரிவிக்கலாம். அதைவிடுத்து இப்படி மத்திய அமைச்சர் ஒருவர் பேசக் கூடாது' என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கையின் தோல்விகளை மறைக்கவே மத்திய அமைச்சர் "தீவிரவாதம்' குறித்து பேசி வருகிறார் என்கின்றனர் திமுகவினர். 
மத்திய அமைச்சரின் பேச்சை ஆராய்ந்து பார்த்தால் இரண்டு விஷயங்கள் புலப்படும். முதலாவது "அரசியல்'. அதிமுக, பாஜகவுடன் இதுவரையில் நல்ல இணக்கமான உறவையே பேணி வருகிறது. எனினும், அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே சில நெருடல்கள் ஏற்படுகின்றன. பின்னர் "சமாதானம்' ஆகி விடுகின்றனர். எனவே, அதிமுகவை எப்போதும் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ளவும், திமிறினால் ஆட்சியை கலைக்கும் ஆயுதம் ஒன்று கையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவுமே இந்த பேச்சு எனக் கருத இடமுண்டு. அத்துடன், பாஜக-அதிமுக இடையே உள்ள உறவுச் சிதைவின் வெளிப்பாடாகவும் மத்திய அமைச்சரின் பேச்சு இருக்கலாம்.
கடந்த 1990-களில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தான் போகும் இடமெல்லாம் "தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது' என்பார். அப்போது திமுக ஆட்சி. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் ஆகாது. 1991-இல் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கூறி அப்போதைய பிரதமர் சந்திரசேகர் திமுக ஆட்சியைக் கலைத்தார். காங்கிரஸ் தயவில்தான் சந்திரசேகர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியும், பின்னர் அதனுடன் கூட்டணி சேர்ந்த அதிமுகவும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு. 
இரண்டாவது, மத்திய அமைச்சரின் பேச்சை வெறும் அரசியல் என ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பொதுநல இயக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவற்றில் சில, தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகளின் சித்தாந்தங்களின் அடிப்படையில் தமிழ் மொழி, இன, கலாசார பாதுகாவலர்கள் போர்வையில் புதுப்புது பெயர்களில் இயங்கி வருகின்றன. இந்த இயக்கங்கள் தமிழக மக்களின் உணர்ச்சிபூர்வமான பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு போராடுகின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் போன்றவையே இதற்கு உதாரணம். இதனால், அரசியல் கட்சிகளால் இவர்களைக் கண்டிக்க முடியவில்லை. 
தமிழ்நாட்டில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சில இயக்கங்களின் செயல்பாட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள், திறமையாளர்கள், கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்களும் கூட. எனவே, படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் விரக்தியில் இருக்கும் இளைஞர்கள், இவர்களின் வலிமையான பேச்சில் மயங்கிவிடுவதால் இந்த இயக்கங்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கு சில ஊடகங்களும் தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவு அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்களுக்கு காரணம், தமிழ்நாட்டில் "சுதந்திரம்' அதிகம் என அரசு கூறலாம். ஆனால் அரசியல் தலைமையின் பலவீனமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். 
தீவிர செயல்பாட்டாளர்களின் போராட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இவர்கள் மத்திய அரசின் திட்டங்களுக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாக பாஜகவினர் கருதுகின்றனர். அதன் வெளிப்பாடாக கூட மத்திய அமைச்சரின் பேச்சு இருக்கலாம். எனவே, அமைச்சரின் பேச்சை வெறும் "அரசியல்' என புறந்தள்ளிவிடாமல் கள நிலவரங்களை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு எந்நேரமும் போராட்டக் களமாக மாறி பொதுஅமைதி கெடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT