எண்ணித் துணிய வேண்டும்

மத்திய அரசு பத்து இணைச் செயலர் பதவிகளுக்கு நேரடி இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் அல்லாமல், வெளியிலிருந்து இந்தியப் பிரஜைகளை நியமிக்க முடிவு செய்து அதற்கு விண்ணப்பங்களையும்

மத்திய அரசு பத்து இணைச் செயலர் பதவிகளுக்கு நேரடி இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் அல்லாமல், வெளியிலிருந்து இந்தியப் பிரஜைகளை நியமிக்க முடிவு செய்து அதற்கு விண்ணப்பங்களையும் கோரியிருந்தது. மிகத் தெளிவாகவே "திறமையும் ஆர்வமும் உள்ள இந்தியப் பிரஜைகள் - தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம்' என்று அறிவித்திருந்தது. பதினைந்து ஆண்டு காலம் ஒரே துறையில் பணியாற்றிய அனுபவம், உள்ளிட்ட பல தகுதிகளையும் கட்டாயமாக்கி இருக்கிறது.
 "புதிய அணுகுமுறை, புதிய சிந்தனை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை' என்று மத்தியஅரசு கூறுகிறது. எதிர்க்கட்சிகளோ, "இது கார்ப்பரேட் முதலாளிகளை அரசு நிர்வாகத்தில் நுழைக்கும் முயற்சி' என்று கூறி இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியக் குடிமைப் பணிஅதிகாரிகள் மத்தியிலும் இருவித கருத்துகள் நிலவுகின்றன.
 ஒருசாரார், இது பல நல்லமாற்றங்களை உருவாக்கும் என்று கூறி இதனை வரவேற்கின்றனர். இன்னொரு சாரார், குடிமைப் பணிகளுக்கென்றே படித்து,பயிற்சி மேற்கொண்டு வந்திருப்பவர்களைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாக வெளியிலிருந்து நியமனம் செய்வது, ஏற்கெனவே பணியாற்றும் குடிமைப்பணிஅதிகாரிகளை அவமதிப்பதுபோல் உள்ளது என்று கூறி இதனை எதிர்க்கின்றனர். பொதுமக்களிடையே இது பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
 அரசின் உயரிய பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆட்களை நியமனம் செய்வது புதிதல்ல. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்,கேரள முதலமைச்சரின் நிதி ஆலோசகர் கீதா கோபிநாத், நந்தன் நீலகேனி என்று பலரைச் சுட்டிக் காட்டலாம். இப்படி நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள். அங்கு உயர் பதவிகளில் இருப்பவர்கள்.
 அவர்கள் அப்பதவிகளை உதறிவிட்டு வந்து இந்தியாவில் வேலை செய்யவில்லை. ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இப்பணி இருந்தது. பணிக்காலம் முடிந்ததும் அவர்கள் தத்தம் நாட்டுக்கும் வேலைக்கும் திரும்பப் போய்விட்டார்கள்.
 இப்போது மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதனால் விளையப் போவது நன்மையா? தீமையா?
 குடிமைப் பணிஅதிகாரிகளில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகையினர், மிகமிக நேர்மையானவர்கள். இவர்கள் நேர்மைக்குப் புறம்பானஎதையும் செய்யமாட்டார்கள். இவர்களது துறையில் தவறானஅரசியல் குறுக்கீடுகளைஅனுமதிக்கமாட்டார்கள். தவறு செய்யும் தலைமைக்குப் பணியவும் மாட்டார்கள். அரசியல்வாதிகளும் தங்களுக்குச் சாதகமாக இல்லையெனில் உடனடியாக இவர்களை வேறு துறைக்கு மாற்றி விடுவார்கள்.
 இரண்டாம் வகையினர், அரசியல் குறுக்கீட்டை விரும்பாதவர்களாக இருப்பினும் வெளிப்படையாக மோதாமல் முடிந்தவரை தவறானதிட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு, அரசியல் கட்சியினர் தவறாகச் சம்பாதிப்பதைத் தடுக்க முடியாவிட்டாலும், தங்கள் கைகள் கறைபடாமல் பார்த்துக் கொண்டுஒதுங்கிவிடுவார்கள்.
 மூன்றாவது வகையினர், "அரசியல்வாதிகளும் சம்பாதிக்கட்டும், நாமும் சம்பாதிப்போம்,' என்றுஎண்ணி, கிடைத்தவரை சம்பாதிப்பார்கள்.
 அரசின் ஒரு துறை ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறதுஎன்றுவைத்துக் கொள்வோம். அத்துறையின் அமைச்சர்,அத்துறையைப் பற்றிஅதிகம் தெரிந்திராத பட்சத்தில், அத்துறையின் அனுபவம் மிக்க குடிமைப்பணி அதிகாரிகளைக் கலந்தாலோசித்துவிட்டு, பிறகே அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும். திட்டத்தில் தவறுகள் இருப்பின் அவ்வதிகாரிகள் அவற்றைச் சுட்டிக் காட்டவேண்டும். அதனைஅரசும் ஏற்கவேண்டும்.
 அமைச்சர்களின் மனப்பாங்கினைமாற்றுவது நடக்கக்கூடியது என்று தோன்றவில்லை. அதிகாரிகளிலாவது புதிய நோக்கமுடையவர்களைக் கொண்டு வரலாமே. தைரியமும், உறுதியும் கொண்ட அதிகாரிகளின் தேவை இங்கேஅவசியமாகிறது.
 ஒரு நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டம் இன்னொரு நாட்டிலும் வெற்றியடையும் என்று சொல்ல முடியாது.
 தமிழக அரசு, யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைக் குறைக்க, தோட்டங்களிலும், தோப்புகளிலும் தேன்கூடுகள் அமைத்து தேனீ வளர்க்கவேண்டும் என்று ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசித்தது. இது ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். இந்தியாவில் இது சரிப்பட்டு வராது என்று வனத்துறை உயரதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.
 ஆனாலும் இத்திட்டத்தை அரசு கைவிடவில்லை. ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி உயரதிகாரி ஒருவர், ஒரு நாளிதழில், "இது பலமுறை விவாதிக்கப்பட்டு, அதிகாரிகள் பலரும் நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்புடைய திட்டமன்று', என்றுதெரிவித்ததாகஎழுதியிருந்தார். இப்படித் தைரியமாகத் "தவறு'என்று அடித்துச் சொல்லும் அதிகாரிகள் எத்தனை பேர் இருப்பார்கள்?
 உறுதியுள்ள, தகுதியுள்ள, நேர்மையான இந்தியரை இணைச்செயலர் பதவிகளுக்கு நியமனம் செய்வது தவறு என்று சொல்ல முடியாது. இந்த நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையான முறையில், அரசியல் தலையீடுகள் இன்றி செய்யப்படுமா என்று எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கின்ற ஐயப்பாடும் நியாயமானதே.
 பத்து பதவிகளுக்கு ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. அவை பரிசீலனையில் உள்ளன.
 ஒரு "கார்ப்பரேட்' முதலாளி விண்ணப்பித்துள்ளதாக வைத்துக்கொள்வோம். குறைந்தது பதினைந்து வருட அனுபவமுள்ள ஒருவர் ஒரு வணிகநிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பார். முக்கிய முடிவுகள் எடுக்க அவருக்கு முழு அதிகாரம் இருக்கும். அரசுநிர்வாகத்தில் உள்ளதுபோல் அவர் அரசியல்வாதிகளை அனுசரித்துப் போக வேண்டியதில்லை.
 சம்பளம் என்று பார்த்தால் அரசின் உயர் பதவிகளைவிடப் பன்மடங்குஅதிக சம்பளம் பெற்றுக் கொண்டிருப்பார். இத்தனை சாதகங்களையும் விட்டுவிட்டு இப்பதவியைவிரும்பி ஏற்பாரா? அப்படி வந்தால் அரசுஅவர்களைத் தன் விருப்பம்போல் ஆட்டிவைப்பது இயலுமா? பண மதிப்பிழப்பீட்டு விவகாரத்தில் திறமையாகச் செயல்பட்ட ரகுராம் ராஜன் அரசுடன் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியது நினைவிருக்கலாம்.
 ஒரு அரசுசாராஅமைப்பின் உயர் நிர்வாகியை எடுத்துக் கொள்வோம். அரசே பல சூழ்நிலைகளில் பல குழுக்கள் அமைத்துஅக்குழுக்களில் பல்வேறு சமூக ஆர்வலர்களை நியமித்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்கிறது. கேட்பதோடு சரி. அவற்றை நடைமுறைப்படுத்துகிறதா என்றால் கிடையாது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புக்கென "காட்கில்' கமிட்டி, "கஸ்தூரி ரங்கன் கமிட்டி'ஆகியவை அளித்த பரிந்துரைகள் என்னவாயின என்பது எல்லோருக்கும் தெரியும்.
 ஆர்வத்தோடு உழைத்து அரசுக்கு அறிக்கைகளும் சமர்ப்பித்துவிட்டு, அவ்வறிக்கைகள் கிடப்பில் போடப்படுவதைப் பார்த்து நொந்து போனசமூக ஆர்வலர்கள் பலர். சமூக நலனுக்காகத் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் இவர்கள் அரசின் தவறான கொள்கைகளுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.
 ஏற்கெனவே அரசின் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றஅதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். "ஒருமுறை சூடு பட்டது போதும்' என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். இவர்களுக்கு பணத் தேவையுமில்லை, ஓய்வுக் காலத்தின் நிம்மதியை இழக்கவும் இவர்கள் விரும்பமாட்டார்கள். அதையும் மீறி வருபவர்கள் நிச்சயம் அரசாங்கத்தின் கைப்பாவையாக இருக்கமாட்டார்கள்.
 ஆக, வெளியிலிருந்து வருபவர்கள் மிக நேர்மையானவர்களாக, மன உறுதி உள்ளவர்களாக, துறை சார்ந்த பட்டறிவு உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே, நல்ல மாற்றங்களைக் கொண்டுவர இயலும். இந்தியக் குடிமைப்பணிஅதிகாரிகள் அல்லாதவர்கள் இப்பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
 குடிமைப்பணித் தேர்வுகள் மிகவும் கடினமானவை.என்றாலும் மற்ற போட்டித் தேர்வுகளைப் போல் இவற்றுக்கும் ஏகப்பட்டபயிற்சி வகுப்புகள் உள்ளன. பலரும் பயிற்சி மேற்கொண்டு, அதில் சிலர் தேர்வுகளில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அதுமட்டும் அவர்களுக்கு நிர்வாகத் திறமையைஅளித்துவிடும் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குத் தரப்படும் கடுமையான பயிற்சிகளால்தான் அவர்கள் சிறந்த நிர்வாகிகள் ஆகிறார்கள்.
 அதேபோல் இந்த நியமனங்களிலும் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குச் சிறந்த பயிற்சியும் கொடுக்கப்பட்டால், அவர்களால் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.
 எதிர்க்கட்சியினர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது ஒருசிறு தவறு நேர்ந்தாலும் அதை பகிரங்கப்படுத்துவார்கள். சிறு தவறு நடந்தாலும் அரசுக்கு அவமானம். நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் வெளியேறினால், அரசு எதிர்க்கட்சிகளின் நகைப்புக்கும், கண்டனத்துக்கும் உள்ளாக நேரிடும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு இதை மிகவும் கவனமாகக் கையாளும் என்று எதிர்பார்க்கலாம்.
 
 கட்டுரையாளர்:
 சுற்றுச்சூழல் ஆர்வலர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com