முடிவுக்கு வரட்டும்

உலகம் முழுவதும் செய்தியாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும், ஆளும் அரசுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு

உலகம் முழுவதும் செய்தியாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும், ஆளும் அரசுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கருத்துகளையும், செய்திகளையும் பதிவு செய்யும் செய்தியாளர்கள்தான் பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள்.
 கடந்த ஆண்டு கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கெüரி லங்கேஷ், நவீன் குப்தா, திரிபுராவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சாந்தனு பெüமிக், சுதீப் தத்தா பெüமிக் ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களில் சாந்தனு பெüமிக்கை தவிர மற்ற அனைவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நிகழாண்டில் கடந்த மார்ச் மாதம் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் நிஷ்சல், ஜூன் மாதம் "ரைஸிங் காஷ்மீர்' ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம், சமூக விரோதச் செயல்கள், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக செய்திகளை பிரசுரித்தமைக்காகவும், செய்தி சேகரிக்கச் சென்றபோதும் கொல்லப்பட்டவர்கள்.
 உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் (2017) மட்டும் 71 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம் இவர்கள் அனைவரும் செய்தியாளர்கள் என்பதே. அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், மக்களின் பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதற்குப் பாலமாக இருப்பதும் ஊடகங்களும், அவற்றில் பணிபுரியும் செய்தியாளர்களும்தான்.
 எந்த நாடாக இருந்தாலும், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
 அண்மையில் உலகையே அதிர்ச்சியுடன் பார்க்க வைத்தது சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை. சவூதி அரேபிய அரச குடும்பத்தை விமர்சித்து எழுதி வந்தவர்தான் இந்த கஷோகி.
 சவூதி அரசுக்கு ஒரு காலத்தில் இவர் ஆலோசகராக இருந்தவர். சவூதி இளவரசருக்கு நெருக்கமானவர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அதிருப்தியின் காரணமாக அவர்களிடமிருந்து விலகிய கஷோகி, அரச குடும்பத்தை விமர்சித்து பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.
 இதனால், அவரை கைது செய்ய சவூதி அரசு திட்டமிட்டதாகவும், அதன் விளைவாக நாட்டைவிட்டு அவர் வெளியேறி அமெரிக்காவில் குடிபுகுந்ததாகவும் தெரிகிறது. அங்கு 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.
 துருக்கியைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த அவர், முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் சென்றார். அதுதொடர்பான சில ஆவணங்களை பெறுவதற்கு அக்டோபர் 2-ஆம் தேதி வருமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் கஷோகி.
 அக்டோபர் 2-ஆம் தேதி. பிற்பகல் 1.15 மணி அளவில் சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் நுழைகிறார் சுஷோகி. சில மணி நேரம் கடந்தும் அவர் திரும்பவில்லை. உள்ளே சென்றவர் திரும்பி வருவார் என்று தூதரகத்துக்கு வெளியே அவரது வருங்கால மனைவி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். வெகு நேரம் அவர் காத்திருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அவரது நம்பிக்கை வீண்போனது.
 கஷோகி திரும்பி வராததால் இந்த விவகாரம் பூதாகரமாகியது. முதலில், சவூதி அரேபிய அரசு அவர் தூதரகத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார் என்று கூறியது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன. இதனால், சர்வதேச அளவில் இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட பெரும்பாலான உலகத் தலைவர்கள் கஷோகியின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
 அவர் கொலை செய்யப்பட்டார் என்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு சவூதி அரசு கூறியது. கஷோகி கொலை செய்யப்பட்ட தினத்தில் சவூதியிலிருந்து தனி விமானத்தில் அந்நாட்டு அதிகாரிகள் இஸ்தான்புல் வந்து அதே தினம் திரும்பியிருக்கின்றனர் என்பதை சர்வதேச ஊடகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
 இதனால், சந்தேகம் மேலும் வலுத்தது. பின்னர், துருக்கி உயரதிகாரி கூறிய செய்தி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "தூதரகத்துக்குள் நுழைந்ததும், அவர் கொலை செய்யப்பட்டார். பின்னர், அவரது உடல் சிதைக்கப்பட்டு ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது' என்று அவர் கூறினார். இந்தத் தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 இந்த விவகாரத்தை துருக்கி அரசு உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவரது மரணம் புரியாத புதிராக இருக்கிறது.
 பத்திரிகையாளர்களின் கொலைகளை விசாரிப்பதில் இந்தியாவும் மெக்ஸிகோவும் மெத்தனம் காட்டி வருவதாக "சர்வதேச பத்திரிகை நிறுவனம்' (ஐபிஐ) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
 ஜமால் கஷோகியின் மரணத்தோடு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது முடிவுக்கு வரட்டும். நேரம் காலம் பார்க்காமல் சமூகத்துக்காகப் பணியாற்றிவரும் செய்தியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com