நடுப்பக்கக் கட்டுரைகள்

கருத்து வேறுபாடு கூடாது 

எஸ். ராமன்

வங்கித் துறையில் "வாராக்கடன்' எனும் நுரைப் பகுதி பொங்கி வழிந்து, அதை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் அந்தத் துறையில் சில நீர்க்குமிழிகள் தோன்றி, சலசலப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.
 "இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்ட் ஃபைனான்ஸியல் சர்வீஸஸ்' (ஐஎல் அண்ட் எஃப்எஸ்) என்ற வங்கி சாரா நிதி நிறுவனத்தின் தொய்வடைந்த நிதி நிலைமை குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்தான் இந்த நீர்க்குமிழிகளுக்கு அடிப்படை காரணம்.
 மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட இந்த நிறுவனம், "சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா' (சிபிஐ), "ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்' (ஹெச்டிஎஃப்சி) "யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' (யூடிஐ) ஆகிய நிதி நிறுவனங்களின் கூட்டணியில், 1987-ஆம் வருடம் தொடங்கப்பட்டது.
 கட்டமைப்புத் துறையில், நீண்ட கால அடிப்படையில் கடன்களை வழங்குவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். நாளடைவில், இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாறி, தற்போது இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சில இந்திய வங்கிகளின் கூட்டணியில், எல்ஐசி முக்கியப் பங்குதாரராக அங்கம் வகிக்கிறது.
 "ஐஎல் அண்ட் எஃப்எஸ்' என்ற குடையின் கீழ், அந்தக் குழுமத்தை சார்ந்த 256 நிறுவனங்கள், நீண்ட கால முதலீடுகள் சார்ந்த பல துறைகளில் செயல்படுகின்றன.
 கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை, குழுமம் சார்ந்த சில நிறுவனங்கள், முதிர்ச்சி அடைந்த கடன் பத்திரங்கள், வைப்பு தொகை, குறுகிய கால கடன் ஆகியவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி, நிதித் துறையில் கலக்கத்தை ஏற்படுத்தின.
 2008-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் திடீர் நிதி நெருக்கடியில் சிக்கி மூடப்பட்ட "லெஹ்மன் பிரதர்ஸி'ன் வீழ்ச்சியோடு, ஒப்பிட்டு, பொருதாளார வட்டாரங்களில் கருத்துகள் பரவ ஆரம்பித்தன.
 இம்மாதிரி பீதி பரவினால், அது மற்ற நிதி நிறுவனங்களை பாதிக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, இந்த விவகாரத்தில் தலையிட்டு, நிறுவனத்தின் இயக்குனர் குழுவை கலைத்துவிட்டு, "கோடாக் மஹிந்திரா' வங்கியின் தலைவரான உதய் கோடாக் தலைமையில் புதிய குழுவை அமைத்தது.
 இந்த நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, அதற்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கிய வங்கிகள், அவற்றின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் "மியூச்சுவல் ஃபண்ட்' போன்ற நிதி அமைப்புகள் போன்றவையும் இந்த நிகழ்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதுதான், இந்த பிரச்னை பூதாகரமாக வளர்ந்ததற்குக் காரணமாகும்.
 கிராமப்புற பயனாளிகளுடனான உறவு, சிறு மற்றும் குறுந் தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவிகளில், நிதி சாரா வங்கிகளின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது எனலாம்.
 சுமார் 22.1 லட்சம் கோடி ரூபாய் அளவில் நிதி சுழற்சி செய்யும் 11,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த துறையில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
 தாங்கள் செயல்படும் பகுதிக்கேற்ப கடன் திட்டங்களை வகுத்து, அந்தந்தப் பகுதிக்கான கடன் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் இம்மாதிரி நிதி நிறுவனங்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தில் தனித்த இடம் உண்டு.
 ஆனால், இவற்றில் சிறு மூலதனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஏராளம். இவற்றின் மீதான ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு அவ்வளவு பலமாக இல்லை என்று சொல்லலாம்.
 நிதி நிறுவனங்கள், குறுகிய கால அடிப்படையில் பெறப்பட்ட நிதி ஆதாரங்களை, நீண்ட கால கடன் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது என்பது அவற்றின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடும்.
 பெறப்பட்ட கடன்களை விட சொத்து மதிப்பு அதிகமாக இருந்தாலும், கடனை திருப்பி செலுத்தும் நேரம் வரும்போது, சொத்தை விற்று பணமாக்க முடியாவிட்டால், அந்த நிறுவனம் கடன் தவணையை திருப்பி செலுத்த முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இம்மாதிரி தத்தளிக்கும் நிதி நிலைமை "அùஸட் லையாபிலிடி மிஸ்மேட்ச்' என்று அழைக்கப்படுகின்றது.
 பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் "ஐஎல் அண்ட் எஃப்எஸ்' நிறுவனமும் இம்மாதிரிக் குறைபாடுகளுடன்தான் செயல்பட்டு வந்திருக்கிறதோ என்ற சந்தேகம் பொருளாதார வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
 அதே நிலையில் இயங்கி கொண்டிருக்கும் மற்ற நிதி சாரா நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
 இம்மாதிரி குறைகளுடன் இயங்கி கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மூட வேண்டிய சூழ்நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால், கிராமப்புறத் தொழில்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதகம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
 இந்த காரணங்களால்தான், "ஐஎல்அண்ட் எஃப்எஸ்' பற்றிய செய்திகள் கசியத் தொடங்கியவுடன், இந்தியப் பொருளாதாரச் சந்தைகள், பல வாரங்களுக்கு மேலாக கடும் அதிர்வுகளை சந்தித்தன. அதன் எதிரொலியாக, லட்சம் கோடி ரூபாய் அளவில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 திடீரென்று வெளிப்பட்ட இந்த பெரிய நிறுவனத்தின் பொருளாதார நிலைமை பற்றிய செய்திகள், பல கேள்விகளை எழுப்பி உள்ளன. ஒரு நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்கள் இருந்தாலும், அவை ஒரே நாளில் தலை தூக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
 பிரபல தர மதிப்பீட்டு நிறுவனங்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில்தான், பல பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 பல வருடங்களாக "ஐஎல் அண்ட் எஃப்எஸ்' நிறுவனத்திற்கு முதலீட்டுக்கான உயர் மதிப்பீடுகளை அளித்து வந்த மதிப்பீட்டு நிறுவனங்கள், திடீரென்று மதிப்பீட்டைத் தாழ்த்தி உள்ளன.
 எனவே, தர மதிப்பீட்டுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 மேலும், இந்த நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்து வந்த தணிக்கையாளர்களின் பொறுப்பும் கேள்விக்குறியாகிறது. தணிக்கையாளர்கள் எச்சரிக்கை செய்தும், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அவற்றைப் புறக்கணித்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
 பொருளாதார வளர்ச்சியை மனத்தில் கொண்டு, வங்கி சாரா நிறுவனங்களின் நிதி சுழற்சியை ("லிக்யூடிடி') வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அரசு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது.
 அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, "கடந்த ஆண்டை விட, இந்த நிதி ஆண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான நிதி சுழற்சி 48.30 சதவீதம் அதிகரித்துள்ளது' என்ற தகவல் வெளியிடப்பட்டது.
 "பொருளாதார சந்தையில் நிலவும் மந்த நிலையை ஓரளவு ஈடு கட்டும் வகையில், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக, பதினோரு வங்கிகளின் மீதான தீவிர கண்காணிப்பு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த முற்படவேண்டும்' என்ற கட்டளை(!) அரசின் நிதித்துறை மூலம் எழுப்பப்பட்டது.
 இம்மாதிரி அறிவிப்புகளை தங்கள் நிர்வாக சுதந்திரத்தின் மீது எய்யப்பட்ட ஏவு கணைகளாகக் கருதிய ரிசர்வ் வங்கி, அதன் பங்கிற்கு, "இவ்விஷயங்களில் அரசின் தலையீடு தவிர்க்கப்படவேண்டும்' என்ற ரீதியில் பதில் குரல் கொடுத்தது.
 இந்த விவாதம், மத்திய அரசிற்கும்,ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆன நேரடி மோதலாக பொருளாதார வட்டாரங்களில் கருதப்பட்டது.
 ஆனால், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள மத்திய அரசு, தனது பிடியை மேலும் இறுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி சட்டம், 7-ஆவது பிரிவின் கீழ், அந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி, வங்கி கடன் சார்ந்த சில விஷயங்களில், தனது கொள்கை முடிவுகளை தளர்த்தி, அரசின் ஆலோசனையை ரிசர்வ் வங்கி ஏன் செயல்படுத்தக்கூடாது? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
 "பொது நலன் கருதி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு சில கட்டளைகளை இடலாம்' என்பதுதான் 7-ஆவது பிரிவின் சாராம்சமாகும். ஆனால், 1991-ஆம் வருடம், நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த வேளையில்கூட இந்தப் பிரிவு மத்திய அரசால் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்த அசாதாரண நிகழ்வு, ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை மத்திய அரசு முடக்குவதற்கான முயற்சியின் வெளிப்பாடே என்ற கருத்து வந்து கொண்டிருக்கிறது.
 "நாட்டின் மத்திய வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடுவது ஏற்க கூடியது அல்ல' என்ற கருத்தை சர்வதேச நிதி மையம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள், ஆரோக்கியமான விவாதங்களாக மாற வேண்டும். அவ்விவாதங்களால் விளையும் ஆய்வுகளும் ஆலோசனைகளும் நாட்டின் பொருளாதார தடைகளை நீக்கப் பயன்படவேண்டும்.
 அதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
 
 கட்டுரையாளர்:
 வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT