மீளுமா யேமன்?

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி கடற்கரையில் உயிரிழந்து கிடந்த சிரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு வயதுச் சிறுவன் ஆலன் குர்தியின் புகைப்படம் உலகையே உலுக்கியது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி கடற்கரையில் உயிரிழந்து கிடந்த சிரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு வயதுச் சிறுவன் ஆலன் குர்தியின் புகைப்படம் உலகையே உலுக்கியது. அகதிகள் குடியுரிமை தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் கொள்கை முடிவுகளே மாறக் காரணமாக இருந்தது அந்தப் புகைப்படம்.
 அதேபோல, யேமன் நாட்டைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி அமல் ஹூசைனின் எலும்பும் தோலுமான புகைப்படம் "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பின்தான் யேமனில் நடக்கும் கொடுமையின் தீவிரத்தை உலகம் சற்று உணரத் தொடங்கியது.
 சிறுமி அமல் ஹூசைன் மட்டுமல்ல, யேமனில் சுமார் நான்கு லட்சம் சிறார்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டு, லட்சக்கணக்கானோரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கி தொடர்ந்து வருகிறது.
 மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. "இந்தச் சண்டை நிறுத்தப்படாவிட்டால், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பஞ்சத்தை யேமன் சந்திக்கும்' என எச்சரித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டெரஸ்.
 அரபு உலகின் ஏழ்மையான நாடான யேமனின் மக்கள்தொகை 2.8 கோடி. சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான அரசை, 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹெளதி எனும் கிளர்ச்சிப் படையினர் கவிழ்த்து, தலைநகர் சனா உள்பட நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றினர்.
 ஈரானின் ஆயுத உதவியுடன் செயல்படுவதாகக் கூறப்படும் இந்த ஹெளதி கிளர்ச்சிப் படைக்கு எதிராகவும், அதிபர் ஹாதி தலைமையிலான அரசை மீண்டும் பதவியில் அமர்த்தும் நோக்குடனும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் தலைமையிலான கூட்டணி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் யேமனில் புகுந்தது.
 தம் அண்டை நாடான யேமனில் ஈரானின் கை ஓங்குவதை விரும்பாததுதான் சவூதியின் தலையீட்டுக்குக் காரணம். யேமன் சண்டை மூலம் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு ஆயுத விற்பனை செய்யலாம் என்பதுதான் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலையீட்டுக்குக் காரணம்.
 யேமனின் பிரச்னைகள் தீர ஒரே வழி, அங்கு நடைபெறும் சண்டை நின்றுபோவதுதான். இதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பல்வேறு முரண்பாடுகளால் அத்தீர்வு எட்டப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. யேமனில் அமைதி நிலவ வேண்டும் எனக் கூறும் அமெரிக்காவும், பிரிட்டனும் சவூதியின் வான்வழித் தாக்குதலுக்கு உதவி செய்கின்றன. சவூதியின் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் உதவியை இந்த இரு நாடுகளும்தான் செய்கின்றன. அந்த உதவியை நிறுத்தினால், சவூதியின் விமானத் தாக்குதலாவது முடிவுக்கு வரும்.
 அதாவது, "நாளைமுதல் தாக்குதல் நிறுத்தப்படும்' என அமெரிக்காவும், பிரிட்டனும் சொன்னால் அதை கேட்பதைத் தவிர சவூதிக்கு வேறு வழி கிடையாது. ஆனால், சவூதியுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள், ஆயுத விற்பனை காரணமாக அமெரிக்காவும், பிரிட்டனும் அதற்கு முன்வருவதில்லை.
 இந்த ஒத்துழைப்பின்மை காரணமாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு போதிய வெற்றி கிடைப்பதில்லை. யேமன் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஜெனீவாவில் கடந்த செப்டம்பர் மாதம் ஐநா சபை ஏற்பாட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
 நவம்பர் மாதம் மீண்டும் பேச்சு நடைபெறும் என யேமனுக்கான ஐநா தூதர் மார்ட்டின் தெரிவித்திருந்த நிலையில், அதில் உள்ள பல சவால்கள் காரணமாக, பேச்சுவார்த்தை இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிப்போகும் எனத் தெரிவித்துள்ளார். யேமனின் சண்டைநிறுத்த தீர்வுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 யேமன் மக்களின் முக்கிய உணவு கோதுமை. அந்நாட்டின் மொத்த நுகர்வில் வெறும் ஐந்து சதவீதமே அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி 95 சதவீதத்திற்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. ஆனால், தற்போது நடந்துவரும் சண்டையால் கோதுமை இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், விம்ôன நிலையம், துறைமுகம் என எல்லா இடங்களிலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதால் நாட்டின் உள்கட்டமைப்பே சிதைந்து போய் உள்ளது.
 கடுமையான பண வீக்கம் காரணமாக கிடைக்கும் உணவுப் பொருளையும் விலை கொடுத்து வாங்க இயலாத சூழல். உணவுப் பஞ்சம் காரணமாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்துபோவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
 சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சவூதிக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான எதிர்வினை ஆற்றின. "சவூதி இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்' என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கடுமை காட்டினார்.
 அதே சவூதியால் யேமனில் தினம் தினம் பச்சிளம் குழந்தைகள் செத்து மடியும் விஷயத்தில் உலக நாடுகள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை என்பதுதான் நிதர்சனம்.
 யேமன் தற்போது எதிர்கொண்டிருக்கும் பஞ்சம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து மிச்சமிருக்கும் மக்களை மீட்க வேண்டியதும் அதே மனிதர்கள்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com