திரைப்படத்தால் விழிப்புணர்வு

இன்று "கூகுளி'ல் அதிகம் தேடப்படும் தகவலாக இருப்பது "49 பி'. காரணம், அண்மையில் வெளிவந்த "சர்கார்' திரைப்படம். இந்தப் படத்தின் மையக் கருவே தேர்தல் விதிமுறையின் "49 பி' பிரிவை பயன்படுத்துவதைப் பற்றியதுதா

இன்று "கூகுளி'ல் அதிகம் தேடப்படும் தகவலாக இருப்பது "49 பி'. காரணம், அண்மையில் வெளிவந்த "சர்கார்' திரைப்படம். இந்தப் படத்தின் மையக் கருவே தேர்தல் விதிமுறையின் "49 பி' பிரிவை பயன்படுத்துவதைப் பற்றியதுதான்.
 வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் செல்லும் ஒருவரின் வாக்கை ஏற்கெனவே வேறொருவர் கள்ள வாக்காகப் பதிவு செய்திருந்தால், வாக்களிக்காத அந்த வாக்காளருக்கு தேர்தல் விதிமுறை "49 பி'-யின்படி அவரின் வாக்கை மீண்டும் போட அனுமதி அளிக்கலாம் என்று தேர்தல் விதிமுறையை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளது இந்தப் படம்.
 "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்கிற "49 ஓ' குறித்து ஏற்கெனவே அறிந்துள்ள வாக்காளர்களுக்கு இந்த "49 பி' குறித்த தகவல் புதிதாக இருப்பதால், பொதுமக்களிடையே இந்த விதிமுறை தற்போது அறிமுகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனால் "49 பி' குறித்து அறிந்துகொள்ள விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
 இந்த விதிமுறை தற்போது புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஏற்கெனவே இருந்த இந்த விதிமுறையைப் பெரும்பாலானோர் பயன்படுத்தாததால் இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால் இது பரவலாக அறியப்படவில்லை.
 அனைத்துத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, சிலர் வெறுப்பில் வாக்குச்சாவடி பக்கமே தலை காட்டாமல் இருந்தனர். இவர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும். அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக "49 ஓ' கொண்டுவரப்பட்டது. இதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "நோட்டா' என்ற பொத்தானும் புதிதாக அமைக்கப்பட்டது.
 இதன் பிறகு, யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் இருந்த பலரும் தங்கள் வாக்கை "நோட்டா'வில் பதிவு செய்ததால் பல வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் உயர்ந்தது. இதில் ஒரு சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை விட "நோட்டா'வுக்கு அதிக வாக்குகள் விழுந்ததும் ஆச்சரியப்படுத்தியது.
 தேர்தல் ஆணையம் "49 ஓ'வை விளம்பரப்படுத்தியதுபோல் "49 பி' குறித்து விளம்பரப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒருவரின் வாக்கு கள்ள வாக்காகப் போடப்பட்ட பின் "49 பி' என்ற விதிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் தன் வாக்கைப் பதிவு செய்தால் பல குழப்பங்கள் ஏற்படலாம் என்று தேர்தல் ஆணையம் நினைத்திருக்கலாம்.
 நாடு முழுவதும் வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் முறை இருந்தபோது அதிக அளவில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசியல் கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் ஆரம்பத்தில் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் மீதும் சில அரசியல் கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.
 எந்த ஒரு பொத்தானை அழுத்தினாலும் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக, அதாவது அவர்களின் சின்னத்துக்கே வாக்குகள் பதிவாவதாக பல மாநிலங்களிலும் உள்ள முக்கிய கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. அதனால், மீண்டும் பழையபடி வாக்குச் சீட்டிலேயே வாக்களிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என பல அரசியல் கட்சிகள் தற்போது தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.
 இதையடுத்து, கடந்த தேர்தலின்போது, வாக்களிக்கும் ஒருவர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வசதியையும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கொண்டுவந்தது தேர்தல் ஆணையம். இதனால் வாக்களித்தவர்கள் தங்கள் வாக்கு உரிய வேட்பாளருக்குச் சென்று சேர்ந்து விட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கள்ள வாக்குப் போடுவதை மட்டும் இதுவரை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை.
 தற்போது "சர்கார்' படத்தால் இதுகுறித்து இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. "49 பி' குறித்து அறிந்துகொள்ள கூகுளில் தேடுவோரில் தமிழகம், கேரளம், புதுவையைச் சேர்ந்தவர்கள் முதல் மூன்று இடங்களிலும், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் தாக்கம் அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் தெரியும்.
 இன்னொன்று, இந்த "49 பி' விதிமுறையால் கள்ள வாக்கு போடுவதைத் தடுக்க முடியாது. ஒருவரின் வாக்கு, கள்ள வாக்காகப் பதிவு செய்யப்பட்டால் வாக்களிக்க உரிமையுள்ள அந்த நபர் "49 பி' விதிமுறையைப் பயன்படுத்தி தன் வாக்கைப் பதிவு செய்யலாம்.
 அவர் தன் வாக்கைப் பதிவு செய்து விட்டதாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தேர்தல் விதிமுறை கூறுகிறது. ஆனால் இவரின் வாக்காக மற்றொருவரால் போடப்பட்ட கள்ள வாக்கு போட்டது போட்டதுதான். அது வாக்கு எண்ணிக்கையில் சேர்ந்துவிடும்.
 இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் தேர்தல்களில் தங்கள் வாக்கு கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டால் "49 பி' என்ற இந்த விதிமுறையை அதிகமானோர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதில் பெரும் சிக்கல் வராமல் இருக்க வேண்டுமானால் கள்ள வாக்குப் போடுவதை முற்றிலும் தடுப்பது குறித்த புதிய வழிமுறையை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.
 பல சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைத்துள்ளதுபோல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com