பிள்ளையார் பிடிக்கப்போய்...

கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் நடந்த திடீர் அரசியல் மாற்றங்கள், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக அமைந்தன. ஒரு பிரதமர் பதவியில் இருக்கும்போதே,

கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் நடந்த திடீர் அரசியல் மாற்றங்கள், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக அமைந்தன. ஒரு பிரதமர் பதவியில் இருக்கும்போதே, அதிபர் மைத்ரிபால சிறீசேனா இன்னொரு பிரதமருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்றத்தைக் கூட்டாமலேயே, பிரமதர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்றுவதாக அறிவித்தார்.
 சர்வதேச நாடுகளின் கண்டனத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைத் கூட்டுவதாக அறிவித்தார் அதிபர் சிறீசேனா. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்ட அறிவித்த தேதியை அதிபர் மீண்டும் மீண்டும் தள்ளிப் போட்டார். அதிபரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார் நாடாளுமன்ற அவைத் தலைவர்.
 ராஜபட்சவுடன் பொறுப்பேற்ற மனுஷா நாணயக்காரா தன்னுடைய அமைச்சர் பதவியை விட்டு விலகினார். அதிபர் மைத்ரிபால நடந்து கொண்ட விதத்தை உலகமே விமர்சித்தது. இறுதியாக இப்போது நாடாளுமன்றத்தையே கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார் அதிபர் சிறீசேனா.
 பெரும்பான்மை பெறுவதற்குக் குதிரை பேரம் நடத்தி 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மைத்ரிபால, ராஜபட்ச ஆகியோரால் பெறமுடியாமல் போனதுதான், அவை கலைப்புக்குக் காரணம் என்று தெரிகிறது. அதனால் ஜனநாயக நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, இறுதியில் அவையையே கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 ராஜபட்சவும், அவரின் சகோதரர் பசிலும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுவிடலாம் என்று முடிவு செய்தனர். அதுதான் இலங்கை நாடாளுமன்றக் கலைப்பின் நிஜமான பின்னணி. இப்போது ராஜபட்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியில் சேர்ந்திருப்பதே, தனக்கென்று ஒரு கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்துடன்தான் என்று தெரிகிறது.
 அதிபர் மைத்ரிபால சிறீசேனா நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டபோது, அவர் வழங்கிய 9 பக்க அறிக்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க இயலாது; இன்னும் பதவிக்காலம் இருக்கிறது; நிதிநிலை மசோதா குறித்தான விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று சுட்டிக்காட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சரத் என் சில்வா, முன்னாள் சபாநாயகர் விஜயமு லொக்கு பண்டார ஆகியோரிடம் மைத்ரிபால சிறிசேனா ஆலோசனை கேட்டிருந்தார். அவர்கள் மைத்ரி விரும்பியவாறு அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். அதனடிப்படையில்தான் இலங்கை நாடாளுமன்றத்தை 09/11/2018அன்று நள்ளிரவில் மைத்ரிபால சிறீசேனா கலைத்தார்.
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, "இனிமேல் நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம்' என்று முன்னாள் அதிபர் ராஜபட்ச விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை. "ராஜபட்சவிற்கு ஆதரவளியுங்கள்' என்று ஒரு காலத்தில் வெளியிடப்பட்ட பாலசிங்கத்தின் காணொளியைக்கூட சமூக ஊடகங்களில் அவருடைய ஆதரவாளர்கள் வெளியிட்டனர். ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாகத் தனது கெüரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அதிபர் சிறீசேனா ஆளாக நேர்ந்திருக்கிறது.
 இலங்கையில் இதுபோல அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்படுவதும், மதிக்கப்படாமல் போவதும் புதிதொன்றுமல்ல. இதுவரை தமிழர்கள், சிங்களர்கள் என நேரடியாக பிரச்னைகள் இருந்து வந்தன. ஆனால், இப்போது சிங்களர்களுக்குள்ளேயே சிக்கல் தொடங்கி யுள்ளது. இதுவொரு வித்தியாசமான சூழல்.
 மைத்ரிபால, ராஜபட்ச, ரணில் என்ற முக்கோண அரசியல், அதிகாரத்தைப் பிடிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் வியூகம் வகுக்க ஆரம்பித்துவிட்டது.
 அரசியல் சதுரங்கத்தின் இன்னொரு பக்கத்தில், முன்னாள் அதிபரான சந்திரிகாவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் திடீர் திருப்பம்.
 தமிழர்களுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட 10-க்கும் மேலான ஒப்பந்தங்களை, ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் குப்பைத் தொட்டியில்தான் போட்டார்கள். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது 1949-லிருந்தே நடந்து வருகிறது. 1949-இல் சால்பரி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29-இன்படி மலையகத் தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. 1956-இல் அனைத்தும் சிங்களமயமே என்று அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. 1978-இல் அதிகாரங்கள் அனைத்தும் அதிபருக்கே என்று திருத்தப்பட்டது. நடந்து முடிந்த கடைசித் தேர்தலில் மைத்ரிபால சிறீசேனா அதிபரான பிறகு 2015-இல் 19-ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 இந்தப் பின்னணியில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ராஜபட்ச - சிறீசேனா கூட்டணிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது.
 இப்போது சிங்களர்களின் வாக்குகள் ராஜபட்ச - சிறீசேனா, ரணில், சந்திரிகா என்று பிளவுபடுமா, யாராவது ஒருவருக்கு சாதகமாக மாறுமா என்பதைப் பொருத்துத்தான் வருங்கால இலங்கை அரசியல் நகரும். ராஜபட்சவும் விலகிய நிலையில், சிறீசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பலவீனமடைந்து விட்டிருக்கிறது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாகி இருக்கிறது அதிபர் சிறீசேனாவின் முடிவு!
 
 கட்டுரையாளர்:
 செய்தித் தொடர்பாளர்,
 திராவிட முன்னேற்றக் கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com