வயது ஒரு தடையல்ல...

எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை

எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
ஒளவையார், மாணவர்கள் பயன் பெற ஆத்திச்சூடி, மக்களும் மன்னனும் மகிழ்ச்சியாக வாழ கொன்றை வேந்தன், மக்களுக்குச் சேவையாற்றுவோருடைய குணநலன் அறிய மூதுரை, மக்கள் அனைவரும் நல்வழியில் நடந்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள நல்வழி ஆகிய நான்கு நூல்களைத் தனது முதுமைக் காலத்தில்தான் படைத்தார். 
கேரள மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 18.5 லட்சம் பேர் எழுத்தறிவற்றவர்களாக இருப்பது தெரியவந்தது. எனவே, இளமைக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கேரளம் நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக அக்ஷரலக்ஷம் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு. 
இந்த எழுத்தறிவு தேர்வில் கலந்து கொண்ட 43,330 பேரில் 42,933 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஆலப்புழை மாவட்டம், செப்பாட் கிராமத்தைச் சேர்ந்த 96 வயது காத்தியாயினி அம்மாள் 100-க்கு 98 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், எழுத்துத் தேர்வில் 40-க்கு 38 மதிப்பெண்களும், கணிதம் மற்றும் வாசித்தல் தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இதன் மூலம் கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். 
குழந்தைகள் படிப்பதைப் பார்க்கும் போது தமக்கும் ஆசை ஆசையாக இருந்ததாகவும், சிறு வயதில் கல்வி கற்க தனக்கு வாய்ப்புக் கிட்டவில்லையென்றும், அம்மூதாட்டி கூறியுள்ளார். அடுத்து, தான் கணினி பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இந்தியாவின் மிகவும் வயதான மாணவியான அவருக்கு அம்மாநில முதலமைச்சர் நேரில் சென்று சான்றிதழ் வழங்கி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். 
அதுபோன்றே, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூல் சிங் மீனா என்பவரும் தற்போது தனது 59-ஆவது வயதில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்கு அவரது ஐந்து மகள்கள்தான் காரணமாக இருந்துள்ளனர். ஒருபுறம் அரசியல் வாழ்க்கை மறுபுறம் கல்லூரி வாழ்க்கை என அவர் இப்போது பரபரப்பாக உள்ளார். 
தான் கல்வி கற்பதற்கு இளமையில் அனுபவித்த வறுமைதான் காரணம் எனவும், தான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தந்தை இறந்துவிட்டதால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார். 40 வருடங்களுக்குப் பிறகு மகள்கள் தந்த ஊக்கம் காரணமாக பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
பட்டப்படிப்பை முடிப்பது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இவர் தனது தொகுதியில் படிப்பை இடையில் கைவிட்ட பெண்கள் மீண்டும் தங்கள் படிப்பைத் தொடர உதவியும் வருகிறார். 
முதியோர் கல்வித் திட்டம், தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என அழைக்கப்படுகிறது. துள்ளித் திரிகின்ற காலத்தில் பள்ளியில் சென்று கல்வி கற்க முடியாதவர்கள், அறியாமையால் கற்வி கற்கும் வாய்ப்பைத் தவற விட்டவர்கள், முதுமைப் பருவத்திலாவது கல்வியறிவு பெற வேண்டும் என்பதே முதியோர் கல்வித் திட்டத்தின் நோக்கமாகும். 
முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவிலேயே கற்கும் பாரதம் திட்டத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை 100 சதவீதம் எட்டியுள்ள ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கற்கும் பாரதம் திட்டத்தினால், 24.57 இலட்சம் பேர் கல்லாதவர்கள் என்ற நிலை மாறி அடிப்படை எழுத்தறிவினைப் பெற்றுள்ளனர். 
மேலும், வயது வந்தோர் கல்வித் திட்டத்தினை மிகவும் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழகம் கடந்த 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தேசிய எழுத்தறிவு விருது பெற்றுள்ளது. 
தமிழ்நாட்டில் சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பலர் மாலை நேர சட்டக் கல்வி பயின்று பயனடைந்து வந்தனர். கல்வி கற்க வயது தடையில்லை என்பதை இந்த மாலை நேர சட்டக் கல்லூரி நிரூபித்து வந்தது. அவ்வாறு படித்தவர்கள் பலர் இன்று புகழ் பெற்ற சட்ட வல்லுநர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். குடும்பத் தேவைக்காக பணிக்கு செல்லும் பலர், இந்த மாலை கல்லூரியில் சேர்ந்து பயனடைந்து வந்தனர்.
ஆனால், என்ன காரணத்திற்கோ இந்த மாலை நேரக் சட்டக் கல்லூரி தடை செய்யப்பட்டது. இப்போது, தமிழ்நாட்டில் சட்டக்கல்வி வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கல்வியாகி பலருக்கும் வாய்ப்புகளைத் தருகிறது.
அன்றாடம் பணிக்குச் சென்று தான் சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், ஆனால் அதே சமயத்தில் சட்டமும் பயின்று வழக்குரைஞராகத் துடிக்கும் அனைவருக்கும், முதியவர்களுக்கும் மாலை நேர சட்டக் கல்லூரி வரப்பிரசாதமாக அமையும். இனியேனும் அரசு வயது, வித்தியாசமின்றி சட்டம் பயில மாலை நேர சட்டக்கல்லூரியைத் தொடங்க வேண்டும். 
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்று கூறுவார்கள். எனவே, கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com