தேர்வும் தகுதியும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியார் என்னும் ஆங்கிலேயர் ஆட்சியில், மொழிப்பாடம், கணிதம், அறிவியல்,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியார் என்னும் ஆங்கிலேயர் ஆட்சியில், மொழிப்பாடம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் எனப் பாடங்கள் உலகளாவிய நிலையில் வரையறுக்கப்பட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அரசுச் செலவில் கல்வி கற்கும்படியான அரசுப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
1978-இல்தான் தற்போதுள்ளவாறு, ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி, எட்டாம் வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, ஆறு முதல் பத்து வரை உயர்நிலைப்பள்ளி, ஆறு முதல் பன்னிரண்டு வரை மேல்நிலைப்பள்ளி என்னும் வரையறையும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடித்தோர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டய வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடித்தோர் கல்லூரியில் பட்டப்படிப்பிலும் சேரலாம் என்னும் வரையறையும் ஏற்பட்டன. 
அத்துடன் இன்னொரு தெளிவும் ஏற்பட்டது. அதாவது, மேல்நிலைப் பள்ளிப் படிப்பும், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் பட்டயமும் உடையோர் எட்டாம் வகுப்பு வரை பாடம் பயிற்று
விக்கலாம். பட்டப்படிப்பும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சிப் பட்டமும் உடையோர் உயர்நிலை வகுப்புகளாகும் ஒன்பது, பத்து வகுப்புகளுக்கும், பட்டமேற்படிப்பும், ஆசிரியப் பயிற்சிப் பட்டமும் உடையோர் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கும் பாடம் நடத்தலாம் என்கிற தெளிவான நிலையும் ஏற்பட்டது. 
அத்துடன், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர், பட்டப் படிப்பும், ஆசிரியப் பயிற்சிப் பட்டமும் பெற்றவராக வேண்டும் எனவும், நடுநிலைப் பள்ளியாயினும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாயினும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கும் மொழிப் பாடங்களை அவ்வப் பாடத்தில் பட்டப்படிப்பும், ஆசிரியப் பயிற்சிப் பட்டமும் பெற்ற மொழியாசிரியர்களே பயிற்ற வேண்டும் எனவும் ஆகியது.
1970-75 கால கட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களின் பற்றாக்குறையும், பட்டப்படிப்பும், ஆசிரியப் பயிற்சிப்பட்டமும் உடையோரின் எண்ணிக்கை மிகுதியுமான நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையைச் சமாளிக்க அப்போதைய அரசு ஒரு குறுக்கு வழியைப் பின்பற்றியது. இடைநிலை ஆசிரியப் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை அமர்த்தி, அப்பணிக்குரிய முறையான ஊதியத்தை வழங்காமல் அதனினும் குறைவான ஒரு தொகையை தொகுப்பூதியம் என வழங்குதல் என்பதே அந்தக் குறுக்குவழி. 
பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியப் பணியிடங்களில் அமர்த்தும்போது, அப்பணிக்குரிய முறையான ஊதியத்தை வழங்கி, அந்தப் பணி மூப்பின் அடிப்படையில் தேவைப்படும் போது உயர்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கினால் முறையான நடைமுறையாக அமையும். படித்த படிப்பிற்கான ஊதியம், செய்யும் பணிக்குரிய ஊதியம் இரண்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டுமே வழங்குதல் படித்த பட்டதாரிகளையே கொத்தடிமைகளாக்குதலன்றி வேறல்லவே? 
தனி நபர்களும் தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்க்கு முறையான ஊதியமின்றிக் குறைவான ஒரு தொகை வழங்கி வேலை வாங்குதலைக் கொத்தடிமை முறையென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மக்கள் நல அரசு படித்துப் பட்டம் பெற்றவர்களைக் கொத்தடிமைகளாக்கும் கொடுமையை என்ன சொல்ல?
இதனினும் கொடுமையான இன்னொன்று. இடைநிலை வகுப்புகளுக்கும், உயர்நிலை வகுப்புகளுக்கும், மேல்நிலை வகுப்புகளுக்குமான ஆசிரியர் பணி வேண்டிக் காத்திருப்போர் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிகாண் தேர்வு என்றொன்று நடைபெறுகிறது. இத்தேர்வு இருவகையாக நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., நவோதயா முதலாக மத்தியக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு இந்திய அளவிலும், மாநில அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு அந்தந்த மாநில அளவிலும் நடைபெறுகிறது. 
ஆனாலும், தகுதிகாண் தேர்வுக்கான அடிப்படை ஒன்றுதான். அதாவது, ஆசிரியப் பணிக்கான கல்வித்தகுதியுடையோரை மீளவும் சோதித்தல் என்பதில் மாற்றமில்லை. இந்தியக் குடிமைப்
பணிக்கு விண்ணப்பிப்போர் குறிப்பிட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டுமெனும் கட்டாயமில்லை. மருத்துவம், பொறியியல் உட்பட எந்தவகையான பட்டப்படிப்பு முடித்தோர் அனைவர்க்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர்க்கு குடிமைப் பணிக்கான பயிற்சியளிக்கப்பட்டு, அதன் முடிவில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 
இங்கே நிலைமை அப்படியல்ல. குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட கல்வித்தகுதியும், அத்துடன் ஆசிரியர் பணிக்கு மட்டுமே உரியதான பயிற்சிப் பட்டமும் பெற்றவர்களே ஆசிரியர் பணி வேண்டுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களா எனச் சோதனை நடத்துவதென்றால் அவர்கள் பெற்றிருக்கிற - ஆசிரியர் பணிக்கு மட்டுமே உரியதான ஆசிரியர் பயிற்சிப் பட்டத்திற்கு என்ன பொருள்? அப்படியல்ல.
ஆசிரியர் பணிக்கு இன்னின்ன குணநலன்களும், செயல் திறன்களும் அவசியமாகின்றன. அவை ஆசிரியப் பயிற்சிப் படிப்பில் நிறைவாகவில்லை எனக் கருதினால், அரசு விரும்புகிற கூடுதல் அம்சங்களும் உள்ளடங்கும்படியாக ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தையும், செயல்முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும். ஏற்கெனவே படித்து முடித்தவர்களுக்கு அரசு விரும்புகிற குணநலன்களையும், செயல்திறன்களையும் சோதிக்கும் முறையை மேற்கொள்ளலாம். 
ஆனால் இங்கே என்ன நடைபெறுகிறது? பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியும், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் பட்டயமும் பெற்று இடைநிலை ஆசிரியர் பணி வேண்டுவோர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுமான அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும். தேவையாகும் பாடத்தில் பட்டப்படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்று, உயர்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் பணி வேண்டுவோரில், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தோர் அனைவரும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களிலும், உளவியல் பாடத்திற்கும் தேர்வு எழுத வேண்டும்.
கணிதம், அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தோர் அனைவரும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கும் உளவியலுக்கும் தேர்வு எழுத வேண்டும்.
முதுநிலை பட்டம் பெற்று மேல்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் பணி வேண்டுவோர் மேல்நிலை வகுப்புகளில் அவரவர் பாடத்திலும் உளவியல், பொது அறிவு என்பவற்றிலும் தேர்வெழுத வேண்டும். இவற்றில் உளவியல் என்பது ஆசிரியப் பயிற்சியிலும், பொது அறிவு என்பது தவிர்த்து ஏனையவை பள்ளிகளிலும் படித்துத் தேர்ச்சி பெற்றவை. 
இதன்படி மூன்றாம் வகுப்புக் கணிதத்தை நினைவு வைத்திருப்போர் எட்டாம் வகுப்புக் கணிதம் நடத்தத் தகுதியானவர். எட்டாம் வகுப்புக் கணிதம் நினைவு வைத்திருப்போர் பத்தாம் வகுப்பு கணிதம் நடத்தத் தகுதியானவர் என்கிற கேலிக்கூத்து மட்டுமல்ல. தமிழாசிரியப் பணி வேண்டுவோர் ஆங்கிலப் பாடத்திலும், கணித ஆசிரியராக விரும்புவோர் தமிழ்ப் பாடத்திலும் தேர்வெழுத வேண்டுமெனக் கேலிக்கூத்து மிகுதியாகிறது. 
இதன்படி தேவைக்கேற்ப, தமிழ்ப் பட்டதாரி ஆங்கிலம் நடத்தவும், ஆங்கிலப் பட்டதாரி கணிதம் நடத்தவும், கணிதப் பட்டதாரி தமிழ் நடத்தவும் அனுமதிப்பார்களா? ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பிற பாடங்களிலும் அடிப்படையறிவு அவசியமென்றால், அதைத்தான் ஏற்கெனவே ஒவ்வொருவரும் பத்தாம் வகுப்பு வரையும், பன்னிரண்டாம் வகுப்பு வரையும் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களே? 
ஆக, ஆசிரியர் தகுதிகாண் தேர்வுக்கெனப் பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் எப்படியெப்படி மாற்றியமைத்தாலும், பள்ளிப் படிப்பும், பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் முடித்து, தாம் படித்துள்ள பாடத்திற்கான ஆசிரியப்பணி வேண்டுவோரை படித்து முடித்த பாடங்களில் மீண்டும் தேர்வெழுதச் செய்து அதன் வழியாக ஆசிரியர்களின் தகுதியையும், தரத்தையும் உயர்த்துவதாகக் கூறுதலில் அணுவளவும் அறிவுக்கும், நேர்மைக்கும் இடமிருப்பதாகக் கருதுவதற்கு வழியில்லை.
ஆசிரியர் பணி என்பது எதிர்காலக் குடிமக்களை நன்மக்களாக உருவாக்கும் மகத்தான பொறுப்புடையதாகையால் பலவகையாகவும் தேர்ந்து தெளிதல் அவசியமாகிறது எனக் கொள்வோமானால், அப்படிப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் மாநில - மத்திய அமைச்சர், உயர் அதிகாரி என்போரின் ஊதியத்தை விடவும் கூடுதலாக வேண்டுமல்லவா? ஆனால், நிலைமை தலைகீழாகவல்லவா இருக்கிறது?
சரி, என்னதான் வழி? மிக எளிது. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பாடத்திற்கும் தேவைப்படும் எண்ணிக்கையில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நபர்களைத் தெரிவு 
செய்து, அவர்களுக்கு ஏற்கெனவே படித்து மறந்தவற்றை நினைவுபடுத்தவும், கூடுதலாக அறிவுறுத்த வேண்டியவற்றை அறிவுறுத்தவுமாகக் குறிப்பிட்ட நாள்கள் புத்தாக்கப் பயிற்சியளித்து, பயிற்சி முடிவில் அவரவர்க்குரிய பணி நியமன ஆணையை வழங்குதலே பொருத்தமான வழிமுறையாக அமையும்.
கட்டுரையாளர்:
தலைமையாசிரியர் (ஓய்வு)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com