தெய்வம் நிகர்த்தது குழந்தைமை

குழந்தைகளுக்காக எழுதுவது குழந்தை இலக்கியம். அதைக் குழந்தைகளே எழுதுவது சிறப்பு. காரணம், அந்தப் பருவத்து அனுபவங்கள், மொழி, சமூகப்பின்புலம் எல்லாமும் உயிரோட்டமாய் முகிழ்க்க அது

குழந்தைகளுக்காக எழுதுவது குழந்தை இலக்கியம். அதைக் குழந்தைகளே எழுதுவது சிறப்பு. காரணம், அந்தப் பருவத்து அனுபவங்கள், மொழி, சமூகப்பின்புலம் எல்லாமும் உயிரோட்டமாய் முகிழ்க்க அது முக்கியக்காரணியாகின்றது. 
இயற்கையின் பின்புலத்தில் உண்மையன்பு, எளிமையாக வெளிப்படுகிறபோது கவிதை பிறக்கிறது. அதில் புலப்படும் சொந்த அனுபவம் பொதுவெளியில் வாசிப்பவர்களின் சுய அனுபவங்களாகவும் உணரப்படுகிறபோது, அது சிறக்கிறது. அதிலும் குழந்தை மனத்துப் பதிவு இருக்கிறதே, அது பசுமை மணம் மாறாத பான்மை உடையது.
தத்தம் ஊர்களது மண்வாசனையையும் மனிதவாசனை யையும் மழலைவாசனையாக மாற்றி உலவவிடுகிற ஆற்றல் குழந்தை இலக்கியத்திற்கு உண்டு. அம்மாவை, அப்பாவை, தாத்தாவை, பாட்டியை, உற்றார் உறவினர்களை நினைத்துக்கொள்ளவும் பழகி மகிழவும் ஏதுவாய்ப் பல நிகழ்வுகள் பல இல்லங்களில் நிகழ்வுறும். விடுமுறை விட்டாலே கூடும் மழலைப் பட்டாளங்களின் குறும்புச்சண்டைகளும், பஞ்சாயத்துக்களும், உணவுப் பட்டுவாடாக்களும் நடக்கிற வாய்ப்புகளை, இன்றைக்கு "வீட்டுப்பாடங்'களும், "தனிப்பயிற்சி மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்பு'களும் கபளீகரம் பண்ணிவிட்டன.
என்னதான் வனவிலங்குகள் ஆனாலும், மயிலும், குரங்கும், குயிலும், அணிலும், கிளியும், காக்கையும், சிட்டுக்குருவியும், கோழியும், பூனையும் குழந்தைகளின் மனவிலங்குகள்தான். ஆடுகளும் மாடுகளும் அவர்களின் உலகில் பேசக் கூடியவைதான். சுறுசுறுப்புக்கு எறும்பையும், உழைப்புக்குத் தேனீயையும் உதாரணம் காட்டுகிற தலைமுறை மாறிவிட்டாலும், அவை குறித்த மனப்பதிவுகள் இன்னும் விலகிவிடவில்லை. 
குழந்தைகளின் கனவுக்காடுகளில் சுதந்திரமாக உலவும் யானைகளும், பாம்புகளும் வசீகரம் மிக்கவை. இன்னமும் அவர்களின் காட்டுக்கு ராஜா சிங்கம்தான். மந்திரிகள்தாம் அடிக்கடி மாறுகிறவர்கள். அவர்கள் உலகில் பேசாதனவெல்லாம் பேசும். பேசும் உயிர்கள் மெளனம் பூணும். குளிருக்குச் சுகமாய் அடிக்கும் வெயிலுக்குக்கூட விளையாட்டு மைதானத்தின் பக்கம் செல்லாத பலரை ஈர்த்துப் பரவசப்படுத்திய கதைப்புத்தகங்களை, காமிக்ஸ் பக்கங்களை, இன்று சின்னத்திரையும், செல்லிடப்பேசி திரையும் காவுகொண்டுவிட்டன.  
இளம்பருவத்தில், சொல்லிக்கொடுக்கப்பட்ட  பக்திப்பாடல்களையும், சர்வசமயக் கீர்த்தனைகளையும் இப்போதைய "நர்ஸரி ரைம்ஸ்' விழுங்கிவிட்டன.  அந்தச் சந்தமும், ஓசையும், சொற்களும், காணும் பொருள்களில் கலந்த கவித்துவமும் சொந்தமாய்க் குழந்தைகளைக் கவிபாடவைத்திருக்கின்றன. எவர் தயவுமின்றி எழுந்துவரும் எதுகையும் மோனையும் இன்றைய குழந்தைகளுக்கு முயற்கொம்புதான். 
பழமொழிகள், மரபுத்தொடர்கள் பலவும் இவர்களைவிட்டு விலகியதால் பாரம்பரியப் பண்பாடுகள் அறியப்படாத நிலைப்பாடு. அம்மாவை விழுங்கிய "மம்மி'களுக்குத் தாலாட்டு வசப்பட வாய்ப்பில்லை.  எழுதப்படிக்கத் தெரியாத அம்மாக்களின் இடையறாத உழைப்பும், உழைப்புக்கு இடையில் அவர்கள் சொல்லிய சொலவடைகளும், பழமொழிகளும், கதைகளும், கதைப்பாடல்களும் எழுதப்படாத இலக்கியங்கள் என்றாலும், பல எழுதப்படுகிற இலக்கியங்களுக்குத் தாய்ப்பால் வார்த்தவை. 
பள்ளிப்பருவத்தில் உடன் பயின்ற கூட்டாளிகளோடு விளையாடிய, பேசிய, சிரித்த சண்டையிட்ட அனுபவங்களில் முகிழ்க்கும் நினைவுக்குமிழ்களை அசைபோட்டாலே கிடைக்கும் குழந்தை இலக்கியம். எல்லாம் மாயக்கனவுகள்போல் ஆகியிருக்கின்றன. இன்றைக்கு மொழி மாறியிருக்கிறது. குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல்கள் மாறியிருக்கின்றன. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்கிற போக்கு மிகுந்திருக்கிறது. 
பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடித் திரியவேண்டிய குழந்தைகள் பொம்மைகள்போல் இருக்க, வீடுகளில் தொலைக்காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன. சிறிய, பெரிய, கைபேசித்திரைகளின் முன்னால் காட்சிப்பொருள்களாக அவர்கள் இருக்கப் பழகி விடுகிறார்கள். மனிதர்களைப்போலவும் விலங்குகளைப் போலவும் மரப்பாச்சிப் பொம்மைகள் செய்து விளையாடியவர்கள் நாம். இன்றைய பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிப்பொம்மைகள். வன்முறை, பிஞ்சு நெஞ்சங்களிலேயே நஞ்சுபோல் இறங்கியிருப்பதற்கு இந்த ஒற்றைச் சான்றே போதும்.  
பந்தயக் குதிரையின்மீது பணம் கட்டுவதுபோல, பெற்ற குழந்தையின் கல்விக்காகப் பெற்றோர்கள் செலவு செய்கிறார்கள். பின் எதிர்பார்ப்பு பேராசையாக வெளிப்பட்டு நிற்கிறது. மனமதிப்பை விழுங்கிப் பணமதிப்பு அசுரத்தனமாய் எழுகிறது. "அழுக்காறு' என்னும் பொறாமையும், வெறுப்பும், பகைமையும், பழிவாங்கும் வன்முறையும் படிப்படியாகக் கால்கோள் கொள்ளுவதற்கு நாம் எல்லாரும் காரணர்களாகிவிடுகிறோம். 
தாயின் பரிவும், தந்தையின் பாசமும், விலைபொருள்களாகிவிட்டன. ஒற்றைப் பிள்ளையைப் பெற்றுக்கொண்ட இல்லங்களில் "உடன்பிறப்பு' என்கிற பாச உணர்வு பெரிதும் மங்கி மறைந்து இல்லாது வருகிறது. அன்பு மயமாய் விரிந்த இயற்கையிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிற குழந்தைகளின் மனதில் எல்லாம் செயற்கையின் உயிர்ப்பற்ற பொருட்களே நிலைகொண்டிருக்கின்றன. 
அவர்களுக்கான கனவுகள்கூட, செயற்கையாகத் திணிக்கப்படுகின்றன.  வேலைவாய்ப்பு என்ற ஒன்றை முன்னிறுத்தி, குழந்தைகளின் உள்செலுத்தப் படுகிற கல்வி, முற்றாக அவர்களை அந்நியப்படுத்தி விடுகிறது. வெளிநாட்டு வேலை, கைநிறையப் பணம் என்கிற மாயக்கனவுகளைப் பிள்ளைகள்பால் திணித்து, தாய்ப்பாசம், தாய்மொழிப்பற்று, தாய்நாட்டுநேயம் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் குழந்தைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
குழந்தை இலக்கியத்தைக் குழந்தைகளே படிக்க விடாமல் செய்கிற, வணிகமயமாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விச்சூழலில் வாழ்க்கைக்கல்வியிலிருந்து முற்றாக விலகி விடுகிற குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும் என்ற கவலை நம்மை வாட்டுகிறது. இளம்பருவத்தில் நாம் அனுபவித்த குழந்தைப்பருவ இன்பங்கள் இன்றைய குழந்தைகளுக்கு இருக்கிறதா என்பதை ஒவ்வொரு பெற்றோரும் பெரியோரும் எண்ணிப்பார்க்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. 
இனி, குழந்தை இலக்கியத்தைக் குழந்தைகளோடு பெரியவர்களே மிகுதியும் படிக்கவேண்டிய தேவை இருக்கிறது. நாம் அனுபவித்த குழந்தைமையை, நம் குழந்தைகள் அனுபவிக்கத் தவறுகின்ற, அவர்களை அனுபவிக்காமல் செய்கிற செயற்கை மாயப் பூச்சுகளிலிருந்து விடுபட்டுக் குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கிற மனநிலையைப் பெற, இந்த நிலை இன்றியமையாத் தேவை. 
நமது மரபுகள், பண்பாட்டு நெறிகள், பழக்க வழக்கங்கள், உணர்வுகளை வளர்க்கும் உணவு முறைகள், பாச உறவுகள், எல்லை கடந்த இயற்கை நேயம் எல்லாவற்றையும் சொல்லிக் காட்ட அல்ல உணர்ந்து கொள்ள எழுதும் எழுத்தாளனுக்காகப் பிஞ்சுவயதுப் பிரபஞ்சம் காத்திருக்கிறது. 
இன்னமும் மழலை மணம் மாறாத குழந்தைகளின் முகங்களில் தோன்றும் புன்னகைகளில் இருந்து அதற்கான நம்பிக்கை மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டியது காலத்தேவை. அவர்களின் பிஞ்சுநெஞ்சங்களில் இலங்கும் பிரபஞ்சப் பேருணர்வில் இருந்து வாழ்க்கைக்கான அமுதகணங்களைச் சுவீகரித்துக் கொள்ளும் படைப்பாளிகளே இன்றைக்கு வேண்டிருக்கிறார்கள்.   
"நமது மூதாதையரிடமிருந்து இந்தப்பூமியை நாம் பரம்பரைச் சொத்தாகப் பெறவில்லை. மாறாக, நமது குழந்தைகளிடமிருந்து இதனைக் கடனாகப் பெற்றுள்ளோம்' என்கிறது அமெரிக்க ஆதிகுடிகளின் பழமொழி. அந்த உணர்வோடுதான், சங்ககாலத்து மன்னர்களான வேள்பாரியும், பேகனும், இன்னபிற வள்ளல்களும் வாழ்ந்திருக்கின்றனர். அந்த மரபில் வந்த நாமும் அவர்களின் பணிகளைச் செவ்வனே செய்வதுதானே முறை? 
வாழும் மக்களிடையே வள்ளல் பாரிகளை, இயற்கையை நேசித்துப் பேணுகிய கவிஞர்களை, அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. பாரிமகளிர்போல் கவிதை எழுதுகிற, ஓவியம் தீட்டுகிற, கதை சொல்லுகிற குழந்தைகளின் இலக்கிய, வாழ்வியல் உலகத்திற்குள்ளேதான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  தமிழை நம் காலத்திற்கேற்பப் புதுக்கித் தர வேண்டிய கடப்பாடு குழந்தையிலக்கியப் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. 
பலரும் நினைப்பதுபோல், குழந்தைகளுக்கு எழுதுவது அவ்வளவு எளிதானதல்ல. எதையும் எழுதுகிற சுதந்திரம் பொது இலக்கியத்திற்கு உண்டு. ஆனால், குழந்தைகளுக்காக எழுதுகிறவர்களுக்குத் தாயின் பரிவும், தந்தையின் பொறுப்பும், ஆசானுக்குரிய அறிவும் உறுதியாய் வேண்டும். அவர்களால்தான் தெய்வம் நிகர்த்த குழந்தைமையை, குழந்தைகளிடத்தில் உறுதிப்படுத்த முடியும். அதைத்தான் நம் முன்னோடிக் குழந்தையிலக்கியவாதிகள் செய்திருக்கிறார்கள். 
அந்த வழித்தடத்தை விரிவு செய்து கொண்டுபோகிற படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே அடுத்த தலைமுறையினை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் பணியைத் திறம்படப் புரிகிறவர்கள்.
விட்டுக்கொடுக்கும் தன்மையும், இரக்கம் காட்டுகிற நற்குணமும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகிற பெருமனமும் நிலைபெற்றால்தான், மனித மாண்பு செழிக்கும். மக்கள் செல்வம் ஒளியுறும். அதற்கு வழிகாட்டி வாழ்விற்கு ஒளிகூட்டுகிற குழந்தைகள் இலக்கியம் என்பது குழந்தைகளுக்கானவை மட்டுமல்ல, குழந்தைகளாய் இருந்து வளர்ந்தவர்களுக்கும் மிகமிகத்தேவை.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com