காலம் பதில் சொல்லும்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, கடந்த 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, கடந்த 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. "உலகின் சுமார் 18 சதவீதம் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை அமெரிக்கா உணர்ந்திருக்கிறது. அதனாலேயே இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய விலக்கு அளித்துள்ளது. எனவே, அமெரிக்கா இந்தியாவின் நண்பனே' என்று அமெரிக்கா கூறலாம்.

ஆனால், அதே அமெரிக்காவின் மற்றொரு முகத்தையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, "பொது முன்னுரிமை நடைமுறை' என்ற சிறப்பு நடைமுறையின் கீழ் வரிச்சலுகையோடு இறக்குமதி செய்யப்பட்டு வந்த சுமார் 50 இந்தியப் பொருள்கள் மீதான வரிச்சலுகையை அமெரிக்கா சத்தமில்லாமல் நீக்கியுள்ளது.

இதனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறையின் மூலம் பலனடைந்து வந்த இந்திய விவசாயிகளும், வணிகர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

சரி, "பொது முன்னுரிமை நடைமுறை' என்பது என்ன? இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருள்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் முழு வரி விலக்கோ அல்லது பகுதி வரி விலக்கோ அளிக்க வேண்டும் என்று கடந்த 1971-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலக வர்த்தக அமைப்புக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வந்த வரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின்(ஜிஏடிடி) கீழ், "மிகவும் சாதகமான நாடு என்ற அந்தஸ்து அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட வேண்டும்', "ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது, அவர்களுக்கு எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கக் கூடாது', "அனைத்து நாடுகளையும் ஒன்று போல் நடத்த வேண்டும்' போன்ற விதிமுறைகள் ஏற்கெனவே அதில் வகுக்கப்பட்டிருந்தன.

ஜிஏடிடி-யின் இந்த விதிமுறைகளை மீறுவதாக "பொது முன்னுரிமை நடைமுறை' அமைந்திருந்தாலும், வளர்ச்சியடைந்து வரும் மற்றும் வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார மேம்பாட்டையும், அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, இந்த நடைமுறைக்கு ஜிஏடிடி அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, இந்த நடைமுறையின்கீழ், கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கி ஏறத்தாழ 120 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொருள்களை அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. இந்தியா மற்றும்  பிரேசில் நாடுகளே இந்த நடைமுறையின் மூலம் மிக அதிக அளவில் பயன்பெற்று வந்தன. முக்கியமாக, இந்தியா மட்டும் ஏறத்தாழ 1,937 பொருள்களை இந்த நடைமுறையின் மூலம் அமெரிக்காவுக்குக் கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த நடைமுறையின் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் குறித்து அமெரிக்கா கூட்டம் நடத்தி முடிவு செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் "பொது முன்னுரிமை நடைமுறை'யிலிருந்து 94 பொருள்களை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 50 பொருள்களும் இடம்பெற்றுள்ளன. 

இதனால், இந்த நடைமுறையின் மூலம் பயனடைந்து வந்த உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், கால்நடை  இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவு இந்தியாவைக் குறிவைத்தே எடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. 

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில், இந்தியா ஆண்டுதோறும் சுமார் ரூ.16 லட்சம் கோடி வருவாய் ஈட்டி வருகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றுக்கு இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்குமாறு கூறி வந்தார்.

முக்கியமாக, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களின் மீதான வரிகளைக் குறைக்கும்படி அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால், முழுமையாக வரியைக் குறைக்காமல் டிரம்ப்பை சமாதானப்படுத்தும் நோக்கில் வரியை சிறிது மட்டுமே குறைத்தது இந்தியா. இதன் காரணமாகவே குறிப்பிட்ட இந்தியப் பொருள்களுக்கான வரிச்சலுகையை அமெரிக்கா நீக்கியுள்ளது என்பது நிதர்சனம்.

அதிபர் டிரம்ப்பின் மற்றொரு முகத்தையும் அண்மையில் காண நேரிட்டது.

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த முகம் அது.

இந்தியா குடியரசு தின விழா கொண்டாடும் அதே சமயத்தில், நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் உரையாற்ற உள்ளதால், அவரால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க முடியாது என்று காரணம் கூறி இந்தியாவின் அழைப்பை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் பராக் ஒபாமா நாடாளுமன்றக் கூட்டுக்கூட்ட உரையை ஒத்திவைத்து விட்டு, இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அமெரிக்கா இந்தியாவின் நண்பனா? எதிரியா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com