நவீனத்துவத்தின் வீழ்ச்சி!

பிரபஞ்சம் தோன்றிய நாள் முதலே மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் மாறாத விஷயமாக இருந்து வருகிறது. இயற்கையாகவோ, செயற்கையாகவோ பற்பல மாற்றங்கள் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டேதான் வருகின்றன.

பிரபஞ்சம் தோன்றிய நாள் முதலே மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் மாறாத விஷயமாக இருந்து வருகிறது. இயற்கையாகவோ, செயற்கையாகவோ பற்பல மாற்றங்கள் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டேதான் வருகின்றன.

அந்த வரிசையில், நாடு விடுதலை அடைந்த பிறகு "நவீனத்துவம்' என்ற பெயரில் ஜனநாயகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், அவை அனைத்தும் சமூகத்துக்கு நன்மை பயக்கியிருக்கிறதா? அல்லது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்பது விடை கூற முடியாத மிகப் பெரிய கேள்வி.

கடந்த 1952-ஆம் ஆண்டு முதல், அடுத்த பல ஆண்டு காலத்துக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது "பொதுவுடைமை', "சமத்துவம்' என்ற பெயர்களில் பல சீர்திருத்தங்களைஅக்கட்சி செய்தது.

ஜமீன்தார்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள், நிலச்சுவான்தார்கள் என பலரிடம் இருந்த உடைமைகள் பறிக்கப்பட்டன. நில உச்ச வரம்புச் சட்டம், கூடுதல் வரி விதிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக அவர்களின் சொத்துகளை பறித்து சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த அன்றைய ஆட்சியாளர்கள் முயன்றனர்.

இதனால் நாட்டில் சமத்துவ நிலை உருவாகிவிட்டதா? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உண்மை என்னவென்று ஊர் அறியும்.

இது ஒரு புறமிருக்க, தேசத்தில் மற்றொரு மிகப் பெரிய மாற்றம் 1956-இல் கொண்டு வரப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களை மொழி வழியாக தனித்தனியே பிரித்ததுதான் அது. நல்ல வேளையாக மொழிவழி நாடாக அவை பிரிக்கப்படவில்லை. இல்லையென்றால் இன்றைக்கு இந்தியா என்றொரு நாட்டின் அடையாளம் கூட மிச்சம் இருந்திருக்காது.

இப்படியாக அப்போது பல்வேறு சமூக மாற்றங்களை உருவாக்கிய அன்றைய ஆட்சியாளர்களால் 1977-க்குப் பிறகு புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள இயலவில்லை. அதற்குக் காரணம், அன்றைக்கு  இந்திரா காந்தி, நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதும், அதன் விளைவாக காங்கிரஸ் கட்சி, தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததும்தான். 

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1991-இல் தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எதற்காகக் கொண்டுவரப்பட்டன தெரியுமா? கடந்த காலங்களில் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் பொருளாதாரம் சீராகவில்லை. பின்தங்கிய மக்களின் வாழ்வு மேம்படவில்லை என்ற காரணத்துக்காகத்தான் தாராளமயக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

அதனால் பொருளாதாரம் சற்று மேம்பட்டது. ஆனால், அதிலும் சில எதிர்விளைவுகள் இருந்தன. அதாவது, பெரும்பாலான இந்தியர்கள், தங்களது பெற்றோரைக் காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டினர். இதனால், குறிப்பிட்ட சமூகம் அல்லது குடும்பம் என்ற அடையாளம் மறைந்து தனிநபரின் சாதனைகள் மட்டுமே பேசப்பட்டன.

இவ்வாறு சமூகத்தில் பொருளாதாரச் சூழல்களை திருத்தியமைக்கும் நடவடிக்கைள் எதுவும் பெரிய அளவில் கைகொடுக்காத நேரத்தில், தேர்தல் களத்தில் சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. நாட்டில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 70 சதவீதம் பொது பிரிவினருக்காகவும், 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காகவும் பிரிக்கப்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்டது கசப்பான அனுபவமே. அந்த 70 சதவீத பொதுத் தொகுதிகளையும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துக் கொண்டனர். பிறருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பொதுவாக, நான்கு வகையான பிரிவுகளே அரசியல் அரங்கில் தொடர்ந்து வந்தன. நாட்டின் வடக்கு மற்றும்  மேற்கு பகுதிகளில் பிராமணர்கள் மற்றும் சத்திரியர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. தென்னிந்தியா சூத்திரர்களின் கைகளில் இருந்தது.

காலப்போக்கில் இந்த தேர்தல் அரசியலானது, வர்ணாசிரமங்களைத் தாண்டி ஜாதிரீதியாகப் பிரிந்தது. பல்வேறு ஜாதி கட்சிகள் வாக்கு வங்கியை மையமாக வைத்துத் தோன்றின. 

இலவசங்கள், மானியங்கள், வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் ஆகியவற்றை சுற்றியே அக்கட்சிகள் இயங்கின. இது தென்னிந்தியா மட்டுமன்றி தேசம் முழுவதும் எதிரொலித்ததால் தேசியக் கட்சிகளுக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி அரசியல் களத்தில் விரும்பத்தகாத மாற்றங்களுக்கும் அது வித்திட்டது.

இது போன்றே, அரசும் அரசியலும் சார்ந்த மாற்றங்கள் ஜனநாயகத்தில் சில வடுக்களை ஏற்படுத்திச் சென்றது ஒரு புறமிருக்க, "நகரமயமாக்கல்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும் பல பாதகங்களையே ஏற்படுத்தின.

"நவீனத்துவம்' என்ற பெயரில் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் சூழல் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது நாட்டில் உள்ள 40 சதவீத மக்கள், தொன்மையான கலாசாரத்தையும், கிராமிய நெறிகளையும் முழுமையாக மறந்து விட்டனர். தங்களுக்கென தனிப்பட்ட கலாசாரத்தை வகுத்துக்கொண்டு, அதற்கொரு நியாயம் கற்பிக்கவும் தொடங்கிவிட்டனர். 

இது, சமுதாயத்தில் பல்வேறு சச்சரவுகள் ஏற்பட வழிகோலுகிறது. இந்த நிலை தொடருமானால், பழையபடி கிராமங்களுக்கே மக்கள் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகும்.

சரி, இதையெல்லாம்கூட கடந்து சென்று விடலாம். ஆனால், அனைத்திலும் உச்சமாக, மதங்களை முன்னிறுத்தி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்கள்தான் பெரும் அச்சுறுத்தலுக்கும், ஆபத்துக்கும் வழிவகுக்கும் வகையில் உள்ளன.

அன்பையும் அறத்தையும் போதிக்கும் மதங்களுக்கு அரசியல் சாயமும் ஆதிக்க நிறங்களும் கொடுக்கப்படுகின்றன. மதங்களின் மேன்மை மறக்கடிக்கப்பட்டு, அவற்றை குறிப்பிட்ட சித்தாந்தங்களுக்குள் சிறைபிடிக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன.

ஆன்மிகம் காட்டிய நெறிசார்ந்த வழியில் நம் முன்னோர் பயணித்தனர். ஆனால், சமகாலத்தில் அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதை வைத்து அரசியல் நடத்தும் இழிநிலைதான் தொடர்கிறது. 

மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்தக் கூடாது என்ற நிலை கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது. மற்ற அனைத்து மாற்றங்களைக் காட்டிலும் இந்த மாற்றம் சமூகத்துக்கு மிகப் பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

அதேபோன்று மத நடைமுறைகளுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்த முயல்வதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் பொது சிவில் சட்டம் விவகாரம் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட மதங்களுக்கென காலகாலமாக சில சட்டங்களும், நடைமுறைகளும் உள்ளன.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அந்த நடைமுறைகள் நிச்சயமாக அழித்தொழிக்கப்படும். சமூகத்தில் அனைத்து மத மக்களும் சமம் என்ற நிலையை எட்டவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, ஜாதி, மதம், இனம் ஆகியவற்றால் வேறுபட்டு உள்ள மக்களிடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டுமானால், குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில்தான் அதை செயல்படுத்த முடியும். மாறாக, பொருளாதார ரீதியாகவும், மத ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் அனைவரையும் ஒரே நிலையில் கொண்டு வருவது என்பது சர்வாதிகார ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

அதையும் மீறி, மத ரீதியாக மக்களிடையே சம நிலையை ஏற்படுத்தினால் 
பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறும். அதற்கு பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவதற்கும், வன்முறைச் சம்பவங்கள் பெருகுவதற்கும் அதுதான் காரணம். நாஜிக்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடைபெற்ற நாடுகளிலும் அதே நிலைதான்.

எனவே, அமைதியும் வளர்ச்சியும் நீடிக்க வேண்டுமானால், மக்களின் கலாசாரத்துக்கும், மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை மக்களே தீர்மானித்து காலப்போக்கில் மாறிக் கொள்வார்கள். அதைவிடுத்து, அரசும் நீதிமன்றங்களும் அதனை மக்களிடம் திணிக்க வேண்டிய அவசியமில்லை.

"நவீனத்துவம்' என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் கூறும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் கொள்கைகளை வகுக்கின்றனர். அதனால் நம் நாட்டுக்கு எந்தப் பயனும் நிகழவில்லை. நம் கலாசாரத்துக்கும் ஆன்மிக நெறிகளுக்கும் அப்பாற்பட்ட அந்த நவீனத்துவத்தால் நன்மை எதுவும் கிடைக்கவில்லை.

இதனைப் பார்த்து பார்த்து சலிப்படைந்த பெரும்பாலான இந்திய வாக்காளர்கள், தங்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் காக்க தற்போது ஆயத்தமாகிவிட்டனர். தங்களது அக உணர்வுகளின் அடிப்படையில் தேசத்தை தகவமைத்துக் கொள்ள தயாராகிவிட்டனர்.

இது ஜனநாயகத்தின் எழுச்சியா? 
நவீனத்துவத்தின் வீழ்ச்சியா? 

கட்டுரையாளர்: முன்னாள் முதல்வர், இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com