அழகு ஊர்களும் அசல் பெயர்களும்

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருபத்தைந்து ஊர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருபத்தைந்து ஊர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில்கூட உத்தரப் பிரதேச முதல்வர், அயோத்தி நகரம் இருக்கும் பைசாபாத் மாவட்டம், அயோத்தி மாவட்டம் என்று பெயர் மாற்றப்படும் என்றும், முசல்ராய் ரயில்வே சந்திப்புக்கு ஜனசங்க தலைவர் தீன்சராய் உபாத்யாய் (அவர் அங்குதான் இறந்தார்) பெயர் சூட்டப்படும் என்றும், அலாகாபாத் நகரின் பெயர் பிரயாக் ராஜ் என்று மாற்றப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து குஜராத் அரசும் ஆமதாபாத் நகரின் பெயரை கர்ணாவதி என்று மாற்றக் கோரும் கோரிக்கையைப் பரிசீலிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் ஆங்கில உச்சரிப்பில் இருந்துவரும் ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்பில் அழைக்கும் வகையில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக திருவல்லிக்கேணி என்ற பெயர் ஆங்கிலத்தில் டிரிப்ளிகேன் என்றும், தூத்துக்குடி என்ற பெயர் டியூட்டிக்குரின் என்றும் அழைக்கப்படுகின்றன. 
இனி ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணி, தூத்துக்குடி என்றே உச்சரிக்க வேண்டும். இதுபோல், தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாது அமைத்திட அரசு முடிவெடுத்துள்ளது. 
ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அப்பெயர் ஒவ்வொன்றுக்கும் உரிய காரணமும் உண்டு. அவ்வகையில், தொன்மைச் சிறப்புகளை உடைய நமது தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களும் அழகழகான பொருள் பொதிந்த காரணப் பெயர்களைக் கொண்டுள்ளன. வரலாற்று நிகழ்வு, இயற்கையழகு, இறைத்தலப் பெருமை, தொழில், வணிகம் என்று ஏதேனும் ஓர் அடையாளத்தை மையப்படுத்தியே, நமது முன்னோர் நாம் வாழுகின்ற ஊர்களுக்கான பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
ஊர்களின் பெயர்கள் என்பவை, விளிப்பதற்கு மட்டுமே உரியவை அல்ல. இதற்கு அப்பாற்றப்பட்டு ஓர் இனம், அந்த இனத்தின் தாய்மொழி இரண்டையும் அப்பெயர்கள் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.
ஊர்களின் பெயர்கள்தான், அந்த ஊருக்கு உரிய மக்களையும், அந்த இடம் அவர்களுக்கு உரியதுதான் என்பதையும் உறுதி செய்கின்றன. சான்றாக, சென்னையில், வட இந்திய மக்கள் அதிகமாக வசிக்கும் செளகார்பேட்டை என்கிற வாழ்விடப் பெயரைப் பிறர் உச்சரிக்கும்போது, அந்த இன மக்கள் உணருகின்ற மன இணக்கத்தை, மற்ற இன மக்கள் உணர முடியாது. இதுதான் ஊர்ப்பெயர்களுக்கும் அங்கு வாழுகின்ற மக்களுக்குமான வாழ்வியல் பிணைப்பாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வாக்கு உலக மக்கள் அனைவருக்கும் உறவு நாகரிகத்தை வலியுறுத்துகிறது. ஆனால், இது எங்கள் ஊர் என்பதே மனிதகுல வழக்காகும். எனவேதான், ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய்மொழியில் அமைந்த ஊர்ப்பெயர்கள், சிதைவுற்றுவிடாமல் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் தந்தை என்று போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டனைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 1791-ஆம் ஆண்டு அந்நாட்டின் தலைநகருக்கு வாஷிங்டன் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர் காலப்போக்கில் அமெரிக்க மக்களால் சுருக்கப்படாமல், இன்றளவும் வாஷிங்டன் என்றே விளங்குகிறது. இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் மாநிலத்தில், ஆங்கில்ஸீ என்ற ஊருக்கு அருகில், லேன்-வைர்-பூல்-கின்-கில்-கோ-கோ-கெர்-யூ-க்வீர்ன்-ட்ரோப்-ஊல்-லேண்டஸ்-இலியோ-கோ-கோ-கோச் என்று ஓர் ஊருக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 
சிவப்புக்குகை அருகேயுள்ள புனித டிஸிலியோ சர்ச்சுக்குப் பக்கத்திலும், வேகமான சுழலோட்டம் மிக்க நதிக்கரையில், வெள்ளை ஹேகல் மரத்தோப்பின் நடுவே அமைந்துள்ளதுமான புனித மேரியின் தேவாலயம் என்பது அதன் பொருளாம். 
அடிக்கடி பயன்படுத்தியதாக வேண்டிய தேவையைக் கருத்திற் கொண்டு அஞ்சல்துறையினர் மட்டும், லேன்ஃபேர்பூல் என்று அவ்வூரின் பெயரைச் சுருக்கிப் பயன்படுத்துகின்றனர். மற்றபடி பெயர்ப் பலகைகளில், மொத்தம் 57 எழுத்துகளைக் கொண்ட அவ்வூரின் முழுமையான பெயர்தான், உரிய உச்சரிப்பு முறையில் இடம் பெற்றிருக்கிறது. 
ஆனால் நமது மண்ணில் பிட்டி தியாகராயர் நினைவாக சென்னையின் ஒரு பகுதிக்குச் சூட்டப்பெற்ற தியாகராயர் நகர் என்ற பெயர் தி.நகர் என்றும், சுவாமி விவேகானந்தர் வந்து தங்கியதால் விவேகானந்தர் இல்லம் என்று பெயர் சூட்டப்பட்ட இடம் வி. இல்லம் என்றும் மாற்றம் கண்டுவிட்டன. 
செட்டிநாட்டு அரசரைச் சிறப்பிக்கும் விதமாக பெயரிடப்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் தற்போது ஆர்.ஏ. புரம் என்றாகிவிட்டது.
திருவள்ளுவர் தெருவை, டி.வி. ஸ்ட்ரீட் என்றும் மகாத்மா காந்தி சாலையை எம்.ஜி. ரோடு என்றும், ஆங்கிலத்திலேயே சுருக்கி எழுதுவதால் நமது ஊர்களின் பெயர்கள் அனைத்தும் அவலப் பெயர்களாகிவிட்டன. நமது சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட ஆளுமைகளின் பெயர்களில் அமைந்த ஊர்களின் பெயர்கள், பெரும்பாலும் இப்போது அந்தந்த ஆளுமையாளர்களைச் சிறப்பிப்பது போல் விளிக்கப்படுவதில்லை; எழுதப்படுவதுமில்லை.
ஆங்கிலேயர்களின் ஆட்சி நிர்வாகம், வாயில் வந்தபடி சுருக்கி விளித்தல், பெயர்க்காரணத்தைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் ஆவணங்களில் எழுதிப் பதிவு செய்தல் போன்றவற்றின் காரணமாக, நாம் நமது ஊர்களின் அழகழகான காரணப் பெயர்களை சிதைத்து சீர்குலைய விட்டிருக்கிறோம்.
ஒரு மாணவன் டிரிப்ளிக்கேன் என்று ஆங்கிலத்தில் எழுதுவதில் தவறு செய்துவிட்டால் அதன் பொருட்டு ஆசிரியர் அவனைக் கண்டித்து திருத்துவார். ஆனால் இப்படியெல்லாம் ஊர்ப்பெயர்களை எழுதுவதே பிழையானது என்று எந்த ஆசிரியரும் தனது மாணவனைத் திருத்துவதில்லை. தமிழின் சிறப்பு குறித்து நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அப்பெருமையை ஊர்ப்பெயர்களை விளித்து எழுதும் முறையில் நாம் இழந்திருக்கிறோம் என்பதே உண்மை.
சிலர் ழகரத்தை லகரமாக உச்சரிப்பது குறித்துக் கவலைப்படுவது உண்டு. அந்தக் கவலை நியாயமானதுதான். ஆனால் இன்றைய நமது குழந்தைகள் தங்களது பாடப்புத்தகங்களில் டமில் நாடு என்றுதான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தூய தமிழ்ப் பெயர்களையும் ழ கர எழுத்துகளைக் கொண்ட பெயர்களையும் அதனதன் உண்மையான உச்சரிப்பு முறையிலேயே ஆங்கிலத்திலும் எழுதமுடியும். ஆனால் நாம்தான், தமிழில் ஏழுமலையாக இருப்பவரை ஆங்கிலத்தில் ஏலுமலையாக மாற்றுகிறோம்.
நல்வாய்ப்பாக, நாடு முழுவதும் ஊர்ப்பெயர்களைக் குறித்த விழிப்புணர்வு தற்போது பரவி வருகிறது. தங்களது ஊர்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் உரிய உண்மையான காரணப் பெயர்களைக் கண்டறிந்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிற போக்கு இளைஞர்களிடையே மேலோங்கி வருகிறது. 
நியாயமாக, இத்தகைய விழிப்புணர்வு முதலில் தோன்றியிருக்கவேண்டிய மாநிலம் தமிழ்நாடுதான். ஏனெனில், இங்குதான் கவலைதரத்தக்க வகையில் ஊர்ப்பெயர்கள் திரிந்தும், மாறியும், சுருங்கியும், பிறமொழி கலந்தும் உள்ளன. ஆங்கிலத்தில் எழுதும்போது ஒரு பிழை நேர்ந்துவிட்டால் துடித்துப் போவதும், தமிழில் எழுதும்போது பிழை நேர்ந்துவிட்டால் அதை இயல்பாகக் கருதுவதுமான ஒரு பொதுப்புத்தி நம்மிடையே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை மாறவேண்டும்.
ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தெரிந்து கொண்டால் அவற்றின் வாயிலாக அந்தந்த ஊர்களின் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள முடியும். சான்றாக, சின்னதறிப்பேட்டை எனும் பெயருக்குள் நுழைந்தால் நெசவாளர்களின் தறி ஒசை நமக்குக் கேட்கிறது. அந்த சின்ன தறிப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டையாகிவிட்டால் அதன் வழியாக எதையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. 
பொழில் ஆட்சி எனும் பெயரைக் கேட்டவுடன் இயற்கையின் அழகான காட்சிகளை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், பொள்ளாச்சி என்கிற பெயரைக் கேட்டால் எதையும் கற்பனை செய்ய முடியாது.
இந்த நிலை நீடித்தால் நமது ஊர்கள் அனைத்தும் நமது மொழியிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிடும். அரசும், பல்வேறு அமைப்புகளும், அஞ்சல்துறையும் இதில் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும். அந்தந்த பகுதிகளின் இலக்கிய அமைப்புகளின் அழைப்பிதழ்களில் கூட அந்தந்த ஊர்களின் உண்மைப் பெயர்கள் இடம் பெறுவதில்லை என்பது வேதனையாகும்.
அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும், திருமண அழைப்பிதழ்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்துகளிலும், சொத்து பத்திர ஆவணங்களிலும் அந்தந்த ஊர்களின் உண்மைப் பெயர்களே இடம் பெறவேண்டும் என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ஊரும் பேரும் என்ற நூலும், அதே போன்று ஆய்வு செய்து எழுதப்பட்ட மற்ற அறிஞர்களின் நூல்களும் அரசுக்கு வழிகாட்டிகளாக அமையும்.
முதலில் ஊர்களின் உண்மைப் பெயர்களை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஊடகங்களில் அவற்றைப் பொதுமைப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வது, தமிழுக்கு வலிமை சேர்ப்பதாக அமையும்.
குறிப்பாக, நமது ஊர்ப்பெயர்கள் அடைந்துவிட்ட மாற்றங்களையும் அவற்றை மீட்டெடுத்துப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும், மீண்டும் அப்பெயர்கள் மாற்றமடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய தேவையையும் பாடத்திட்டங்களின் வாயிலாக மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வூட்ட வேண்டும். 
ஊர்களுக்கான காரணப் பெயர்களைக் காப்பதில் அடங்கி இருக்கிறது ஒரு மொழியின் பாதுகாப்பும் அம்மொழியைப் பேசும் இனத்தின் பாதுகாப்பும்!

கட்டுரையாளர்:
கவிஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com