நம்மிலிருந்து தொடங்குவோம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழ்ப் பொன்மொழி உலகமெல்லாம் அறிந்ததே. ஆனால் அதைத் தொடர்ந்து வருகிற வரிகளைப் பலரும் அறிவதில்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழ்ப் பொன்மொழி உலகமெல்லாம் அறிந்ததே. ஆனால் அதைத் தொடர்ந்து வருகிற வரிகளைப் பலரும் அறிவதில்லை.
தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன' என்பனவே அவ்வரிகள். தனிமனிதனாயினும் குடும்பமாயினும் அரசாயினும் தமக்கு நேர்கிற தீவினைகளுக்கும் நல்வினைகளுக்கும் தாமே பொறுப்பு. அவை பிறரால் வருவதில்லை என்பதே அதன் பொருளாகும்.
இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும் நாமே பொறுப்பு என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கின்ற ஊழலுக்கும் கையூட்டுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தானா பொறுப்பு? அதற்கு உடன்படவோ, ஏற்றுக் கொள்ளவோ இசைந்து விட்ட நாமும் பொறுப்பல்லவா? 
ஆட்சி சரியாக இல்லை. ஆளுவோர்க்குத் திறமில்லை என்கிற எதிர்வாதம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எந்த ஆட்சி நடைபெற்ற போதும் உரக்க ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் யார் பொறுப்பு? நம்மீது நமக்கு நம்பிக்கை இல்லாததைப் போலவே நமக்குப் பொறுப்பும் இருப்பதில்லை.
கிராமத்தில் பொதுவாக வழங்கப்படுகிற பழமொழி தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்' என்பது. அடுத்தவர்க்கு நேரும்போது ஆறுதலும் அறிவுரையும் பிறக்கிறது. ஆனால் நமக்கு நேரும்போது மட்டும் வலிமட்டும் தெரிகிறது என்பதுதான் அந்தப் பழமொழியின் பொருள்.
பிரியாணிக்கு ஆசைப்பட்டுக் குடும்பத்தையும் குழந்தைகளையும் இழந்து விடுவதிலிருந்து தொடங்கி, பணத்துக்கு ஆசைப்பட்டு ஆட்சியையும் அதிகாரத்தையும் உரிமைகளையும் இழந்து விடுவது வரைக்கும் எல்லாவற்றுக்கும் நாம்தானே பொறுப்பு. எல்லாம் பட்ட பின்னால் புரிகிறது.
இன்றைக்கு நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற எரிபொருள் விலை உயர்வுக்கும் காரணம் நாமே. எத்தனை விலை உயர்ந்தாலும் வாங்கித்தான் தீருவோம் என்று நாம்தான் வரிசையில் நிற்கிறோம். அப்படிப் பழகிக் கொண்ட காரணத்தால்தானே முடிந்தால் தொட்டுப் பார் என்று அதுவும் உயரம் ஏறுகிறது. 
பத்தாண்டுகளுக்கு முன்னால்வரை மிதிவண்டிகள் நின்ற வீடுகளில் எல்லாம் இப்போது இரண்டு மூன்று இருசக்கர வாகனங்கள். அவை இருந்த வீடுகளில் இப்போது மகிழுந்துகள். மகிழுந்துகள் ஒன்று இருந்த வீடுகளில் இரண்டு மூன்று. இதைவிடப் பெரிய வேடிக்கை வீடுகட்டும்போதே அவைகளுக்கு என்று தனித்த இடம் வேறு. ஆண்டுவாரியாக விலைவாசி உயர்வைப் பட்டியலிடும்போதே இந்தப் பட்டியலையும் சேர்த்துக் கணிக்க வேண்டாமா?
எரிபொருள் என்பது செல்வர்களுக்கு ஒரு செலவு அவ்வளவே. ஆனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வருமானத்தில் பாதி. வாழ்வியல் சூழல் இந்த இக்கட்டான நிலைக்கு நம்மைத் தள்ளி விட்டாலும் அதற்கும் நாமே பொறுப்பு என்பதை மறந்து விடுவதால் என்ன புண்ணியம்?
பொருளாதார நோக்கத்தில் ஒரு பொருளின் விலை உயர்ந்தபடி சென்றும் அதன் தேவை குறையவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? மாதமொருமுறை என்றும் வாரமொருமுறை என்றும் இருந்த எரிபொருள் விலையின் ஏற்றம் தற்போது நாளுக்கொருமுறையில் வந்து நிற்கிறது. அதுவே நாளை வெகுவிரைவில் மணிக்கொரு முறையும், நிமிடத்திற்கொருமுறையும், விநாடிக்கொருமுறையும் உயராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இதைவிடவும் பெரிய ஆபத்து இன்னும் எத்தனை நாளைக்கு இந்த எரிபொருளும் கிடைக்கும் என்பதே. ஒரு கணக்குக்காக வைத்துப் பார்த்தால் இன்னும் பத்தாண்டுகளுக்கு அது தொடர்ந்து கிடைக்கும் என்றாலும் அந்தப் பத்தாண்டுகளில் அதன் தேவையும் விலையும் இப்படியே நிலையாக இருந்து விடுமா என்ன? ஐந்து மடங்கு உயர்ந்து விட்டால், ஆண்டுகள் இரண்டாகக் குறைந்து விடுமே.
இதற்கெல்லாம் அரசுதான் பொறுப்பு என்று இந்த அரசையும் அந்த அரசையும் மாற்றி மாற்றிக் குற்றம் சொல்லலாம்தான். அந்தந்தக் காலங்களில் அந்தந்த அரசுகளைத் தேர்ந்தெடுத்ததும் நாம்தானே? நாம் செய்வதையே அரசும் செய்கிறது. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்கிறது தமிழ் மரபு. இங்கே மக்கள்தானே அரசர்கள். அவர்கள் செல்லுகிற வழியில்தானே ஆட்சியும் நடக்கும்.
எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்' என்கிறது இன்னொரு பழமொழி. இதுவும் நமக்காகத்தான். முழுமையாக எரிபொருளின் தேவையைப் புறக்கணித்து விட முடியாவிட்டாலும் கணிசமாகக் குறைக்கலாமே. தேவைக்கு என்பதைத் தவிர தேவையில்லாத நேரத்தில் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கலாமே.
இந்த மாதத்தில் இத்தனை அளவுக்குமேல் பயன்படுத்துவதில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அதற்கு மாற்றாகச் சில வழிகளைத் தேடிக் கொள்ள முடியும். எத்தனை விலை உயர்ந்தாலும் என்னால் தர முடிந்த தொகை இவ்வளவுதான் என்று கட்டுப்படுத்தி அதற்கு மாற்றாக இயற்கை முறைகளைப் பின்பற்ற முடியாதா? 
இப்படி ஒவ்வொருவரும் உறுதி கொண்டால் தேவை குறையும். பிறருக்கு வழிகாட்டுவதற்கு முன்னால் நாம் கடைப்பிடிப்பது முக்கியமல்லவா? உச்சத்திலிருந்து மாற்றத்தைத் தொடங்குவதற்கு மாறாக, அடியிலிருந்தே மாற்றத்தைத் தொடங்கினால் என்ன?
தனக்கு வந்தால் தெரியும் என்பதை மறுபடியும் நினைத்துப் பார்க்கலாம். இதெல்லாம் நடக்கிற செயலா எனத் தோன்றலாம். இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்கிற நிலை வந்து விட்டால் என்னாகும் என்பதையும் அதனோடு சேர்த்துச் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com