மக்கள் தீர்ப்பளிக்கட்டும்!

தமிழ்நாடெங்கும் தடபுடல் அமளி' என்றொரு கற்பனையான நோக்கில் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழ்நாடெங்கும் தடபுடல் அமளி' என்றொரு கற்பனையான நோக்கில் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். உண்மையாகவே அப்படி நடைபெற்றால் எவ்வளவு சிறப்பாக அமையும் எனும் ஆர்வத்தைத் தூண்டுவது அப்பாடல். பாடல் வெளியாகி எண்பதாண்டுகள் முடியும் நிலையிலும் பாரதிதாசன் விரும்பிய அந்த அமளி நடைபெறவில்லை. ஆனால், அவ்வப்போது வேறு வேறு அமளிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமளி, இந்த நிலை நீடித்தால் சமூகச்சூழல் என்னாகும் எனும் கவலையைத் தோற்றுவிக்கிறது.
கடந்த மூன்றாம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், தமிழிசை சவுந்தரராசன் தூத்துக்குடியில் விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட போது, சக பயணியான பல்கலைக்கழக மாணவி லூயி சோபியா என்பவர் தமிழிசையை நோக்கி பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக' என முழக்கமிட்டிருக்கிறார். அப்போது எதுவும் பேசாது விமானத்திலிருந்து இறங்கிய அம்மையார் விமான நிலையத்தில் மேற்படி மாணவியிடம், விமானத்திற்குள் இவ்வாறு நடந்து கொள்ளுதல் சரியா' எனக் கேட்க, முழக்கமிடுதல் எனது கருத்துரிமை' என மாணவி கூற இருவர்க்குமிடையே வாக்குவாதம் நடந்த பின்னர், தமிழிசையார் இது பற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட, அவர்கள் காவல்துறையினரிடம் மாணவி மீது புகார் அளிக்க, காவல் துறையினர் மாணவியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க, பின்னர் மாணவி சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் மாணவி நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 
இந்த நிலையில்தான் அ.தி.மு.க தவிர்த்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் அறிவுஜீவிகள் எனச் சொல்லிக் கொள்வோரும் சோபியாவின் கைதுக்குக் கண்டனக் கணைகளை வேகவேகமாக வீசித் தமிழ்நாட்டைத் தடபுடல் அமளியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுகளெல்லாமும், மாணவி சோபியா எழுப்பிய, பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக' என்னும் முழக்கம் சரியா - தவறா என்னும் நோக்கிலேயே அமைகின்றன. இந்த இடத்தில்தான் முரண்பாடு முட்டுகின்றது.
இங்கு நாம் கவனிக்க வேண்டுவது பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக' என்னும் முழக்கம் சரியா - தவறா என்பதல்ல. தனிமனித ஒழுக்கம் என்னும் நோக்கிலும், சமூகப் பொறுப்புணர்வு என்னும் முறையிலும், முற்றிலும் அமைதி காக்க வேண்டிய விமானத்திற்குள்ளாக, விமானப் பயணத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத வெளியுலக அரசியல் சார்ந்த முழக்கமெழுப்புதல் அனுமதிக்கத் தக்கதா என்பதை முடிவு செய்துவிட்டு, அதன் பிறகுதான் கைது பற்றியும், பிற நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டும். அதுதான் அறிவு நாணயமுள்ள செயலாகும். 
உரிய அனுமதியுடன் பொதுக்கூட்ட மேடையிலும், குறிப்பிட்ட பிரச்சனைக்காக நடைபெறும் ஊர்வலத்திலும் முழக்கமிடுதல் வேறு. பொது இடத்தில் பொது அமைதி குலையும் படியாக நடந்து கொள்ளுதல் குற்றவியல் சட்டப்படித் தண்டனைக்குரிய குற்றம் என்பது கூடத் தெரியாதவர்களா நம் நாட்டுக் கட்சித் தலைவர்கள் ? விமானத்திற்குள் முழக்கமெழுப்புதல் கருத்துரிமையென அனுமதிப்போமானால் நாளை பள்ளி - கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்கள் அவரவர் கருத்துரிமையை நிலைநாட்ட முற்பட்டால் நிலைமை என்னாகும் ? அவ்வளவேன்? கருத்துரிமை பேசும் வீராங்கனை லூயி சோபியா தான் பயின்ற பள்ளி - கல்லூரி வகுப்பறைகளில் இது போல எது பற்றியாவது முழக்கமெழுப்பியதுண்டா? அல்லது ஆய்வு மேற்கொண்டிருக்கும் பல்கலைக்கழக ஆய்வறையில் பல்கலைக்கழகத்திற்குத் தொடர்பில்லாத பிரச்சனை குறித்து முழக்கமிட்டுக் காட்டுவாரா ? ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடும் ஒவ்வொருவரும் அறிவுபூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.
இவ்விடத்தே கண்டிப்பாகக் கேட்க வேண்டிய இன்னொரு கேள்வியுமிருக்கிறது. குறிப்பிட்ட விமானத்தில் தமிழிசை இடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இருந்து, லூயி சோபியா இருந்த இடத்தில் வேறொருவர் இருந்து, அவர் ஸ்டாலினை பார்த்து, தி.மு.க. ஒழிக' என முழக்கமிட்டிருந்தால் கருணாநிதியின் உடன் பிறப்புக்களும், ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் எனச் சூளுரைக்கும் தமிழகக் கட்சித் தலைவர்களும் அப்பெண்ணின் முழக்கத்தை எதிரொலித்துக் கருத்துரிமையை நிலைநாட்டுவார்களா ? 
இனி பிரச்னையின் இன்னொரு பக்கத்தைக் கவனிப்பதும் அவசியமாகிறது. விமானத்திற்குள் அந்தப் பெண் முழங்கியதைக் கேட்டும் கேளாதவர்போல இறங்கிய தமிழிசையார், விமான நிலையத்தில் அந்தப் பெண்ணிடம் நயமாக எடுத்துரைத்தும் அந்தப் பெண் தனது தவற்றை உணராது பிடிவாதம் பேசிய நிலையில் அமைதியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறி செய்தியாளரைக்கூட்டி இளைய சமுதாயத்தினரின் பொறுப்பற்ற போக்கு குறித்து கண்டனம் தெரிவித்திருந்தால் அதனால் அவருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் எத்தகைய நெருக்கடியும் ஏற்பட்டு விடாது. ஆனாலும் விமானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி அதற்குரியோரிடம் தெரிவித்தல் சட்டப்பூர்வமான கடமை என்னும் முறையில் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டதைக் குற்றப்படுத்த வழியில்லைதான். ஆனால், அதற்கு மேலாக அம்மையாரும், அவர் சார்ந்த கட்சியின் மூத்த தலைவர்களும் தூக்கிப்போடும் வெடிகுண்டுதான் பாரதிய ஜனதா கட்சியை ஏளனப்படு குழியில் தள்ளுவதாகிறது. அதாவது மாணவி லூயி சோபியா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவராக, அல்லது பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்பது.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் இன்னின்ன வகையில் சிறப்பானவை. எங்கள் கட்சி ஆட்சியின் இன்னின்ன நடவடிக்கைகள் இவ்விவ்வாறு நாட்டு மக்களுக்கு நலம் விளைவிப்பன. எங்கள் கட்சி ஆட்சி எப்படிப் பாசிச கட்சியாகிறது எனக் கேள்வி எழுப்புதலே நேர்மையான அரசியல் நெறியாகும். அதற்கு முன் ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுதல் கடப்பாடாகின்றது. எது பயங்கரவாதம் ? யார் பயங்கர வாதிகள் ?
இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீசுக்கு நஞ்சருந்தி சாகும்படியான மரண தண்டனை விதிக்கக் காரணமென்ன ? சாக்ரட்டீசு ஒரு பயங்கரவாதி - சமூக விரோதி என்னும் முறையில்தான் மரண தண்டனைக்காளானார். பயங்கரவாதச் சமூகவிரோதி என்னும் குற்றச் சாட்டின் பேரில்தான் இயேசு சிலுவையிலறையப்பட்டார்.
அதே வகையான நெருக்கடியின் விளைவாகத்தான் நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர வேண்டியவரானார். ஓளரங்கசீப்புக்கு வீரசிவாஜி பயங்கரவாதி, ஆங்கிலேய ஆட்சியாளர்க்கு வீரபாண்டிய கட்டபொம்மனும், மங்கள் பாண்டேயும், வ.உ.சி.யும், திலகரும், பகத் சிங்கும், சாவர்க்கரும் பயங்கரவாதிகள். ஜார் மன்னனுக்கு லெனின் பயங்கரவாதி. சியாங்கே சேக்குக்கு மாசேதுங் பயங்கரவாதி. ஜியாவுல் ஹக்குக்கு முஜிபுர் ரகுமான் பயங்கரவாதி. நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திராகாந்திக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணனும், வாஜ்பாயும் பயங்கரவாதிகள். சோசலிசச் சீன அரசுக்கு, தியான்மென் சதுக்கத்தில் நிராயுதபாணிகளாகக் குழுமியிருந்த ஆயிரக் கணக்கான, பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளாகி புல்டோசர் கொண்டு நசுக்கியழிக்கப்பட்டார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வடகொரிய அதிபர் பயங்கரவாதி. இப்படியாக இந்தப் பட்டியல் நீளமாகிறது. அதே சமயம் இந்தப் பட்டியலில் பயங்கரவாதிகளாகச் சுட்டப்படுவோர் எல்லாரும் உலகோரால் - நாட்டு மக்களால் போற்றிக் கொள்ளப்படுதலைக் கவனிக்க வேண்டும்.
சரி, பா.ஜ.க ஆட்சி பாசிச ஆட்சியாதல் யாங்கனம் ? இந்தியாவில் எந்தப் பகுதியிலும் எந்தக் குழுவினர்க்கும் அன்றாட வாழ்வியலுக்குப் பயன்படாத வடமொழியை இந்தியா முழுமைக்கும் பொது மொழியாக்குவதன் வழியாகவும், இந்தியா முழுமைக்கும் பொதுப் பாடத்திட்டம், பொதுத் தேர்வு என்றாக்குவதன் வழியாகவும் மாநில மொழிகளையும் மாநில மொழியாளர்களின் வரலாற்றுச் சிறப்புக்களையும் சிதைத்து இந்தியாவை இந்து - சமசுக்கிருத ஒருமுகத்தன்மையாக்கும் முயற்சியும், மாநிலங்கள் தோறும் வெவ்வேறு பாடத்திட்டப்படிப் படித்து பள்ளியிறுதி வகுப்பில் மாநில அரசின் பொதுத் தேர்வுக்கென முயன்று படித்துப் பெற்ற மதிப்பெண்களைச் செல்லாததாக்கி, சி.பி.எஸ்.இ. என்னும் மத்திய பாடத்திட்டப்படியான நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர்கல்வி என்னும் அடாவடித்தனமும், சென்னை வரை சென்றறியாத பிள்ளைகளை இமயமலைப் பகுதி சென்று தேர்வெழுதச் செய்யும் கொடுமையும், வினாத்தாள் குளறுபடியால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாத கொடூரமும் பாசிசம் அல்லவென்றால் பாசிசம் என்னும் சொல்லை அகராதியிலிருந்து நீக்கிவிட வேண்டும்.
நெருக்கடி நிலைக்காலத்தில் இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா' என்றார்கள் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியினர். தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையாக பா.ஜ.க. தான் இந்தியா, இந்தியாதான் பா.ஜ.க' என்னும் முறையில் பா.ஜ.க. ஆட்சியை விமர்சிப்போரெல்லாம் தேச விரோதிகளாக பயங்கரவாதிகளாக அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். 
ஆட்சியை விமர்சித்தல் பாசிசமா? விமர்சிப்போரெல்லாம் பயங்கரவாதிகளாக அடக்கப்படுதல் பாசிசமா? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com