வெள்ளமும் வறட்சியும்

கடந்த மாத இறுதியில் மேட்டூர் அணையிலிருந்து 2.5 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி மற்றும் கெள்ளிடம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கடந்த மாத இறுதியில் மேட்டூர் அணையிலிருந்து 2.5 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி மற்றும் கெள்ளிடம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணைக்கு கீழே கரூர் மாயனூர் தடுப்பணை, திருச்சி முக்கொம்பு தடுப்பணை, தஞ்சை கல்லணை தடுப்பணை, அணைக்கரை தடுப்பணை ஆகியவைஉள்ளன.
இவை நான்கும் தடுப்பணைகளே தவிர நீரைத் தேக்கி வைத்து தேவைப்படும்போது திறந்துவிடக்கூடிய அணைகள் அல்ல. இங்கிருந்து நீரை பிரி த்து அனுப்பும் பணிதான் இங்கு தொடர்ந்து நடைமுறையில் இருந்துவருகிறது.
இந்த தடுப்பணைகளை அதனுடைய வலு குறையாமல் பாதுகாத்து பராமரிப்பதற்காக பலகோடி ரூபாய் அளவிற்கு மக்களுடைய வரிப்பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தொகை தடுப்பணைகளைப் பராமரிக்க முறையாக செலவிடப்பட்டதா என்பது கேள்விக்குறியே.
அண்மையில் முக்கொம்பில் நீர் திறந்துவிட்டபோது ஒன்பது மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாக செலவிடப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த மதகுகள் உடைவதற்குக் காரணம் ஆற்று மணல் அளவுக்கு மீறி கொள்ளையடிக்கப்பட்டதே என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குறிப்பாக, ஆற்றங்கரையில் எந்த வரைமுறையும் இன்றி மணல் திருடுவது, ஆற்றையே சுரண்டுவது போன்ற காரணங்களால்தான் இந்த அவலம் தொடர்கிறது. இதுகுறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பதும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களிடம் பெரும் தொகைப்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு துணைப்போவதும்தான் இந்த நிலைமைக்கு காரணம். 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கொம்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்டு 200 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் பலமுறை பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த சேதமும் இதற்கு எற்பட்டதில்லை.
1983-ஆம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 1.50 லட்சம் கன அடிவரை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு கொள்ளிடத்தில் சுமார் 4 லட்சம் கன அடிவரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த காலகட்டங்களில்லெல்லாம் இந்த தடுப்பணைகளுக்கும் மதகுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்பட்டதில்லை.
கடந்த கால பெரு வெள்ளத்தை விட குறைவாக வினாடிக்கு 2.50லட்சம் கன அடி தண்ணீர் சென்ற நிலையில் இப்போது மதகுகள் உடைந்துள்ளன என்றால் தடுப்பணைகள் போதிய பராமரிப்பில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே காவிரி டெல்டா பகுதிகளைப் பொருத்தவரை பொதுப்பணித்துறை செயலற்ற துறையாக மாறிவிட்டது. இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும் மாநில அரசு அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. அதுமட்டும் அல்லாமல் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பொறுப்பற்ற பொதுப்பணித்துறையின் முகத்திரையும், அரசின் மெத்தனமும் முக்கொம்பு மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
கல்லணை, மாயனூர், அணைக்கரை தடுப்பணைகள் வலுவுடன் உள்ளதா என்ற அச்சம் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னொருபுறம் டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான கிராம மக்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை நீடிக்கிறது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளிலுள்ள கடைமடைப் பகுதிகளுக்கு இப்போதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதேபோல் வெண்ணாற்றிலிருந்து பிரியும் வடவாற்றிலும் போதுமான தண்ணீர் வராததால் திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, நிம்மேலி, மேலநத்தம், மகாராஜபுரம் ஆகிய கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 
மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, வெள்ளையாறு, பாண்டவையாறு, ஓடம்போக்கி, முள்ளியாறு, பாமணியாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, மரைக்கா கோரையாறு, போன்றவற்றில் காவிரி நீர் திறந்துவிடப்பட்டும் போதுமான அளவிற்கு தண்ணீர் ஓடவில்லை.
அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைமடையான சீர்காழி தாலுகாவில் உள்ள கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் கொள்ளிடம் தெற்கு ராஜன், புது மண்ணியாறு, பொறையாறு வாய்க்கால் கழுவம்மலையாறு உள்ளிட்ட வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூர் வாராமல் செடிகொடிகள் படர்ந்தும் கிடப்பதால் தண்ணீர் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும் முழுமையான அளவிற்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் எவருக்கும் பயன்படாமல் வீணாகக் கடலில் கலந்தது. அந்தத் தண்ணீரை டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிக்கு முறையாக திருப்பிவிட்டிருந்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும்.
ஆனால், அதற்கான நீர் மேலாண்மைக் கொள்கையோ, நீர் சேமிப்புத்திட்டமோ எதுவும் தமிழக அரசிடம் இல்லை. இதன் விளைவாக ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும் மற்றொரு பக்கம் வறட்சியும் ஒரேநேரத்தில் உருவாகியுள்ள விசித்திரமான நிலையை டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com