கருத்துச் சுதந்திரம் காப்போம்

வலிமை மிக்கவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை மாறி, எல்லோரும் சமம் எனும் நிலை அடைய, மனித இனம் பல நூற்றாண்டுகளை கடந்திருக்கின்றது. அந்நிலையும் கூட,


வலிமை மிக்கவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை மாறி, எல்லோரும் சமம் எனும் நிலை அடைய, மனித இனம் பல நூற்றாண்டுகளை கடந்திருக்கின்றது. அந்நிலையும் கூட, படிப்படியாகத்தான் வந்தது. ஒரு மனிதனின் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களைச் சுதந்திரமாக பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுமானால் அதனை விட கொடூரமான நிலை வேறு எதுவும் இருக்க முடியாது. 
அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு எதிராக கருத்துக்கள் பரவாத வண்ணம் தடுப்பது ஒருபுறமும் - கருத்து சுதந்திரத்துக்குமான போராட்டம் இன்னொருபுறமும் எனத் தொடர்ந்து காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆட்சியில் இருப்போர், கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதும், உரிமை வேட்கை கொண்டோர் அதனை எதிர்த்துப் போராடுவதும் உலகெங்கும் நிலவி வருகிறது. 
குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் என்பது, அரசு மற்றும் பலம் வாய்ந்த அமைப்புக்களின் ஏராளமான எதிர்ப்புகளை மீறி வளர்ந்து பின்னரே ஏற்று கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியது.
அரசாங்கம், மக்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது என்பது, கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. கருத்துச் சுதந்திரத்துக்காக, மிகப் பெரும் விலையை சாக்ரடீஸ் தந்தார்.
அரசுக்கும் - மதவாதிகளுக்கும் எதிரான கருத்துக்களை மக்களிடையே பரப்பியதற்காக மரண தண்டனை பெற்றார். 
ஜனநாயகத்தின் தொட்டில் எனப்படும் இங்கிலாந்தில் 15-ஆம் நூற்றாண்டில், பெரும் வசதியும், செல்வாக்கும் மிக்கவராக விளங்கினார் தாமஸ் மோர் பிரபு. 
இன்றும் பிரபலமாக விளங்கும் உடோபியா எனும் நூலை எழுதினார். ஆனாலும், அரசு -அரசர் - மத அமைப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கிய காரணத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, கண்டம் துண்டமாக வெட்டி வீசி எறியப்பட்டார். 
15-ஆம் நூற்றாண்டில், அச்சுக்கூடங்கள் தொடங்கப் பட்ட பின்னர், எழுத்துகளும் - கருத்துகளும் வேகமாக மக்களிடையே பரவின. அதன் மூலம் அரசுக்கு எதிரான கருத்துக்கள் பரவுவதனைத் தடுக்க அரசுகள், கடிவாளம் போட்டன. பல நாடுகளில், அரசு அனுமதியின்றி புத்தகங்கள் அச்சிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர், ஹிட்லரின் ஆலோசகர் கோயபெல்ஸ், சுமார் இருபதாயிரம் புத்தகங்களை ஒரே சமயத்தில் தீயிட்டு சாம்பலாக்கினார். புத்தகங்களைக் கொளுத்துவதில் துவங்குவது என்பது, மனிதர்களை கொளுத்துவதில் சென்று முடியும்' என்ற கணிப்பு உண்மையானது. இதனை நாம் யாழ்ப்பாணத்திலும் கண்முன்னேக் கண்டோம். 
வாளேந்தியவன் வாளால் அழிவான்' என்பது பழங்கதை. ஆனால், சில மதவெறி அமைப்புகள் எழுதுகோலால் வாழ்பவன், வாளால் அழிவான்' என்ற புதிய அச்சுறுத்தலை பல நாடுகளில் முன்னிறுத்துகின்றன. அந்த அளவுக்கு எழுத்துகள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. 
இப்படியெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் கருத்து சுதந்திரத்துக்கான முன்முனைப்பு நடைபெற்று கொண்டுதான் இருந்தது. மிகச் சிறிய நாடான, ஸ்வீடன், எழுத்து சுதந்திரத்தினை சட்டபூர்வமாக அங்கீகரித்து, தணிக்கை முறையை அகற்றி பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. 
இது ஒருபுறமிருக்க, நம்நாடு கடந்து வந்த பாதையை நாம் கவனிப்போம்:
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி' எனும் நிலை இருந்தபோது, மன்னர் வணங்கும் தெய்வத்தையே மக்களும் வணங்கும் கட்டாயமும் நிலவியது. 
ஒரு நூற்றாண்டுக்கு முன், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நடைபெற்ற போது, நம் நாட்டில் பத்திரிகைகள் பெரும் இன்னலுக்குள்ளாகின. பத்திரிகைகள், புத்தகங்கள் வெளியிட, காவல் துறையின் அனுமதி என்பது கட்டாயமாக்கப்பட்டது. தேச விரோத' எழுத்துகள் என்பவை, நீதித்துறையால் அல்ல, காவல் துறையால் நிர்ணயம் செய்யப்பட்டது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில், ராணுவத்துக்கு முன்னுரிமை தரப்பட்டு, உணவுப் பொருள்கள் அனுப்பப் பட்டன. இதனால், செயற்கையான பெரும்பஞ்சம் வங்காளத்தில் நிலவியது.
பல லட்சம் பேர்களை பலி வாங்கிய, அரசால் உருவாக்கப் பட்ட பஞ்சம்' குறித்து எழுதிய பத்திரிகைகள் தடை செய்யப் பட்டன. சாமானிய மக்கள் அனுபவித்த கொடுமைகள், பிறருக்குத் தெரியாத வண்ணம் மறைக்கப் பட்டன. 
சில பத்தாண்டுகளுக்கு முன்னர், நம் நாட்டில் நெருக்கடி நிலையின்போது, எழுத்து - பேச்சு உரிமை முழுமையாக மறுக்கப் பட்டது. அச்சு ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்குப் பிறகே வெளிவந்தன. அப்போது கருத்துரிமைக்காக பலரும் துணிந்து குரல் கொடுத்தனர். இது இந்தத் தலை முறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
ஆக, கருத்துச் சுதந்திரத்தினை உயர்த்திப் பிடிக்க, ஏராளமானோர் பெரும் விலை கொடுத்துள்ளனர். அதனை நசுக்குவதற்காக எத்தனையோ அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. சில தனி மனிதர்கள், நீதிமன்றங்களுக்குச் சென்று, போராடிப் பெற்ற உரிமைகள் இன்று பலருக்கும் பலனளிக்கின்றன.
பலர் போராடிப் பெற்ற உரிமைகளையும் - கருத்து சுதந்திரத்தையும் சிறப்புறப் பேணி பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com