நடுப்பக்கக் கட்டுரைகள்

விவசாயமும் விலைக்கொள்கையும்

இரா. செல்வம்


வேளாண் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தாலும், விவசாயிகளின் வாழ்வு தன்னிறைவு அடையவில்லை. தரமற்ற நிலங்கள், வறண்ட ஆறுகள், பருவநிலை மாற்றங்கள், தொய்வடைந்த தொழில்நுட்பங்கள், ஏற்றம் பெறாத விளைச்சல்கள், விளைவிக்கப்பட்ட வேளாண் பொருள்களுக்குக் கிட்டாத விலைகள், வீணடிக்கப்படும் உணவுகள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் இந்திய விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் சுழன்றுக் கொண்டுள்ளன. இதனால் வேளாண்மையைத் தொடர்ந்து செய்வது என்பது விவசாயிகளுக்குக் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதிகம் விளைவித்தாலும் விவசாயிகள் வளம் காண்பது இல்லை. காரணம், விளைபொருள்களை உற்பத்தி செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளும், விற்பனை விலையில் உள்ள உறுதியற்ற தன்மையும் ஆகும். சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்தி ஓரிடத்தில் இருந்தாலும், விற்பனை உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்றால் மட்டுமே, விளைவித்தல் உறுதிப்படுத்தப்படும்.
உற்பத்தி என்பது பாதிக் கிணற்றை தாண்டுவது மட்டுமே. மீதிக் கிணறு என்பது சரியான விலைக்கு விற்பது. எனவே, விவசாயின் வாழ்வு, பயிரிடும்போது பருவநிலை சூதாட்டத்திலும், விற்பனையின்போது இடைத்தரகர்களின் சூதாட்டத்திலும் சிக்கி தவிக்கின்றது.
விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு சரியான விலை கிட்டாமல் இருப்பது, விவசாயிகளுக்கு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இதனால் இந்திய விவசாயம் கைக்கும் வாய்க்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. எனவே வேளாண்மை விலை ஆணையம் (Agricultural Price Commission) 1965ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் அது வேளாண் பொருள்களின் விலை நிர்ணய ஆணையமாக (Commission for Agricultural Costs and Prices -1985) மாற்றப்பட்டு, அதன் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு, விளை பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை  (Minimum Support Price - MSP) வேளாண் பருவநிலைக்கு முன் அறிவிக்க ஆரம்பித்தது.
இம்முறையில் பயிரின் உற்பத்தி தேவை மேலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த முறை, 1960-இல் உணவுப் பற்றாக்குறையின்போது, விவசாயிகள் உயர் விளைச்சல் தரும் கோதுமை,நெல் ரகங்களைப் பயிரிடுவதற்காகத் தொடங்கப்பட்டது.
இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கை, நெல்-கோதுமைப் பயிர்களுக்கே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துகளைப் பயிரிட அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. 
நெல், கோதுமை, பருத்தி, கரும்பு இவற்றைத் தவிர, மற்ற பயிர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் சந்தை விலை, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அனைத்துப் பயிர்களுக்கும் கிடையாது. 
மேலும், இக்கொள்கையில் விவசாயியின் உழைப்பையும் அவரது குடும்பத்தினரின் முழு உழைப்பையும், நிலத்திற்கான மாற்றுப் பயன்பாட்டு விலையையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே, இனியும் இந்தக் கொள்கையின் அடிப்படையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவது என்பது சாத்தியமற்றது.
மேலும், இதன் மூலம் நெல்-கோதுமை மட்டுமே அதிகம் பயிரிடப்படுவதால் சேமிப்புக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதனால், நெல்-கோதுமைப் பயிரிடும் மாநிலங்களே அதிக பயன் பெறுகின்றன. மேலும், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் வறட்சியான மணல் நிலங்களிலும் நெல் பயிரிடப்பட்டு அதிக பாசன நீர் வீணடிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ நெல் விளைவிப்
பதற்கு மேற்கு வங்கத்தில் 2169 லிட்டர் தண்ணீரும், பஞ்சாபில் 4118 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது.
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய தகவல்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு சென்று சேர்வது இல்லை. நெல் விவசாயிகளில் 16% பேர் மட்டுமே இந்திய அளவில் இந்த விலைக்கொள்கை குறித்து அறிவார்கள். இக்கொள்கை பற்றிய தகவல்கள் சிறு, குறு விவசாயிகளைச் சென்றடையவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இந்த விலைக்கொள்கை காய்கறிப் பயிர்களுக்கும் பொருந்தாது. 
குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகப்படுத்தினால், வேளாண் இடர்ப்பாடுகளையும், விவசாயிகளின் வேதனையையும் நீக்கி விடலாம் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடம் இன்று நிலவுகின்றது. இப்போது 24 வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், விளைபொருள்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்கள் இந்தியா முழுதும் முறையாக அமைக்கப்படவில்லை. இந்திய உணவுக் கழகமோ நெல் மற்றும் கோதுமையை மட்டுமே கொள்
முதல் செய்கின்றது. மற்ற விளைபொருள்களுக்கான கொள்முதல் முறையும் சற்றே சிக்கலானது ஆகும். 
இந்தப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் தேவை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமற்றது. ஏனெனில், உலகளாவிய உற்பத்தியை முன்கூட்டியே கணிப்பதும், இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் விலையை சரியாக நிர்ணயிப்பதும் மாபெரும் சவால்கள் ஆகும். 
தேசிய மாதிரி மதிப்பாய்வு நிறுவனத்தின் (National Sample Survey Organization 2014) அறிக்கையின்படி, கிராமப்புறத்திலுள்ள 15.61 கோடி குடும்பங்களில், 9.02 கோடி குடும்பங்கள் வேளாண்மையை சார்ந்துள்ளன. 42.02% குடும்பங்கள் விளைநிலங்கள் இல்லாமல் உள்ளன.
இக்குடும்பங்களுக்கு இந்த விலைக்கொள்கையினால் எவ்விதப் பயனும் இல்லை. மேலும், இதில் 87% வேளாண் குடும்பத்தினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவார்கள். இவர்களும் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு உற்பத்தி செய்வதில்லை. அதனால் இக்கொள்கையினால் இவர்களுக்கும் யாதொரு பயனும் இல்லை.
எனவே குறைந்தபட்ச விலையை ஒருசில பயிர்களுக்கு உயர்த்துவதன் மூலம் வேளாண் நெருக்கடியை சமாளிக்க முடியாது.
இன்று விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணங்களாக இருப்பது, பொய்த்துப் போகும் நீர்வளம், மீளமுடியாத கடன்சுமை மற்றும் கிராமப்புறங்களில் போதிய மாற்று வேலையின்மை ஆகியவையே. டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தேசிய வேளாண் குழு'வின் அறிக்கையின்படி, நிலச்சீர்திருத்தம், நீர்ப்பாசன வசதி, புதிய தொழில்நுட்பங்கள்,விற்பனைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி, போதிய ஆராய்ச்சி, கல்வி, கிராமப்புற வேலைவாய்ப்புகள் இல்லாமை, நிதி நிறுவங்களின் இருந்து போதிய நிதி வசதி செய்து தராமை இவையெல்லாம் விவசாயிகளுக்கு வேதனை தருவதாக உள்ளன. எனவே, அரசின் விலைக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. 
விவசாயிகளைக் காப்பாற்ற, மத்திய- மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், அதன் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அரசு, வேளாண் விளைப் பொருள்களுக்கு விலை பற்றாக்குறை பண வழங்கல்' (Price Deficiency Payment)  முறையை 2017 -18-இல் எட்டு பயிர்களுக்கு அறிவித்தது. 
அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை, சந்தை விலையை விடக் குறைவாக இருக்கும்போது, அதற்கான விலை பற்றாக்குறையை (Price Deficiency) அரசு வழங்குவதாக அறிவித்தது. இந்த முறை, இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை முன்கூட்டியே வாங்கி பதுக்குவதற்கு வசதியாக அமைந்தது. பற்றாக்குறை நிதியை இவர்களே பெற்றார்கள். இதில் விவசாயிகளைவிட இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களுமே அதிகம் பயனடைந்ததாக தெரிகின்றது. எனவே இம்முறை கைவிடப்படுகின்றது.
எனவே குறைந்த பட்ச ஆதரவு விலைக்கொள்கையை (MSP) குறைந்த பட்ச வருமான கொள்கையாக (Minimum Income Policy)மாற்றினால் விவசாயிகளின் வாழ்வு வளம் பெரும். இந்த மாற்றுக் கொள்கை முறையில் விவசாயிகளை அரசு சென்றடைய வேண்டும்.
அதாவது, நேரடியாக விவசாயிகளுக்கு நிலப்பரப்பின் அடிப்படையில் நிதி உதவி வழங்கலாம். நிலப்பரப்பின் அடிப்படையில் நேரடி நிதியுதவி வழங்கும் முறையானது, ஐரோப்பிய கூட்டமைப்பிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவிலும் நடைமுறையில் உள்ளது. மேலும், இது உலக வர்த்தக நிறுவனத்தின் கொள்கைக்கு உட்பட்டே அமைந்துள்ளது. 
தற்போது மகாத்மா காந்தி நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்ட'த்தின் (MGNREGA)  கீழ் மத்திய அரசு நாடு முழுதும் பயனாளிகளுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கி வருகின்றது. இதே போல் நேரடி நிதி உதவியை, நிலப்பரப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆதார் அட்டை மூலமாக வழங்கலாம்.
நிதி உதவியை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம். மேலும், விவசாயிகளின் நிலப்பரப்பிற்கு உச்ச வரம்பு நிர்ணயித்தும் நிதி உதவி செய்யலாம். இது எளிதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் சமமான நிதி உதவி கிடைக்கும்.குறைந்தபட்ச ஆதரவு விலையில் உள்ள பயிர்களுக்கிடையேயான விலை ஏற்றத் தாழ்வுகள் மறையும்.
இப்போது நிலப்பரப்பின் அடிப்படையில் தெலுங்கானா மாநிலம், விவசாயிகள் முதலீடு ஆதரவு திட்டத்தின் (Farmers' Investment Support Scheme)   மூலம் அவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. கர்நாடக மாநில அரசும் இவ்வாறே செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும், இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களுக்கு நிதியுதவியும் வழங்கலாம். ஆனால், இதில் நில குத்தகைதாரர்களுக்கும், வேளாண் கூலித் தொழிலாளர்களுக்கும் நிதி உதவி கிடைக்காமல் போகலாம்.
வருவாய்த் துறை வேளாண்மைத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மூலம் நில உரிமையாளரையும், குத்தகைத்தாரரையும், கூலித் தொழிலாளர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கும் உதவி கிடைக்கச் செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT