பட்டாலும் புத்தி வரவில்லை சேட்டன்களுக்கு!

சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதுபோல், ஐரோப்பாவில் இங்கிலாந்து,

சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதுபோல், ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, என இரண்டாம் உலகப்போர்வரை தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி சண்டை போட்டவர்கள்கூட ஒரு நாட்டில் உற்பத்தியாகி அடுத்த நாட்டின் வழியாக செல்லும் நதியின் தண்ணீரை தடுக்கவும் இல்லை, தடை போடவும் இல்லை.
நதிநீர்ப் பங்கீடு என்பது உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். மேல்தட்டு விவசாய நீர் உரிமை', கீழ்த்தட்டு விவசாய நீர் உரிமை' என்பவை நதி நீர்ப் பங்கீட்டுச் சட்டமாகும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவே பாயும் சிந்து நதியும், சீனா, இந்தியா, வங்க தேசத்துக்கு நடுவே பாயும் கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளுக்கும் இடையே இதே சட்டங்கள்தான் அமலில் உள்ளன. இந்தியாவுக்கு, பாகிஸ்தானுடனும், சீனாவுடனும், எல்லைப் பிரச்னைகள் இருந்தாலும், நதிநீர்ப் பங்கீட்டில் பெரிய பிரச்னை எதுவுமில்லை. 
ஆனால் தேசியம் சொன்ன காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, இன்ப திராவிடம்' என்று குதூகலித்த திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சரி தமிழ்நாடு தொடர்ந்து நதிநீர்ப் பிரச்னையில் வஞ்சிக்கப்படுகிறது என்பதுதான் வேதனையான உண்மை.
சுதந்திர இந்தியாவில் அறிஞர்கள் ஒன்றுகூடி உலகின் மிகப்பெரிய அரசியல் நிர்ணய சட்டத்தை' தயாரித்தாலும், நதிகளை தேச உடைமை ஆக்கத் தவறியது ஒரு சரித்திர சோகம். வடக்கே பிரம்மபுத்ராவும், கங்கையும், கோசியும் இன்ன பிற நதிகளும் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பயிருக்கும் ஆண்டாண்டு காலமாய் விளைவிக்கும் சேதங்கள் வட இந்தியத் தலைவர்களின் கண்ணனுக்குத் தெரியாதது இந்த நாட்டின் துர்பாக்கியம். ஆண்டுதோறும் வெள்ளத்தில் மூழ்கும் மும்பையை மீட்கவோ, விதர்பாவில் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியைக் காப்பாற்றவோ ஆளில்லை. 
வடக்கே அபரிமிதமான தண்ணீர் என்றால், தெற்கே தண்ணீர்த் தட்டுப்பாடு, நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரில் ஒருவரான பென்னிகுயிக் என்ற பொறியாளருக்கு இருந்த தொலைநோக்குப் பார்வையும், மனிதாபிமானமும் கேரள மற்றும் கர்நாடக மக்களுக்கு இல்லாமல் போனது வேதனை. கர்நாடகத்தில் நீண்ட நிலப்பரப்பு இருப்பதால் சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களுக்கு வாய்த்த தலைவர்கள் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டித் தங்கள் மாநிலத்தை வளப்படுத்தினார்கள். பொறியாளர் விஸ்வேஸ்வரையா கங்கையையும், காவிரியையும் இணைக்க வேண்டும் என்று சொன்னது அற்ப அரசியல் காரணங்களுக்காக கவனிக்கப்படாமல் போயிற்று. இன்றைய கர்நாடகத் தலைவர்களின் நிலைப்பாட்டால் தமிழகத்திற்கு நியாயமாகப் தரப்பட வேண்டிய தண்ணீரைத் திருடும் நிலை வந்துள்ளது. 
கேரளத்துச் சேட்டன்களின் சேட்டை இதைவிடக் கொடுமையானது. மேற்கு மலைத் தொடரில் உற்பத்தியாகும் எண்ணற்ற ஜீவ நதிகளின் நீர் எந்தப் பயனுமின்றி அரபிக்கடலில் வீணாகிறது. மத்திய அரசு அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு எனத் திட்டம் தீட்டினால், கேரளம் தனக்கு தண்ணீர் தேவையில்லாவிட்டாலும் தமிழகத்துடன் பகிர மறுக்கிறது. செண்பகவள்ளி அணையைக் கேரள அரசு உடைத்து திருவிதாங்கூர் மன்னர் தமிழகத்துக்கு தந்த தண்ணீரை வர விடாமல் அழிச்சாட்டியம் செய்கிறது. இந்த நீரினால் விளையும் பொருள்கள் கேரளாவுக்குத்தான் செல்லும் என்பதை மறந்து விட்டது.
இரண்டு தமிழர்கள் கேரள ஆளுநர்களாக இருந்தும், ஒரு கேரளப் பெண்மணி தமிழக ஆளுநராக இருந்தும் நிலைமை மாறவில்லை என்பதுதான் விசித்திரம். ஆனால், பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் பெறும் வாய்ப்பு கிட்டியது. கேரள நதிகளின் தண்ணீரை வைத்து விவசாயம் செய்ய அவர்களுக்கு நிலமில்லை. விவசாயமும், வசதியும் இல்லாத கேரளத்தவர்கள் பல மாநிலங்களிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் குடியேறினார்கள். கன்னடர்களின் உடுப்பி ஓட்டல்களையும், கேரளத்தவர்களின் டீக்கடைகளையும் வாழவைத்தார்கள் தமிழ் மக்கள். ஆனால், இவர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்யும் தீங்கு அளவிட முடியாதது. 
திடீரென்று வந்த எண்ணெய்ப் புரட்சியும்' அதைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஏற்பட்ட செழுமையும் கேரளத்தை வளமாக்கின. வறுமையின் காரணமாக கம்யூனிசம் செழித்து வளர்ந்து, ஜனநாயக முறையில் அதிகாரத்தை பிடித்த முதல் கம்யூனிஸ்டு மாநிலமான கேரளத்தில் பணம் பாலாறாக ஓடியது. புதிய பணக்காரர்களான கேரளத்து மக்கள், குடிசை வீட்டிலிருந்து மாடிவீட்டுப் பணக்காரர்களானார்கள். மின் தேவை பலமடங்கு அதிகரித்தது.
விவசாயத்திற்கு தண்ணீர் பெற்ற முல்லைப் பெரியாற்றில் தமிழர்கள் மின்சாரம் எடுப்பது அவர்களின் கண்களை உறுத்த ஆரம்பித்தது. தெற்கிலிருந்து வடக்காக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது' என்ற விஷமப் பிரசாரம் கேரளம் டேம் 999' என்ற பெயரில் படமெடுக்கும் அளவுக்கு அவர்களுடைய நெஞ்சம் பொறாமையால் நிறைந்திருந்தது. கருணாநிதியும் தன் பங்குக்கு சுப்ரீம் கோர்ட்டு வழக்கை வாபஸ் பெற்று தமிழன் நலம் காத்தார்.
கேரள அரசு, 152 அடி உயர முல்லை பெரியாறு அணையின் உயரத்தைத் தடாலடியாக 132 அடியாக குறைத்தது. தமிழ்நாடு காய்ந்த பூமியானது. நீண்டதொரு சட்டப் போராட்டத்திற்கு பிறகு பொறியியல் சான்றுகளின் அடிப்படையில் கேரளத்தின் அச்சம் உண்மையல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. அணையின் உயரம் 152 அடியாக இருந்தபோது 142 அடி உயரத்திற்கு தண்ணீர் நிறுத்த வேண்டும் என கேட்டது தவறு. ஆரம்பத்திலேயே நாம் 152 அடிக்கும் வழக்காடியிருக்க வேண்டும். 
மூன்றாண்டுகள் தொடர்ந்து வான் பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டாலும், மூன்றாண்டுகளாக வானம் உள்வாங்கிய நீரெல்லாம் கடவுளின் பூமி'யான கேரளத்தில் 2018 ஆகஸ்ட்டில் தரையிறங்க கேரள பூமி நீரில் மூழ்கிச் சின்னாபின்னமானது. அண்டை வீட்டுக்காரன் துயர் பொறுக்காத தமிழர்கள், தெருத்தெருவாகப் பணம் வசூலித்து பொருளாகவும் பணமாகவும் கேரளாவுக்கு லாரி லாரியாக அனுப்பினார்கள். தமிழக அரசும், அதன் அதிகாரிகளும் தங்கள் பொறுப்புக்கு பணியாற்றி கேரள மக்களின் துயர் துடைக்க நட்புக்கரம் நீட்டினர். ஆனால் கேரளம் செய்தது என்ன?
மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என நினைக்கும் மாமியார்கள் போல் அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மையாக கேரளத்தவர்கள் செய்யும் சேட்டை சொல்லி மாளாது. 
கடவுளின் பூமி கண்ணீர் பூமியானபோது, அதற்குக் காரணம் தமிழ்நாடு முல்லை பெரியாறு அணையின் 13 மதகுகளையும் ஒரே சமயத்தில் திறந்ததுதான் எனக் குற்றம் சாட்டியது கேரளம். வரலாற்றின் அதீத நிகழ்வாக முல்லைப் பெரியாறு அணை அனுமதிக்கப்பட்ட 142 அடியைத் தொட்டவுடன், உடனடியாக கணக்கு போட்டு வரும் தண்ணீரின் அளவை வைத்து அணையின் உயரம் 152 அடியை விரைவில் தொட்டு விடும் என பயந்து அணையின் தண்ணீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என வற்புறுத்தியது யார்? 
ஒரே மாதத்தில் இரண்டு முறை 142 அடியை தொட்ட தண்ணீர் பெருகி வரும் வேகத்தால் 152 அடியை தொட்டால் கேரளாவின்அணை பாதுகாப்பில்லை' என பொய் பிரச்சாரம் செய்தும், சட்ட விரோதமாக கானக கட்டுமான விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கட்டிய ஓட்டல்கள் எல்லாம் நீரில் மூழ்கி விடும் என்ற அச்சத்தாலும் அப்படி மூழ்கினால் தங்களுடைய தவறும் சட்ட அத்துமீறல்களும் உலகுக்குத் தெரிந்துவிடும் என்ற காரணத்தால் ஓடோடிச் சென்று உச்சநீதிமன்றக் கதவைத் தட்டி அணை இடிந்துவிடும் ஆகவே நீர் உயரத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும்' எனச் சொன்னது யார்? 
அணையின் உயரத்தைக் கூட்டினால் ஊருக்குள் பாயும் தண்ணீரின் அளவு குறையும் எனத் தெரிந்தும் கேரளம் வம்பு செய்தது. உச்சநீதிமன்றமும் உடனே அப்படியே ஆகட்டும்' என சொல்லுகிறது.
கேரளத்து சேட்டன்கள் கண்ணீரில் மிதப்பதால் உதவ வேண்டும் என்று தமிழ்க் குரல்கள் எழுந்தன. அபிராமி பட்டர் தனது பதிகத்தில் தடைகள் வாராத கொடையும்' வேண்டுமென யாசித்தாலும், கேரளாவுக்குப் பணம் அனுப்ப என் மனம் ஒப்பவில்லை. குட்டக் குட்ட குனிபவன் தமிழன் அல்லன்.
கேரளத்தின் மின் தேவை அதிகரித்திருக்கிறது. அவர்களுக்குக் கூடுதல் மின்சாரம் வேண்டும். தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களை உருவாக்கி விட்டது. இப்பொழுதுதான் கேரளம் விழித்துக் கொண்டு பிரம்மபுரம், காயங்குளம், கோழிக்கோடு அனல் மின் நிலையங்களை கட்டி முடித்துள்ளது.
கேரளம் 152 அடி தண்ணீர் தேக்க ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டின் உபரி மின்சாரத்தில் பங்கு கேட்டால்கூட பரவாயில்லை. அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்திலிருந்தும், நெய்வேலியில் இருந்தும் கேரளத்திற்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, தான் வலியபோய் தேடிக்கொண்ட அவலத்துக்குத் தமிழகத்தின் மீது பழிபோடுகிறதே கேரளம், இது அவர்கள் வணங்கும் குருவாயூரப்பனுக்கும், சபரிமலை சாஸ்தாவுக்கும், பரமண்டலத்தில் இருக்கும் பரம பிதாவுக்கும் அடுக்காது!
கட்டுரையாளர்:
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com