பிறந்த நாள் பரிசாகக் கண்ணகி கோட்டம்!

அன்பும், பண்பும், பணிவும், பேரறிவும் கொண்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் 24.9.2018 அன்று தனது 91-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார்.

அன்பும், பண்பும், பணிவும், பேரறிவும் கொண்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் 24.9.2018 அன்று தனது 91-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். அவர் நூறு ஆண்டைக் கடந்தும் வாழ்ந்து சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தொண்ணூறு ஆண்டு காலம் நம்முடன் வாழ்ந்து வரும் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள், நம் காலத்து மூத்த தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்க சிறப்பிற்குரியவர்.
 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக வீறு கொள விளங்கிய சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் அன்றொரு நாள் சேலம் மாவட்டத்துச் சிற்றூர் ஒன்றிலே இவரின், அருவித் தமிழில் ஆற்றல் ததும்பப் பொங்கிப் பெருகிய சிலப்பதிகாரப் பேச்சைக் கேட்டு, இதயம் குளிர்ந்து களித்த பேருணர்வில் வழங்கிய பட்டமே "சிலம்பொலி' ஆகும்.
 இவருடைய கபாலக் கணினியில் ஆயிரம் பல்லாயிரம் தமிழ்ப் பாடல்கள் மங்காமல், மறையாமல் பதிவாகித் தேவைக்கு ஏற்ப இவருடைய தேனுதடுகளைத் திறந்து கொண்டு வெளிப்பட்டு நம்மை மகிழ்விக்கும்.
 இவரைப் போன்ற நினைவாற்றல் மிக்கவரைக் காண்பது அரிது.
 எவ்வளவு கடினமான இலக்கியப் பாடலும் இவர் சொல்லும்போது எளிமையாகிவிடும். பிறர் நெஞ்சு கொளப் பேசும் ஆற்றல் மிக்க அறிவாளர்.
 ஒரு கணக்காசிரியராய் வாழ்வைத் தொடங்கி, தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்விச் சிறப்பு அலுவலர், 1968-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு மலர்ப் பொறுப்பாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதற் பதிவாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், என்று பல்வேறு பதவிகளை ஏற்று உயர்ந்தவர்.
 சங்க இலக்கிய மாண்பு விளக்கமாக அண்மையில் இவர் வெளியிட்டிருக்கும் பதினான்கு தொகுதிகளும் இவருடைய வாழ் நாள் அருஞ்செயல் என்று வியவாதவர்கள் இல்லை. சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன், காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும்... என்று எண்ணற்ற ஆய்வு நூல்களைப் படைத்துள்ளார்.
 சீறாப்புராணம், சீவக சிந்தாமணி, இராவண காவியம், தேம்பாவணி, சங்க இலக்கியம் என்று இவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் எண்ணில் அடங்காதவை. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழில் வெளி வந்துள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு இவர் எழுதிய முன்னுரைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
 தமிழ்நாட்டில் சிலப்பதிகாரம் என்றவுடன் எவருக்கும் முதலில் நினைவில் மின்னலடிக்கும் பெயர் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் என்பதுதான். அவருக்கு அடுத்து விதையாகப் பதிவாகும் பெயர் "சிலம்பொலி' செல்லப்பன் என்பது வெள்ளிடைமலை.
 சேலம் மாவட்டத்தில் ஆசிரியப் பணி செய்து வந்த காலத்தில் சங்ககிரியை அடுத்துள்ள திருச்செங்கோட்டில்தான் சிலப்பதிகார விழா தமிழ்நாட்டிலேயே முதன்முதலாகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. சேலம் மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்த ஐயா தி.மு. காளியண்ணன் அவர்கள்தான் சிலப்பதிகார விழாவிற்கு மிகுதியாக அக்கறை காட்டி ஆதரவு தந்தவர். அவ்விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. மூன்று நாள்களும், சிலம்பொலியாருக்கு உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லாமே விழாவுக்குப் பிறகுதான்.
 சிலப்பதிகாரத்தை ஊரெங்கும், நாடெங்கும், உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பது இவருடைய கனவுமாயிற்று, நனவுமாயிற்று!
 தனது பிறந்த நாள் விழாவில் அளிக்கப்பட்ட தொகை, அயல்நாடுகளில் சொற்பொழிவுக்கு என அளிக்கப்பட்ட தொகை, ஆகியன கொண்டு "சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை' என்று ஓர் அறக்கட்டளையை அவர் தொடங்கியுள்ளார். அவ்வறக்கட்டளை வழியாக ஆண்டுதோறும் சிலப்பதிகாரத்தின் சீர் பரப்புவார்க்குப் பரிசு வழங்கப்படுகிறது. முதல் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் விருதும் பரிசும் ஏற்றுப் பெருமை படுத்தினார். சிலப்பதிகார உரையாற்றும் சிறப்பான இளைஞர்கள் இருவருக்கு "இளைய சிலம்பொலி' என்ற விருதும் வழங்கப்படுகிறது.
 இதன் தொடர்ச்சியாகச் "சென்னையில் கண்ணகி கோவில்' எழுப்ப வேண்டும் என்ற சிலம்பொலியாரின் ஆசையை நிறைவேற்றும் செயலில் காஞ்சி அமிழ்தனாரின் மகனாரும் அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் தலைவரும் ஆகிய இளவரச அமிழ்தன் ஈடுபட்டுள்ளார்.
 சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, செயல் திட்டம் கருவாகி, கண்ணகிக்குச் சிலையும் கோட்டமும் உருவாகும் நிலை எட்டியுள்ளது. சென்னை தாம்பரம் அருகில் மணிமங்கலம் சாலையில் கண்ணகி கோவிலுக்கு கால்கோள் விழா நடைபெற்றுள்ளது. அங்கே அமைக்கப்படும் மண்டபத்தில் சிலம்பொலி செல்லப்பனார்க்கு ஒரு சிலை வைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
 வள்ளுவர் கோட்டத்தைத் தொடர்ந்து, கண்ணகி கோட்டம் ஒன்றும் சென்னை மாநகரில் நிலை கொள்ளப் போவது என்பது, சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ் நாள் கனவு, நனவாகப் போகிறது என்று பொருள்!
 இதைவிடச் சிறந்த பிறந்த நாள் பரிசு சிலம்பொலி செல்லப்பனாருக்கு வேறு எதுவாக இருக்க முடியும்?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com