நடுப்பக்கக் கட்டுரைகள்

வரலாறு திரும்புகிறது!

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இன்றைய மனிதன் நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிறான். எல்லாம் கணிணிமயம். மடியில் கணினி. கையில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்), முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), கூகுள், யூட்யூப். டி.வி சீரியல் மவுசு கூடக் குறைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.
இருப்பினும் கூட, இந்த அறிதிறன்பேசி வழியாக கூகுள் உலகத்திற்குள் நுழைந்தால் விஷயம் வேறு மாதிரியும் போகிறது! இயற்கை விவசாயம் என்றால் இயற்கையாக என்ன விளைகிறதோ அதைத்தான் மனிதன் உண்ண வேண்டுமாம். உழவு மாடுகளை மறந்துவிட்டு டிராக்டர்களை ஏன் பயன்படுத்துகிறோம் என்று கேட்பது கூடத் தவறு.
ஏன் உழ வேண்டும்? இரும்பு யுகம், அதாவது, கற்காலத்தில் இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன் இயற்கையாக விளைந்ததை சேகரித்தும் மனிதன் வேட்டையாடிய இறைச்சி, மீன் உண்டும் வளர்ந்த காலத்திற்குப் போக வேண்டுமாம்! அரிசி, கோதுமை கூடாது. புஞ்சை தானியங்களை மட்டுமே உண்ண வேண்டுமாம். இது கொஞ்சம் பரவாயில்லை. மானாவாரி விவசாயம் அனுமதிக்கப்படுகிறது.
விவசாயம் இருக்கட்டும். இப்போது விஷயம் பாத்திரங்கள் பற்றியது. சமையலுக்கு பிரெஷர்குக்கரைப் பயன்படுத்துவது ஆரோக்கியமா? நல்ல கேள்விதான். அந்தக் காலத்தில் செம்பு அல்லது வெண்கலப் பானைகளில் சாதம் சமைத்துக் கஞ்சி வடிப்பார்கள். இதனால் உடம்புக்கு நுண்ணூட்ட சத்து கிடைத்ததாம். அந்தக் கால தாத்தா பாட்டிகள் அதனால்தான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில், பிரெஷர்குக்கர் அறிமுகமாகாத நாள்வரை, வெண்கலப் பானை சமையல்தான். தாமிரத் தட்டில் சாப்பிடுவார்கள். தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பார்கள். தாமிரம் விலையேறிவிட்டது. இப்போது மின்சாரம் கடத்த தாமிரக்கம்பி பயனாகிறது. 
வரலாற்றில் தாமிரம் வந்த கதைக்கும் சண்டைக்கும் நிறையத் தொடர்பு உண்டு. அன்று தாமிரச் சுரங்கம் கைப்பற்ற சண்டை. இன்று தாமிரத்தைத் துரத்த சண்டை. இரும்பு யுகத்தை கவனிக்கும் முன் தாமிர யுகம் நிலவியபோது நிகழ்ந்தவை சுவாரசியமானது.
கற்கால மனிதன் உலோக காலத்திற்கு வந்த காலகட்டத்தில் இரும்புக்கு முன் தாமிர யுகம் நிலவியதாக வரலாறு கூறுகிறது. மண்பாண்டங்களை விட தாமிரமே பெரிய அளவில் புழங்கியதாம். ஏனெனில் தாதுவிலிருந்து தாமிரத்தைப் பிரித்தெடுக்க ஒரு சூளை போதுமானது. மண்பாண்டங்களைச் சுட்டு எடுக்கும் நுட்ப ஆற்றல் தாமிரத்திற்கு தேவையில்லை. தாமிர யுகத்தை ஆங்கிலத்தில் Bronze Age என்பார்கள். வெண்கலம், பித்தளை எல்லாம் இதில் அடங்கும். அடிப்படை தாமிரம். தாமிரத்துடன் துத்தநாகம் சேர்த்தால் பித்தளை. தாமிரத்துடன் வெள்ளீயம் சேர்த்தால் வெண்கலம். ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டு காலத்தில் தாமிரச் சுரங்கங்களைக் கைப்பற்ற உலகெங்கிலும் சூறையாடல்களும், போர்களும் நிகழ்ந்தன. ஏனெனில், பெரும்பாலான பாத்திரங்களும், போர்க்கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டன. காலத்தின் கோலம். இன்று தூத்துக்குடியில் தாமிரத் தொழிற் சாலையை மூடச் சொல்லி விரட்டுகிறார்கள். 
படைக்கருவிகள் செய்யவும் போர்க்கருவிகள் செய்யவும் வெண்கலத்தைவிட உறுதியானது இரும்பு. இரும்பின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு விவசாயம் உயர்ந்தது. சாம்ராஜ்யங்கள் உருவாகின. 
இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் இரும்புக் கருவிகள் அகப்படவில்லை. இரண்டாவது காலகட்டத்தில் கங்கைப் பகுதியில்தான் புதிய நகரங்கள் பாடலிபுத்திரம், காசி, போன்றவை தோன்றின. இந்தியாவில் இரும்பு வரவுக்கும் க்ஷத்திரியருக்கும் உள்ள உறவை வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி துல்லியமாக எடுத்துக்காட்டும்போது, மெசொபொடேமிய நாகரிகத்தைத் தோற்றுவித்த ஹித்தைத்தியர்கள், இரும்பை உருக்கி உறுதியான ஆயுதங்களைத் தயாரித்தவர்கள் என்று கூறியதுடன், கத்ரி, க்ஷத்ரி என்று வழங்கப்படும் க்ஷத்திரியர்கள் ஹித்தைத்தியர்களின் வாரிசுகளாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். ஈரானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு இதை வலுப்படுத்துகிறது என்கிறார். இந்தியாவில் க்ஷத்திரியர்களே இரும்பின் ஆற்றலை உணர்ந்து போர்க்கருவிகளையும் விவசாயக் கருவிகளையும் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார். 
சற்று யோசித்துப் பார்த்தால், உலோக காலம் தொடங்கி, 20-ஆம் நூற்றாண்டு வரை நம் வீட்டு சமையல் பாத்திரங்கள் பித்தளை, வெண்கலம், ஈயம், இரும்பு என்றுதான் புழங்கியது. இன்றைய தருணத்தில் ஒரு சராசரி மத்யமர் வீட்டுச் சமையலறையில் கவனித்தால், பளபளவென்று மின்னும் எவர்சில்வர் குக்கர், பாத்திரங்களுடன், டெப்லான் பூசியுள்ள தோசைக்கல், வாணலி, கரண்டி, டப்பர்வேர் வந்துவிட்டன. சீர் என வந்த பித்தளை வெண்கலம், தாமிரம் எல்லாம் "ஓட்டை உடைசல் பித்தளை பாத்திர சாமான் வாங்கறது' என்று வீதியில் கூவிக் கொண்டு போவோரிடம் வழங்கி பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, இப்போது ஞானோதயம் பிறந்து, பழைய உலோக கால சாமன்களுக்காக அலைய ஆரம்பித்துவிட்டார்கள்.
திண்டுக்கலில் இரும்புக் கடை சந்து என்று ஒன்று திப்புசுல்தான் காலத்திலிருந்து இயங்கி வருகிறது. இப்போது அங்கு கூட்டம் அதிகமாகி, இரும்பு தோசைக்கல், இரும்பு வாணலி, இரும்புக் கரண்டி என்று வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம்?
நமது முன்னோர்களின் பாரம்பரிய அறிவு ஏளனத்திற்குள்ளானது இருக்கட்டும். அதையே அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொன்னால் உலகமே ஒப்புக் கொள்ளும். அப்படித்தான் நிகழ்ந்தது. அமெரிக்க அறிவியல் செய்தியின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதம் இரும்புப் பாத்திரத்தில் சமைத்த உணவை வழங்கியபோது, அக்குழந்தைகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதாவது சிவப்பு அணுக்கள் அளவு 8 சதவீதம் உயர்ந்து காணப்பட்டதாம். 
அமெரிக்க ஊட்ட உணவு நிபுணர்கள் சங்கம் வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை கூறுவது - இரும்புப் பாத்திரத்தில் சமைத்த உணவையும் வேறு பாத்திரத்தில் சமைத்த உணவையும் சோதித்துப் பார்த்ததில் இரும்புப் பாத்திரத்தில் சமைத்த உணவில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளதைக் கண்டுபிடித்தார்களாம். 
பொதுவாக, பாத்திரத்தில் என்ன உள்ளது? அது ஏந்துகிறது. அதனால் ஏனம் என்றும் கூறுகிறோம். அப்படி ஏனத்தில் சமைத்தால் ஏனம் கரையுமா என்ன? புதிராயுள்ளதே! நுண்ணூட்டத்தையும் ஏனம் ஏந்துகிறது. சமைக்கும் பொருளில் உள்ள அமிலம், கொதிநிலை, ஈரப்பதம் ஆகியவற்றைப் பொருத்து இம்மியளவு கரைந்து உணவுடன் நுண்ணூட்டம் சேர்கிறது. நம் முன்னோர்கள் பொது அறிவில் போதித்ததை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து நிரூபிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிரூபணங்கள் வெளிவந்தால் தானே மண்டையில் உரைக்கிறது. 
நுண்ணூட்ட விஞ்ஞானிகள் தாமிரத்தைப் பற்றி இன்னும் நிறைய பேசியுள்ளனர். இதனால் இவர்களை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என்று கருதிவிடக் கூடாது. ஐ.நா. சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நடைமுறை சுற்றுச் சூழல் நுண்ணுயிரியல் ஆய்வறிக்கையின் படி தாமிரம்- பித்தளை-வெண்கல உலோகக் கலவையில் உள்ள நீர் இரண்டு மணி நேர அவகாசத்தில் 100 சதவீத பாக்டீரியா கிருமிகளை நாசம் செய்கிறதாம். நம்மூர் டீக்கடைகளில் தாமிரத்தால் செய்த பாய்லர்களில் உள்ள நீரால் டீ டிகாக்ஷன் இறக்கித் தருவது நல்ல விஞ்ஞானமே. ஆகவேதான் சிலர் செம்பு பாய்லரைப் பயன்படுத்தும் டீக்கடைகளை நாடி ஓடுகிறார்கள்.
ஒருவர் பயன்படுத்திய டீ கோப்பையை இரண்டாம் முறை பாய்லர் வெந்நீரில் கழுவிவிட்டு டீ தருவதையும் கவனிக்கலாம். கும்பகோணம் காபி, பித்தளை டபரா செட்டில் வழங்கப்படுகிறது. அதுவும் நன்றே. அதே சமயம் தாமிரம், பித்தளை, வெண்கலப் பாத்திரத்தில் புளி கரைத்த சாம்பார், ரசம் கூட்டு செய்ய மாட்டார்கள். நுண்ணூட்டம் நச்சாகிவிடும். கலாய் பூசிய பின்னரே பயன்படுத்துவார்கள்.
கலாய் என்பது வெள்ளீயப் பூச்சு. முன்பெல்லாம் வீதிகளில் "கலாய் பூசறது' என்று கூவிக்கொண்டு போவார்கள். இப்போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். எல்லாம் எவர்சில்வர், டெஃப்லான் என்றாகிவிட்டதே! அந்தக் காலத்தில் ரசம் வைக்க வெள்ளீயத்தினாலான சிறு அடுக்கு உண்டு. 
வெண்கலம் சற்று பாதுகாப்பானது. புளியிடாத சமையல் செய்யும் அரிசி வெண்கலப் பானையோடு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டு. உருளியில் பாயசம் செய்வார்களே? இந்தத் தலைமுறைக்குத் தெரியாது.
இன்னமும் கேரளத்தில் சில வீடுகளில் குறிப்பாக கிராமங்களில் அல்லது அக்கிரஹாரங்களில் உருளிப் பாயசம் கிடைக்கிறதாம். 
இவ்வளவு பேசிவிட்டு கச்சட்டியை மறக்கலாமா? கல்சட்டிதான்! பெரிய அளவில் உள்ளதில் பழையது வைப்பார்கள். கூட்டு, வத்தல் குழம்பு செய்ய சின்னக் கச்சட்டி உண்டே!
இப்படிப்பட்ட வழக்கொழிந்த பழைய கற்காலக் கல், உலோகப் பாத்திரங்களுக்கு இப்போது மவுசு கூடுகிறது. அந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு நுண்ணூட்டக் குறைபாட்டுக்கு யார் டானிக் கொடுத்து வளர்த்தார்கள்? நமது பாரம்பரிய அறிவுகளைத் தொலைத்துவிட்டு, இன்று நாம் பழைய கற்கால உலோக யுகத்தை நோக்கிப் பயணிக்கிறோம்.
வரலாறு திரும்புகிறது, வேறென்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT