மதம் மாறலாம்; மரபை மறக்கலாமா?

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தியை நாகாலாந்து மாநிலத்தில் உள்ள புண்ணிய நதியான தோயாங் நதியில் கரைக்க

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தியை நாகாலாந்து மாநிலத்தில் உள்ள புண்ணிய நதியான தோயாங் நதியில் கரைக்க, வோக்கா மாவட்ட கிறிஸ்துவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாகாலாந்து காங்கிரஸ் கட்சியும் வாஜ்பாயின் அஸ்தியை இம்மாநில நதியில் கரைப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி மறுப்பு தெரிவித்தது. இந்த செய்தியைப் படித்த அனைவரும் அதிர்ச்சி மிக்க வருத்தம் அடைந்தார்கள். 
அமெரிக்க நாட்டின் ஹட்சன் நதியிலோ, இங்கிலாந்தின் தேம்ஸ் நதியிலோ, ரஷியாவின் வால்காவிலோ, சீனாவின் மஞ்சள் பேராற்றிலோ கரைக்க எதிர்ப்பு எழுமானால் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், பாரதத் தாய் பெற்றெடுத்த, தன்னலம் கருதாத மகத்தான மனிதரின் அஸ்தியைக் கரைப்பதற்கு தாய் நாட்டில் எதிர்ப்பா? அதிலும், கட்சி பேதமின்றி அனைவராலும் போற்றப்பட்ட ஒருவரின் அஸ்தியைக் கரைப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வாஜ்பாய், பகை நாடு என்று எண்ணிடாது, பாகிஸ்தானுக்குப் பேருந்து சேவையைத் தொடங்கியவர். நாமார்க்கும் குடியல்லோம் என்று எவர்க்கும் அஞ்சிடாது அணுகுண்டு சோதனை செய்து நாட்டின் தன்மான வீரம் உயர்த்தியவர். ஐ.நா. சபையில் உரையாற்றும் போதுகூட தன்னை ஒரு நாட்டின் பிரதமர் என்று கூறாது, எனது நாட்டின் முதல் சேவகன் என்று கூறிப் புகழ் கொண்டவர்.
பண்டித நேருவால் இந்தியாவின் வருங்காலப் பிரதமர் என்று கணிக்கப்பட்டவர். நாட்டுப் பணிக்காக திருமண வாழ்க்கையை ஏற்காதவர். இவரது தொலைநோக்கு திட்டத்தால்தான் இன்று நாம் தங்க நாற்கர சாலையில் வலம் வருகிறோம்.
அவரின் அஸ்தியை நாகாலாந்தில் கரைப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததற்குக் காரணம், அங்குள்ள நாகர்கள் அனைவரும் கிறித்துவ மதம் தழுவியதுதான். நம் நாட்டு அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமையும், சுதந்திரமும் சிறப்பானவை. யார் வேண்டுமானாலும் எம்மதத்தையும் தழுவலாம்; மதச் சடங்குகளைப் பின் பற்றலாம். இந்நாட்டின் தொன்மை மரபுகளில் தோய்ந்து உள்ள பழைய மதப் பிரிவே இந்து சமயம்.
இந்து என்ற சொல்லே மேனாட்டார் வழங்கியதுதான். இதனை பெற்றவர் எவருமில்லை. வளர்த்தவர் ஒருவரிமில்லை. மனிதன் பயணித்த வழியில் கண்டெடுக்கப்பட்ட நற்பண்புகளே, அறம் சார் நெறிகளே, உலகப் பார்வையில் ஒரு மதம் என்றாகி விட்டது.
இதனை இந்நாட்டின் தேசிய இனம் சார்ந்த மதம் என்றாலும் தவறில்லை. ஒருமுறை பிரபல சட்ட அறிஞரும், சிறந்த தேசியவாதியுமான எம்.சி. சாக்ளா இந்தியாவின் பண்டைக் கலாசாரங்களுக்கு நாம் அனைவரும் உரிமையுடையவர்கள். எந்தக் காரணம் கொண்டும் அதனை இழக்கலாகாது என்று கூறினார்.
இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகள் ஒரு காலகட்டம் வரை இந்து நாடுகளாகவே இருந்தன. காலப்போக்கில் இஸ்லாம் பரவியது. ஆனாலும் இந்தோனேஷியாவில் இன்றும் முன்னோர்களின் மரபைப் போற்றும் வகையில் வங்கிகளுக்கு குபேரா என்றும், வான்வூர்தித் துறைக்கு கருடா ஏர்லைன்ஸ் என்றும் பெயரிடுகிறார்கள். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் உருவத்தை அச்சிடுகிறார்கள்.
நேருவின் பெருமுயற்சி காரணமாக, இந்தியாவின் 16-ஆவது மாநிலமாக 1.12.1963-இல் அறிவிக்கப்பட்டது நாகாலாந்து. நாகர்களின் பண்டைய சமயப் பிரிவுக்கு ஹெரகா (HERAKA) என்ற பெயர் உண்டு; பேச்சு மொழியும் உண்டு. 
நாகர்கள் எளிமை, நேர்மை, கடின உழைப்பு போன்ற குணநலன்கள் கொண்டவர்கள். வலிமையான உடற்கட்டு வாய்க்கப் பெற்றவர்கள். புராணக் கதைகளில் நாகலோகம், நாக கன்னியர், நாக ராஜகுமாரன் என்றெல்லாம் வருவதுண்டு. பல்லவ வம்சத்தின் முதல் வழித்தோன்றல் நாகா இனத்தில் வந்தவர் என்ற வரலாற்றுப் புனைவும் உண்டு. 
இவர்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை அசல் நாகர்களாகவே தங்களது பண்பாட்டில் நிலைத்திருந்தனர். சங்க காலத்தில் புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வரும் ஆடவரையே தமிழ் மகளிர் விரும்பி மணம் புரிவர் என்பது போல, நாகா மகளிர் பிற நாட்டு மனிதர்களைக் கொன்று அதிக மனிதத் தலைகளை கொண்டுவரும் ஆடவரையே மணம் புரிவர். இதனால் நாகர்கட்கு தலை கொய்பவர்கள்(Head Hunters) என்ற பெயரும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை இப்பழக்கம் இருந்தது.
அமெரிக்காவின் பாப்திஸ்து மிஷனரி யூனியன் (Baptist Missioary UNION)  பிரிவைச் சார்ந்த பாதிரியார் எட்வர்ட் வின்டர் கிளார்க் (Edward Winter Clark)  1868 அக்டோபர் மாதம் பாஸ்டன் நகரில் இருந்து புறப்பட்டு 1869 மார்ச் மாதம் நாகாலாந்து -சிப்சாகர் பகுதிக்குத் தன் மனைவியோடு வந்தார். இவரது நோக்கம் உலகில் கிறித்துவம் பரவாத இடங்களில் கிறித்துவ மதத்தை பரப்புவதே! 
இவர் வந்தபோது நாகர்களில் சிலர் உணவிற்காக அலைவதைக் கண்டு, அவர்களுக்கு தன்னிடம் இருந்த உணவினைத் தந்து அவர்களது அன்பைப் பெற்றார். 1871-இல் தனது தாய் நிறுவனத்திற்கு, இங்கே இருக்கிற மக்கட்கு ஏசு கிறிஸ்து பற்றி தெரியவில்லை. இவர்கட்கு கிறித்துவ போதனைகளைச் சொல்லி எளிதாக மதம் மாற்றலாம். எனினும் இப்பணி மிகக் கடினமானது. இவர்கள் நம்மை ஏற்க சில காலம் ஆகலாம் என்று கடிதம் எழுதினார். 
முதன் முதலாக, 11.11.1872-இல் ஒன்பது நாகர்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றினார். இதற்குள் கிளார்க் நாகா மொழியில் பேசவும் பழகிக் கொண்டார். உள்ளூர் மருத்துவ முறையை நன்கு கற்றுத் தேர்ந்தார். அப்போது சில நாகர்களுக்கு நச்சுக் காய்ச்சல் உண்டாயிற்று. கிளார்க் நாகா வைத்திய முறையிலே அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்; நோயாளிகளின் அருகில் மண்டியிட்டு சிலுவையோடு பிரார்த்தித்தார். நோயாளி உடலில் கெட்ட ஆவியும், சாத்தானும் புகுந்து இருக்கிறன. அவற்றை விரட்டி விட்டு பரிசுத்த ஆவியை வர வரழைக்கிறேன். சில தினங்களில் குணமாகி விடுவார் என்றார்.
நாகர்கள் நம்பினார்கள். நோயும் குறைந்தது. இவரது பெயர் எங்கும் பரவியது. பிறகு யாருக்கு நோய் வந்தாலும் இவருக்கு அழைப்பு வரும். இவரும் சாமர்த்தியமாக மருந்தோடு ஏசுவின் மகிமையை விரித்துரைத்து நாகர்களையும் ஜெபம் செய்யப் பழக்கினார். 22.12.1872-இல் நாகாலாந்தில் முதல் பாப்திஸ்து சர்ச்சை மோனுங்கி மாங்(Malungki Mans)  என்னுமிடத்தில் கட்டினார். அப்போது அவர் என்னுடைய வாழ்நாள் பணியை நான் கண்டு கொண்டதாக நம்புகிறேன் என்றார்.
இவரது மத மாற்றப் பணியாலும், மாதா கோயில் கட்டியதாலும் நாகர்களிடைய பிளவு உண்டாயிற்று. காலப்போக்கில் கிளார்க் சமாளித்து நின்றார். 1894-இல் அந்தப் பகுதி மிஷனரிகளின் கேந்திரமானது. நாகர்களில், பலரை அவர் மத போதகர்களாக்கினார். அவ்வூர் முழுமையான கிறித்துவ கிராமம் என்ற அங்கீகாரம் பெற்றது. பிறகு, தனது பணியிடத்தை இம்பூர் என்ற இடத்திற்கு மாற்றினார். மத மாற்றம் காட்டுத் தீயாக பரவியது. 1905-இல் வரலாற்றுச் சாதனையாக ஒரே நேரத்தில் 190 நாகர்களை மதம் மாற்றினார். 
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாகாலாந்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அமெரிக்கா, பி.எல்.480 திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு கோதுமை மாவு, பால் பவுடர் போன்ற உணவுப் பொருள்களை நாகாலாந்து மிஷனரிகளுக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது. பசியைப் போக்கிய மிஷனரிகள் கிறித்துவ விதைகளை ஊன்றின. நாகாலாந்தின் மூலை முடுக்களில் எல்லாம் கிறித்துவ மதம் வேகமாக பரவியது. 
1980-இல் நாகாலாந்தின் மொத்த மக்கள் தொகை 5,72,742 பேர். இதில் 1,85,987 நாகர்கள் மதம் மாறியிருந்தனர். 2016-இல் 99 சதவிகிதமாக கிறித்துவர்களின் மக்கள்தொகை அதிகரித்தது என்கிறது மத்திய அரசு. ஏனைய ஒரு சதவிகிதம் நாகா இனத்தைச் சாராத இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.
உலகிலேயே 99 சதவிகிதத்தினர் கிறித்துவர்களாக இருக்கும் மாநிலம் நாகாலாந்து மட்டுமே. தங்களது தாய்மொழியை விலக்கி ஆங்கிலத்தை தாய்மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் ஏற்றார்கள். தொல் மரபுகளை துறந்து, மேற்கத்திய வண்ணத்தைப் பூசிக்கொண்டார்கள். அதன் விளைவுதான், இப்போது மண்ணின் மைந்தரின் அஸ்தியை கரைக்க ஏற்பட்ட எதிர்ப்பு.
மதம் மாறலாம், தவறில்லை; வழிபடும் கடவுள் மாறலாம், குற்றம் இல்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தம் முன்னோர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த தொல் மரபுகளை மறப்பதும் மறுப்பதும் பண்பாட்டுச் சிதைவாகும். ஒரு நாட்டின் தொன்மையான விழுமியங்களைத்தான் அடையாளங்களாக உலகம் போற்றும். நாகாலாந்து தனது பண்டைய பண்பாட்டினை இழந்து நிற்கிறது. 
பல நூறு ஆண்டுகள் ரோமானியப் பேரரசுடன் போராடி கிறித்துவத்தைப் பரப்பினார்கள் மத போதகர்கள். ஆசிய கண்டத்தில் தோன்றிய கிறித்துவம் ஐரோப்பாவையை ஆட்கொண்டது. உலகின் மூத்த நாகரிகத் தொட்டில்களாகத் திகழ்ந்த கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய, எகிப்திய நாகரிகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு, புதிய மதங்களின் வழக்கங்கள் குடியேறின. பாரதத்தில் மட்டும்தான் பல்லாயிர ஆண்டுகளின் எச்சங்கள் நிலைத்து நிற்கின்றன. இதற்கு இந்நாட்டின் தொன்மையான சமய நெறிகள் படர்ந்து இருந்ததுதான் முக்கிய காரணம். 
இப்போது தொல்சமய எல்லை குறைந்து வருகிறது. ஒரு மதம் வளர்வது, குறைவது என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை சார்ந்தது. மக்களின் நம்பிக்கையைப் பெற, பல வழிமுறைகளை மதம் பரப்புவோர் மேற்கொள்கிறார்கள். கத்தோலிக்கர்களின் உலகத் தலைவர் போப் பல ஆண்டுகட்டு முன்னர் மும்பையில், சமய நிகழ்ச்சிகளில் இந்திய பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றலாம் என்றார். இப்போதெல்லாம் சர்ச்சுகளில் கொடிமரம், தேர் பவனி, பாத யாத்திரை, துவராடை, நெற்றியில் குங்குமம் என்று இந்தியமயப்படுத்தி வருகின்றனர்.
தீட்சிதர், தியாகய்யர் கீர்த்தனை ராக மெட்டில் கர்நாடக இசைக் கலைஞர்களைக் கொண்டு கிறித்துவ துதிப்பாடல்களை பாடச் செய்கின்றனர். 
இந்து என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்வியல் நெறி. கத்தோலிக்க மதம் இந்தியமயப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மண்ணில் பாரம்பரியச் சடங்கான அஸ்தியை நதியில் கரைப்பதற்கும், பாரதத்தின் தவப்புதல்வரான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்கும் நாகாலாந்தில் எதிர்ப்பு எழுந்திருப்பது வேதனையளிக்கிறது. 
பாரத நாடு பழம்பெரும் நாடு; 
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!

கட்டுரையாளர்:
தலைவர், 
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com