முலாயம் சிங் தந்த அதிர்ச்சி!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக எனது வாழ்த்துகள் என்று கூறி அரசியல் அரங்கில் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறார் முலாயம் சிங் யாதவ்.

  
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக எனது வாழ்த்துகள் என்று கூறி அரசியல் அரங்கில் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறார் முலாயம் சிங் யாதவ்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் அமர்வு  அண்மையில் நடைபெற்றது. மக்களவையில் பேசிய முலாயம் சிங், பிரதமர் மோடி நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகிறார்; திட்டங்களை விரைவாக நிறைவேற்றி வருகிறார். அவர் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவரது கூற்றை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட மக்களவையில் இருந்த அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிர்ச்சியடைந்தனர். 
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் ஒரு கணம் வியப்படைந்து, பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரிடமிருந்து பிரதமர் பாராட்டு பெற்றதுதான் அதற்குக் காரணம். 
அதற்கு முந்தைய தினம்தான், சமாஜவாதி கட்சியின் தலைவரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், அலாகாபாத் நகருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, லக்னெள விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை முலாயம் சிங் பாராட்டியிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
அவர் பாராட்டிய மறுநாளே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள், முக்கிய வீதிகளில் முலாயம் சிங்கை பாராட்டியும், வாழ்த்தியும் விளம்பரப் பதாகைகளை நிரப்பியிருந்தனர். ஆனால், அவரது பேச்சு, சமாஜவாதி கட்சியின் தொண்டர்களை கலக்கமுறச் செய்துள்ளது.
நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம்,  மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. 
உத்தரப் பிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து, காங்கிரஸ் கட்சிக்கு கதவடைத்து விட்டன. எனினும், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்ற ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டன. 
பகுஜன் சமாஜ்-சமாஜவாதி கூட்டணியில் இடம்பெற முடியாததால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மேலிடம், அடுத்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தது. அடுத்த சில தினங்களில், காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவை மேலிடம் நியமித்தது. இவர், ஏற்கெனவே தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டிருந்தாலும், கட்சியின் அதிகாரப்பூர்வ பொறுப்பு  எதையும் வகிக்கவில்லை. அது மட்டுமன்றி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, சமாஜவாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. அங்கு பிரியங்கா களமிறக்கப்பட்டிருப்பது, முலாயம் சிங்குக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தன்னிடம் இருந்த சமாஜவாதி கட்சியின் அதிகாரத்தை அகிலேஷ் யாதவ் பறித்து விட்டதால், அவர் மீது முலாயம் சிங் கோபத்தில் உள்ளார். தனது சகோதரரும், கட்சியின் மூத்த தலைவருமான சிவபால் சிங் யாதவுக்கும், அகிலேஷுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு கட்டத்தில் தனியாகப் பிரிந்த சிவபால் சிங் யாதவ் தனிக் கட்சி தொடங்கி விட்டார்.
இந்நிலையில், தனது அரசியல் எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கை கோத்ததை முலாயம் சிங் விரும்பவில்லை. இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பியிருக்கிறார். 
இந்த நிலையில்தான், தன் மகன் மீது கொண்டிருக்கும் கோபத்தை நாடாளுமன்றத்தில் வேறு விதமாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், முலாயம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ கிடப்பில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த வழக்குகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக மறைமுமாக உணர்த்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக, அந்த வழக்கை தூசி தட்டாமல் இருந்ததற்காக, மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மோடியை முலாயம் சிங் பாராட்டியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, முலாயம் சிங்குக்கு வயதாகி விட்டதால் ஞாபக மறதி நோய் வந்து விட்டது. இதனால், மோடியை தவறுதலாக அவர் பாராட்டி விட்டார் என்று சிலர் காரணம் கூறுகிறார்கள். இன்னும் சிலர், மோடி பரிகசித்து முலாயம் பாராட்டினார் என்று கூறுகிறார்கள். பேசி முடித்த பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்த முலாயம், நான் தவறுதலாக எதையும் கூறவில்லை என்றார்.
தன் மகன் மீதான கோபத்தால், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி ஆகிய இரு கட்சிகளையும் குறிவைத்தே முலாயம் சிங், பிரதமரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார் என்று ஆழமாக நம்பப்படுகிறது. இவரது கருத்து, சமாஜவாதி கட்சிக்கோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சிக்கோ பலவீனத்தை ஏற்படுத்தினாலும், இல்லாவிட்டாலும், பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக வலு சேர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்பதுதான் உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com