தேவை கட்டாய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்!

இந்திய வேளாண்மை இன்றும் 53 சதவீதம் மழையைச் சார்ந்தே உள்ளது. வறட்சியினாலும், வெள்ளத்தினாலும், புயல்-சூறாவளியினாலும், ஆலங்கட்டி மழையினாலும்

இந்திய வேளாண்மை இன்றும் 53 சதவீதம் மழையைச் சார்ந்தே உள்ளது. வறட்சியினாலும், வெள்ளத்தினாலும், புயல்-சூறாவளியினாலும், ஆலங்கட்டி மழையினாலும் விதைப்பதிலிருந்து விற்பனை வரை இந்திய வேளாண்மை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறது.
மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் விளைச்சலைப் பாதிப்பதுடன், பயிர்களுக்கு பூச்சி நோய் தாக்குதல்களையும் அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி ஹெக்டேர் பயிர் நிலப்பரப்பு இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிக்கப்படுகிறது. இது நமது உணவு உற்பத்தியைப் பெரிய அளவில் பாதிக்கிறது.
உலகமயமாக்கலுக்குப் பிறகு, அதிக/குறைந்த உற்பத்தியினால் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தைப் பாதிக்கின்றன. அதனால், இன்றைய வேளாண்மையில், விளைச்சலும்-விலையும் விவசாயிகளின் கையில் இல்லை. 
இந்திய வேளாண்மையும், இயற்கை இடர்ப்பாடுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இந்த இயற்கைப் பேரிடர்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
இந்தியாவில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1972-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஆனால், அனைத்துப் பயிர்களுக்குமான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இல்லை. மேலும், பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதிலும், அதனைப் பயிர்களுக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்வதிலும், இழப்பீட்டுத் தொகை வழங்குவதிலும் சரியான ஒளிவுமறைவற்ற நிலைமை இல்லை. இதில் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைச் சரியான நேரத்தில், துல்லியமாக மதிப்பீடு செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன.
2016-ஆம் ஆண்டு வரை தேசிய வேளாண்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண்மை பயிர்க் காப்பீட்டுத் திட்டம், தட்பவெப்ப நிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இந்தத் திட்டங்களில் பயிர் காப்பீட்டுத் தொகை அதிகமாக இருந்ததுடன், இழப்பீட்டுத் தொகை வழங்குவதிலும் சுமார் ஆறிலிருந்து பன்னிரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 
மேலும் இந்தத் திட்டங்களில் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதில் அரசு அதிக உதவியையோ/ மானியமோ அளிக்கவில்லை. இதனால், இந்தத் திட்டங்களில் அதிக பயிர்களும், நிலப்பரப்பும் மற்றும் விவசாயிகளும் பயனடையவில்லை.
எனவே, 2016-ஆம் ஆண்டு பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, பயிர் உற்பத்திக்கான அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இதன் மூலம் இழப்பீட்டுத் தொகை அதிகம் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், பயிர் விளைச்சலை நிர்ணயிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் 4 முதல் 8 வரை பயிர் வெட்டு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அவர்களுக்கு நேரடியாக இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கும், மேலும் அவற்றை செல்லிடப்பேசி மூலம் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. 
இதில் தனியார் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் 1.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கினால் மட்டுமே போதுமானது. மீதி காப்பீட்டுத் தொகையை (95 -98 .5 சதவீதம்) மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு பருவத்துக்கு முன்பும், இந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. 
இந்தத் திட்டத்தின் கீழ் 2016 -17-ஆம் ஆண்டு 5.72 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு பயிர் காப்பீடு செய்யப்பட்டது. சுமார் 8.7 கோடி விவசாயிகள் இதில் பயனடைந்தார்கள். இதன் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட காப்பீட்டுத் தொகை ரூ.1,15,432.4 கோடியிலிருந்து 74 சதவீதம் அதிகரித்து, ரூ.2,00,618.9 கோடியை எட்டியது. மேலும், பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதும் ரூ.5491.3 கோடியிலிருந்து, ரூ.21,882 கோடியாக, அதாவது 298 சதவீதம் அதிகரித்தது.
ஆனால், இந்தத் திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக காப்பீட்டுத் தொகையை வசூலித்து, குறைந்த இழப்பீட்டுத் தொகையையே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் 2016 -17-இல் மட்டும், சுமார் ரூ.9,335 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுவதாகத் தெரிகிறது. அரசின் காப்பீட்டுத் தொகை குறிப்பிட்ட நேரத்தில் இந்த நிறுவனங்களைச் சென்றடையவில்லை என்ற புகார்களும் எழுகின்றன. இதனால், பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்குவதிலும் தாமதம் காணப்படுகிறது. 
இந்தத் திட்டத்தில் பயிர் வெட்டு சோதனையின் பின் விளைச்சலுக்கான தகவல்கள் தவறாகவும், தாமதமாகவும் தரப்பட்டதாகவும், மேலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போதிய அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அறிக்கைகள் கூறுகின்றன. 
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அமெரிக்கா, சீனா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன. பயிர்களைக் காப்பீடு செய்வதற்கு அதிக மானியத்தை அரசுகள் வழங்குகின்றன. 
2007-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சீனாவானது, 1.5 கோடியிலிருந்து 11.5 கோடி ஹெக்டேர் பரப்பளவை (69 சதவீதம்) பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவில் 89 சதவீத விளைநிலங்கள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 2016 -17-ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் மொத்த பயிரிடும் பரப்பில் 30 சதவீதம் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 
இந்த நாடுகளில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் மூலம் பயிர் பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. பயிர் பாதிப்பு பகுதிகள் ட்ரோன்கள், பூமி சுற்று கருவிகள், தொலைத்தொடர்பு துணைக்கோள்கள் மூலம் உடனடியாகவும் துல்லியமாகவும் கணக்கீடு செய்யப்படுகிறது. ட்ரோன்கள் குறைந்த உயரத்தில் பறப்பதால், இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் இழப்புகள் துல்லியமாகக் கண்டறியப்படுகின்றன. 
எனவே, இயற்கைப் பேரிடர்களிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்கு அதிக தானியங்கி வானிலை ஆய்வு மையங்களும், மழையின் அளவீடுகளைக் கணக்கிடும் நிலையங்களும் அமைக்கப்பட வேண்டும்.மேலும் செல்லிடப்பேசி சார்ந்த தொழில்நுட்பங்களின் மூலம், பயிர் வெட்டு சோதனைகளை நடத்தி உடனடியாக முடிவுகளைத் தெரிவிக்கலாம். இதன் மூலம் பயிர் காப்பீடு நிறுவனங்களும் துரிதமாகச் செயல்படும். மேலும், நிலப் பதிவேடுகளுடன், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கை இணைத்து நேரடியாக விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடுகள் வழங்கலாம். 
பருவநிலை மாற்றங்களினால் கடலோரப் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகின்றன. தமிழகத்தில் சுனாமிக்குப் பிறகு வார்தா, ஒக்கி, தற்போது கஜா புயல் எனப் பல இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து விவசாயத்தையும், மீனவர்களையும் பேரழிவுக்கு உள்ளாக்கி வருகிறது.
இதுவரை உணவு, பயறு வகை மற்றும் எண்ணெய் பயிர்கள், கரும்பு, பருத்தி, வாழை போன்ற ஒருசில பயிர்கள் மட்டுமே, சில விவசாயிகளினால் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
எனவே, மாறிவரும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பயிர்களையும் காப்பீடு செய்வதற்கு அரசு ஆவன செய்யவேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கஜா புயல் சில மாவட்டங்களில் முற்றிலுமாக அழித்துவிட்டது. இந்தப் பகுதிகளில் தென்னையை காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யவேண்டும். மேலும், இதற்கு அரசும், காப்பீட்டு நிறுவனங்களும் ஒன்றுகூடி விவசாயிகளுக்கு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த பயிரிடப்படும் பரப்பளவும் (200 .9 மில்லியன் ஹெக்டேர்) கட்டாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டும். 
இந்தியாவில் மொத்தம் 12 கோடி விவசாயிகள் உள்ளனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு கோடி விவசாயிகள், பத்து ஆண்டுகளில் வேளாண் இடர்ப்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் விவசாயம் செய்வதிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.
நமது நாட்டில் விவசாயிகளின் போராட்டம் சற்றே வித்தியாசமானது. அரசு ஊழியனின் போராட்டம் அரசுக்கு எதிரானது; தொழிலாளியின் போராட்டம் முதலாளிக்கு எதிரானது; ஆனால், விவசாயிகளின் போராட்டம் இயற்கையுடனானது. எனவே, விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற அரசும், சமூகமும் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். 

கட்டுரையாளர்: 
ஐ.ஏ.எஸ். அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com