நடுப்பக்கக் கட்டுரைகள்

புத்தக உலகம் புத்துயிர் பெறுமா?

உதயை மு. வீரையன்

படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாக ஆக்குகிறது. உரையாடல் ஒருவனைத் தயாரான மனிதனாக மாற்றுகிறது. எழுதுதல் ஒருவனைச் சரியான மனிதனாகச் செய்கிறது. வரலாறுகள் ஒருவனை அறிவாளியாக்குகின்றன. காவியங்கள் ஒருவனை உற்சாகமுள்ளவனாக ஆக்குகின்றன.

அன்பே மனிதநேயத்தின் அடித்தளமாகிறது. அறிவும், பண்பாடும் ஒரு நாகரிகத்தின் அடையாளமாகின்றன. இதில் அறிவுடைமையே மனித முன்னேற்றத்தை அளவிடுகிறது. நாடும், சமுதாயமும் வளர்ச்சியடைய அறிவே அடிக்கல் நாட்டுகிறது. அதனால்தான்,
"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
என்று வள்ளுவம் கூறுகிறது.
ஒரு நாடு சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திட இயலாது என்று வால்டேர் கூறினார். இந்த அறிவை வளர்ப்பதும், வளப்படுத்துவதும் நல்ல நூல்கள். இந்த நூல்களின் தாயகமே நூலகம். இந்த நூலகம் திறக்கிறபோது அறிவுலகம் திறக்கப்படுகிறது. நூலகம் மூடப்படுகிறபோது அறிவின் வாசல் மூடப்படுகிறது.
நூலகம் இல்லாத ஊரும் ஒரு ஊரா என்று கேட்டார் லெனின். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல நூலகம் இல்லாத ஊரும் மக்கள் வாழத் தகுதியற்றதே! அறிவு விழித்துக் கொள்கிறபோது, அறியாமை மட்டுமா அகலுகிறது? ஆதிக்கம் அகலுகிறது; அடிமைத்தனம் அகலுகிறது; ஆடம்பரமும், அநாகரிகமும் அகலுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் மூடத்தனம் அகலுகிறது; தன்னம்பிக்கை வளர்கிறது; மனிதநேயம் மலர்கிறது.
உலகில் புரட்சியும், புதுவாழ்வும் உருவாக்கும் கருவிகளாக நூல்கள் விளங்குகின்றன. மனிதகுல வரலாற்றில் மாபெரும் புரட்சியாகக் கருதப்படும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வால்டேரும், ரூசோவும் காரணமாக இருந்தார்கள். ரூசோவின் மன அரங்கில் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருந்தவை: சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! இந்த இலட்சியத் தீபங்கள் எல்லோருடைய இதயங்களிலும் ஒளி வீச வேண்டும் என்று விரும்பினான். அதன் எழுத்து வடிவம்தான் சமுதாய ஒப்பந்தம் என்னும் புரட்சி நூல்.
இந்த நூல் இரண்டு புரட்சிகளுக்கு வித்திட்டன: 1) பிரெஞ்சுப் புரட்சி 2) அமெரிக்கப் புரட்சி. உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சி ரூசோ இறந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகே உருவானது. ஆனால், அந்தப் புரட்சிக்குக் காரணமான மக்கள் சக்தியைத் திரட்டிய பெருமை இவரது நூல்களையே சேரும். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்திலும், அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திலும் ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலிலுள்ள வாசகங்களே இடம்பெற்றன.
நாடும், நாமும் முன்னேற வேண்டுமானால் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீட்டிலும் நூல் நிலையம் இருக்க வேண்டும். வீடு கட்டும்போதே திட்டமிட்டு சமையல் அறை, படுக்கை அறை, பூஜை அறை அமைக்கப்படுவதைப் போன்று, நூலகத்துக்கென ஓர் அறை அமைக்கப்பட வேண்டும். உண்ணுவதும், உறங்குவதும் இன்றியமையாதது போல படிப்பதும், அறிவை வளர்த்துக் கொள்வதும் அவசியம் என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?
நல்ல நண்பர்களுக்கு அடுத்த இடத்தை வகிப்பவை நல்ல நூல்களே என்றார் அறிஞர் கோல்டன். நல்ல நண்பர்கள் நல்லதைச் செய்வது போன்று பொல்லாத நண்பர்கள் பொல்லாங்குதானே செய்வர்! அதுபோல நல்ல நூல்களும் நன்மை செய்து நாட்டை உயர்த்தும்; தீய நூல்கள் மக்களின் சிந்தையையும், செயல்பாட்டையும் கெடுக்கும்.
நமக்குப் பிடித்த நூல்களே நம்மை உருவாக்குகின்றன. அதன் ஆசிரியர்களே நமக்கும் ஆசிரியர்களாகி விடுகின்றனர். அவர்கள் மூலமே நாமும் உலகத்தைப் பார்க்கிறோம். இந்த நூல்கள் சோர்வு ஏற்படும்போது தூண்டி விடுகின்றன; உறக்கம் வருகிறபோது எழுப்பி விடுகின்றன; எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன; சுயநலத்தைச் சுட்டெரித்து மனித குலத்துக்காகவே வாழும்படி வற்புறுத்துகின்றன.
கத்தியின் துணையாலும், ஹோமர் காவியத்தின் தெளிவாலும் நான் இந்த உலகத்தையே வெற்றி கொள்வேன்...என்று மாவீரன் நெப்போலியன் தன் தாய்க்கு எழுதினான். ஹோமரின் காவியங்களும், ஆஸ்ஸியனுடைய கவிதைகளும், புளூடார்க் எழுதிய வரலாறுகளும் நெப்போலியனது வாழ்க்கையை உருவாக்கின.
பைபிளுக்கு அடுத்தபடியாக மனித உள்ளங்களுக்கு நன்மை பயக்கும் நூலாக புளூடார்க் எழுதிய வரலாறுகளையே கூறுவேன் என்று எமர்சன் பாராட்டினார். ஷேக்ஸ்பியரும் புளூடார்க்கைப் பின்பற்றினார். அவரது பல தொடர்களை அப்படியே தம் காவியங்களில் எடுத்தாண்டார். அவரது வரலாற்று நூல்களே நெப்போலியனை மாவீரனாக மாற்றியது.
இதற்கு எதிர்மாறாக, ஹிட்லரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது மாக்கியவல்லி எழுதிய இளவரசன் என்னும் ஒரு சின்னஞ்சிறு நூல். அது எப்போதும் ஹிட்லருடைய கையில் நீங்காமல் நிலைபெற்றிருந்தது. அதுவே அவனை உலகை அச்சுறுத்தும் பாசிச சக்தியாக வளர்த்தெடுத்தது.
ஒழுங்கான வழியில் சென்று பெற்ற வெற்றியே உண்மையான வெற்றியாகும் என்பது அறநெறி. ஆனால் மாக்கியவல்லி இதனை எதிர்மறையாகக் கூறுகிறார்: எந்த ஒழுங்கற்ற வழியைப் பின்பற்றினாலும் தவறில்லை; செயலில் மட்டும் வெற்றி பெற்று விடு; ஒழுங்கற்ற வழிகளும் ஒழுங்கான வழிகளாக மாறிவிடும்...
இதையே ஹிட்லர் பின்பற்றினான். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்யாகி விடும் என்று எடுத்துரைத்தான். உலகப் போருக்கு வழிவகுத்தான். வரலாற்றில் மாறாத பழியைச் சுமந்து கொண்டான். அதனால்தான் பேரறிஞர் பேக்கன் கூறினான்: சில நூல்களை ருசி பார்க்க வேண்டும்; சில நூல்களை மெல்லாது விழுங்கிவிட வேண்டும். சில நூல்களை நன்கு சுவைத்து மென்று விழுங்கிச் செரிக்கச் செய்ய வேண்டும்.
படித்தல் ஒரு மனிதனை முழுமனிதனாக ஆக்குகிறது. உரையாடல் ஒருவனைத் தயாரான மனிதனாக மாற்றுகிறது. எழுதுதல் ஒருவனைச் சரியான மனிதனாகச் செய்கிறது. வரலாறுகள் ஒருவனை அறிவாளியாக்குகின்றன. காவியங்கள் ஒருவனை உற்சாகமுள்ளவனாக ஆக்குகின்றன. கணக்குகள் ஒருவனை நுட்பமானவனாகச் செய்கின்றன. தத்துவ ஞானங்கள் ஒருவனை ஆழ்ந்தவனாக ஆக்குகின்றன. நீதிநூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக மாற்றுகின்றன. தருக்க சாத்திரங்கள் ஒருவனுக்கு வாதாடும் வல்லமையை வழங்குகின்றன.
யுவான் சுவாங் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார். தேசத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவருக்கு புத்த மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அந்த மதத்தைப் பற்றி அறிந்து, அதன் கொள்கைகளையும், வழிமுறைகளையும் பரப்ப விருப்பம் கொண்டார். அது தொடர்பான ஏராளமான நூல்களைச் சேகரித்துக் கொண்டு சீனாவுக்குப் புறப்பட்டார். அவரை வழியனுப்ப நாளந்தா பல்கலைக்கழக மாணவர்கள் உடன் வந்தனர். வழியில் சிந்து நதியைக் கடக்க வேண்டும். எடுத்து வந்த ஏராளமான நூல்களோடு அவர்கள் படகில் ஏறிப் புறப்பட்டனர்.
ஆற்றின் நடுவே போய்க் கொண்டிருந்தபோது புயல் அடிக்க ஆரம்பித்தது. பாரம் தாங்காமல் படகு ஆடியது. படகின் பாரம் குறைந்தால்தான் அறநூல்களும், யுவான் சுவாங்கும் சீனா போய்ச் சேர முடியும். மாணவர்கள் யோசித்தார்கள். அடுத்த நொடியே ஆற்றில் குதித்தார்கள். நூல்களுக்காகத் தங்களையே தியாகம் செய்து கொண்ட அவர்களை வரலாறு மறக்கவில்லை.
எப்போதும் பழி கூட்டும் நூல்களை விட்டுவிட்டு, வழி காட்டும் நூல்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் சங்க இலக்கியங்கள் போரில்லாத உலகத்துக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகள்! வள்ளுவனும், கம்பனும், இளங்கோவடிகளும், பாரதியும், பாரதிதாசனும் காலம் கடந்தும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கங்கள்!
"எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்' என்று பாரதியார் காட்டிய வழியை எழுத்துலகம் எப்போதும் கட்டிக் காத்து வருகிறது. எழுதுகோலும், எழுத்தும் தெய்வமானால் நூல் நிலையம் கோயிலாகிறது. ஆன்றோர்களின் இலக்கியங்கள் அர்ச்சனைப் பூக்களாகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது.
அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம் என்றார் டாக்டர் மு.வரதராசனார். அத்தகைய நூல் நிலையங்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, அனைவருக்கும்.
தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண்டுகளாக நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் காலம் கடத்தி வருகிறது. இதனால் அறிவு வளர்ச்சி தடைபட்டுள்ளது. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். புதிய புத்தகங்கள் வெளிவருவது குறைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டாமா?
அந்தக் காலத்தில் மக்கள் கல்வியறிவு பெறுவதை அரசர்களும், அரசுகளும் விரும்புவதில்லை. மக்கள் அறிவு பெற்றவர்களாக மாறினால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து என்று கருதினர். ஆனால், இன்று நமது அரசியல் சட்டமே அனைவருக்கும் கல்வி என்பதை அடிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
உலகம் மிக விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதனுடன் போட்டியிட வேண்டுமானால் நாமும் அறிவுலகில் விரைந்து செயல்பட வேண்டும். அறிவுக் கோயிலான நூலகங்களைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்ய வேண்டும். அப்போதுதான் புத்தக உலகம் புத்துயிர் பெறும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT