நடுப்பக்கக் கட்டுரைகள்

இடஒதுக்கீடு சலுகை: விட்டுக் கொடுக்கத் தயாரா?

பூ. சேஷாத்ரி

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு பலரது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ஏற்கெனவே பல நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அப்படி இருக்கையில், எதற்காக அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு எனப் பலராலும் கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகின்றன.
ஜாதிய அடிப்படையில்தான் பின்தங்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற இடஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று என அம்பேத்கர் குறிப்பிட்டு, அதற்கான நெறிமுறைகளை வகுத்தார். அதனால்தான் பொருளாதாரத்தைவிட ஜாதியை சமூக நீதிக்கான அளவுகோலாகக் கொண்டனர் அம்பேத்கர் முதலிய நம் முன்னோர்.
ஜாதி என்பது இருக்கும் வரை இடஒதுக்கீடு என்பது அவசியம் இருக்க வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது நிலவி வருகிறது. இடஒதுக்கீடு என்பது, சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பிரிவைச் சேர்ந்த மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து, அதன் மூலம் காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்த கொண்டுவரப்பட்டதாகும். அப்படி பின்தங்கியிருக்கும் மக்கள் இனம், ஜாதி, மொழி, வசிப்பிடம், பொருளாதாரச் சூழல், உடல் ஊனம் போன்ற வகைகளில் வகைப்படுத்தப்பட்டனர்.
10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை 10 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கருதினார். அதற்குள் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார். ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படாததால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடஒதுக்கீட்டு முறை நீட்டித்துக் கொண்டே வரப்படுகிறது. 
இது குறித்து மூத்த அறிஞரும் எழுத்தாளருமான டாக்டர் ஹரி நரகே கூறியதாவது: இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்); கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு; அரசியலமைப்புச் சட்டத்தின் 334-ஆவது பிரிவின்படி, அரசியல் இடஒதுக்கீட்டுக்கு மட்டும்தான் 10 ஆண்டுகள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை என்றார் அவர்.
அரசியல் நிர்ணய சபை நடவடிக்கை அறிக்கையின் எட்டாவது பகுதியின்படி, அரசியல் இடஒதுக்கீட்டுக்கு 10 ஆண்டுகள் வரம்பு என்பதை அம்பேத்கர் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி என்பதால், 10 ஆண்டுகள் வரம்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.
அரசியல் இடஒதுக்கீடு தொடர்பாக அன்றைய சென்னை மாகாண உறுப்பினரான எஸ்.நாகப்பா, இடஒதுக்கீடு 150 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்று 1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று அம்பேத்கருக்குக் கோரிக்கை விடுத்தார். இல்லையென்றாலும் பட்டியலினத்தவர், பழங்குடியின மக்களின் நிலை உயரும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதற்கு, நீண்ட காலத்துக்கு இடஒதுக்கீடு முறை வேண்டியிருக்கும் என தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். பட்டியலினத்தவருக்கு நீண்ட காலத்துக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கெனவே கூறியதுபோன்று, 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற இந்தச் சபை முடிவு செய்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளில் பட்டியலினத்தவர்கள் போதிய முன்னேற்றம் அடையாத நிலையில், காலவரம்பை மேலும் நீட்டிக்க அரசியலமைப்பில் வழி செய்திருக்கிறேன் என்றார் அம்பேத்கர்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திலும் இதே கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. பட்டியலினத்தவர், பழங்குடியினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டப் பேரவையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் சட்டப் பிரிவு கொண்டுவரப்பட்டது. இதுவே, அரசியல் இடஒதுக்கீடு ஆகும். ஆனால், மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளில் இடஒதுக்கீடுகள் என்பது கிடையாது.
பின்னர், உள்ளாட்சித் தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரோடு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால், அரசியல் களத்தில் இல்லாத பலரும், அரசியல் அதிகாரம் பெற முடிந்தது. இது இடஒதுக்கீட்டின் சிறப்பான அம்சமாகும். ஆனால், இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களை இன்றுவரை அது நிறைவேற்றவில்லை.
அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை இன்றும் உயர் ஜாதியினரே வகிக்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்வரை, இடஒதுக்கீட்டு முறையை நிறுத்தக் கூடாது என்கிறார் புணே ஐ.எல்.எஸ். சட்டக் கல்லூரியின் பேராசிரியர் நிதீஷ் நவ்சகரே.
இது தொடர்பாக அம்பேத்கர் இயக்கத்தின் மூத்த ஆய்வாளரான சுஹாஸ் சோனாவணே கூறுகையில், அரசியல் சாசனத்தில் இருந்தாலும், எந்த தலித் அமைப்போ அல்லது அம்பேத்கரை பின்பற்றுபவர்களோ அரசியல் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. இந்த இடஒதுக்கீட்டால், அந்தச் சமூகத்துக்கு எந்தப் பலனும் இல்லாதபோது, இது தேவையில்லாதது என்கிறார்.
இந்தச் சூழலில் மத்தியில் நரேந்திர மோடி அரசு அமைந்த பிறகு, அதிகரித்து வரும் எரிவாயு மானியத்தைச் சமாளிக்க, வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன் வந்து எரிவாயு மானியத்தை விட்டுத் தருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை இன்று வரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஏற்று சமையல் எரிவாயுக்கான மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுத்துள்ளனர். 
அதே போன்று மத்திய அரசு அல்லது மாநில அரசுகளிடமிருந்து இடஒதுக்கீடு பெறும் விஷயத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இடஒதுக்கீட்டுச் சலுகை எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என்று அறிவிக்கச் சொன்னால், அவர்கள் சார்ந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் இதனால் மேலும் பயனடைய வாய்ப்பாகவும் அமையும். இது ஒரு முன்னுதாரணமான செயலாகவும் அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT