நடுப்பக்கக் கட்டுரைகள்

முத்தலாக் மாயப் புனைவுகள்..!

எம்.எச். ஜவாஹிருல்லா

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, அது நிறைவேற முடியாத நிலையில் மீண்டும் முத்தலாக் குறித்த அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார் குடியரசுத் தலைவர். 
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முத்தலாக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதைச் சட்டப்பூர்வமாக்குவதாகக் கூறிக்கொண்டு மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் மசோதா இது. ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் இருக்கும் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் மசோதாவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது, மாநிலங்களவையால் முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு முத்தலாக் விவாகரத்து முறையைத் தடை செய்ததன் பின்னணியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதாவை எதிர்ப்பானேன் என்று கேட்கலாம். முத்தலாக் விவாகரத்து முறையைச் சட்டவிரோதமாக்குவது மட்டுமே நோக்கமாக இருந்தால் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்காது. ஆனால், முத்தலாக் விவாகரத்து முறையைக் கிரிமினல் குற்றமாக்கி, முத்தலாக் முறையில் விவாகரத்துக் கோரும் ஆண்களுக்கு சிறைத்தண்டனை வழங்க வழிகோலி இருப்பதுதான் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்துகிறது.
விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விவாகரத்துச் செய்யப்படும் இந்து அல்லது கிறிஸ்தவப் பெண்களின் கணவர்களுக்கு சிறைத் தண்டனை கொடுக்காதபோது, முத்தலாக் சொல்லும் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் சிறைத் தண்டனை கொடுப்பது நியாயம்தானா என்று வினவினார். இதற்குப் பதிலளித்த சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அந்த மதங்களில் முத்தலாக் இல்லை என்று பதிலளித்தார். 
இந்து மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும், வேறு மதங்களிலும் முத்தலாக் விவாகரத்து முறை இல்லைதான். ஆனால், மனைவியை அபலைப் பெண்ணாக, வாழாவெட்டியாக்கி விட்டு, தான் மட்டும் சொகுசு வாழ்வு வாழும் ஏனைய மதங்களைச் சேர்ந்த கணவர்களை தண்டிக்க ஏன் தண்டனை இல்லை என்று முக்தார் அப்பாஸ் நக்வியை கேட்கத் தோன்றுகிறது.
முத்தலாக் பற்றி மாயப் புனைவுகள் செய்யப்படும் தருணத்தில் அபலைப் பெண்கள் குறித்து மலையளவு உண்மைகள் மறைக்கப்படுகின்றன. முத்தலாக் முறையில் விவாகரத்து மிக அதிகமாக முஸ்லிம்களிடையே நடைபெற்று வருவது போல் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். ஆனால், உண்மை நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.
முஸ்லிம் பெண்களின் திருமண வாழ்வு நிலையானது. மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) புள்ளிவிவரங்களில் மதரீதியான திருமண நிலை குறித்த ஒரு புள்ளிவிவரத் தொகுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய மதப் பெண்களுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் பெண்களின் திருமண வாழ்வு நிலையானதாக இருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. 
எடுத்துக்காட்டாக, திருமண பந்தத்தை முறிக்காமல் வாழும் பெண்களில் முஸ்லிம் பெண்களின் சதவீதமே (87.8%) அதிகமாக உள்ளது. இந்துக்களில் 86.2%, கிறிஸ்தவர்களில் 83.7%, இதர மத சிறுபான்மையினரில் 85.8% பெண்கள்தான் நிலையான, மணவாழ்க்கை பெறுகிறார்கள் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.
முஸ்லிம் பெண்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்குரியது அல்ல என்ற பாஜகவினரின் கருத்தை இந்தப் புள்ளிவிவரம் தெளிவாக மறுக்கிறது. கைம்பெண்ணாக வாழும் முஸ்லிம்கள் மிகக் குறைவு. முஸ்லிம் பெண்களிடையே கைம்பெண்களாக வாழும் பெண்களின் எண்ணிக்கை, மற்ற மத பெண்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருப்பதை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
இந்துக்களில் 12.9%, கிறிஸ்தவர்களில்14.6%, இதர மத சிறுபான்மையினரில் 13.3% பெண்கள் கைம்பெண்களாக வாழும் நிலையில், முஸ்லிம்களில் 11.1% பெண்கள்தான் மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். முஸ்லிம்களிடையே கைம்பெண் மறுமணம் செய்யும் கலாசாரம் இருப்பதே கைம்பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 
முஸ்லிம்களில் அபலைப் பெண்களும் ஆகக் குறைவு. கணவனிடமிருந்து பிரிந்து கைவிடப்பட்ட அபலைப் பெண்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பட்டியல் அளிக்கிறது. இந்த நிலையில் வாழும் பல்வேறு பெண்களில் முஸ்லிம் பெண்களின் சதவீதம்தான் மிகக் குறைவாக உள்ளது. 
இந்துக்களில் 0.69% (19,08,000), கிறிஸ்தவர்களில் 1.19% (90,000), இதர மத சிறுபான்மையினரில் 0.68% (80,000) பெண்கள் அபலைகளாக இருக்கிறார்கள் என்றால், முஸ்லிம் பெண்களின் சதவீதம் வெறும் 0.67% (2,08,000) மட்டுமே என்கிறது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு.
இந்தியாவில் விவாகரத்தான பெண்களைவிட, அபலைப் பெண்கள் அதிகம். அதாவது, விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களைவிடக் கணவனால் கைவிடப்பட்ட அபலைப் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் வாழும் அபலைப் பெண்களின் எண்ணிக்கை 23 லட்சம் ஆகும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9.1 லட்சம். விவாகரத்துச் செய்யப்பட்ட 9.1 லட்சம் பெண்களில், முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 2.1லட்சம் எனவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது. 
கணவரால் கைவிடப்பட்டு நிர்க்கதியாக வாழும் ஒவ்வொரு பெண்மணியின் வாழ்வும் பரிதாபத்துக்குரியது. இத்தகைய பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் மிகுந்த சவால்களைச் சந்திக்கின்றனர்.தங்கள் மகன் இந்தப் பெண்ணைக் கைவிட்டதால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய கணவன் வீட்டில் உள்ளவர்கள் முன்வருவதில்லை. தாய் வீட்டில் உள்ளவர்களோ மகளுக்குத் திருமணம் முடிந்து விட்டால், அவர் வேறு ஒருவருடைய உடைமை என்று கருதுவதால், அவர்களாலும் அபலைப் பெண் புறக்கணிக்கப்படுகிறார். 
இந்தப் பெண்கள் மணவிலக்கு பெறாத காரணத்தினால், பிற மதங்களில் இவர்களால் மறுமணமும் செய்ய முடிவதில்லை. இந்தப் பெண்கள் மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தன் கணவன் மீண்டும் தன்னை அழைக்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காலம் தள்ளுகிறார்கள். 
இத்தகைய அவல நிலையை விவாகரத்துச் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் அனுபவிப்பதில்லை. ஏனெனில், இந்தப் பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கு முழு உரிமையுடன் செல்லலாம். மேலும் தம் பெற்றோர் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு.
மதத்தின் பெயரால் நமது அன்னையருக்கும் சகோதரிகளுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். 2019-ஆம் ஆண்டின் முதல் நாளில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, முத்தலாக் சட்டம் பாலின நீதி மற்றும் சமூக நீதி தொடர்பானது என்று தெரிவித்துள்ளார்.
19 லட்சம் அபலைப் பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருக்கும் நிலையில், முஸ்லிம் பெண்கள் பற்றிக் கவலைப்படும் பிரதமர், எண்ணற்ற அபலைப் பெண்களுக்குப் பாலியல் நீதியையும் சமூக நீதியை அனுபவிப்பதற்கு உரிய சட்டத்தையும் இயற்றுவதுதான் நியாயமான அணுகுமுறையாக இருக்கும். 
முத்தலாக் முறை நடைமுறையில் இருந்தாலும், மிக அரிதான சில நிகழ்வுகளில்தான் முஸ்லிம் சமுதாயத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதைக் கிரிமினல் குற்றமாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
முத்தலாக் முறை விவாகரத்தால் பாதிக்கப்பட்ட மனைவி மட்டுமல்லாமல், அவரது உறவினர்களும் புகார் அளிக்கலாம் என்று கூறியிருப்பது, அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிகோலும். 
அப்பாவி முஸ்லிம் ஆண்கள் சாதாரணமான முறையில் விவாகரத்துக்குக் கோரினாலும், அதையே முத்தலாக் முறை விவாகரத்தாக மாற்றிப் புகார் வழங்க வழிகோலப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கணவர் சிறையில் அடைக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மனைவிக்கும் குடும்பத்துக்கும் யார் பாதுகாப்பு வழங்குவது? அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவது எப்படி? ஏனைய மதங்களில் இல்லாத கிரிமினல் குற்றப் பிரிவு முஸ்லிம் விவாகரத்துக்கு மட்டும் சேர்க்கப்படுவானேன்? ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளைப் பறிக்க முற்படுவது ஜனநாயக விரோதம் என்பதை இவர்களுக்கு யார் எடுத்துரைப்பது?

கட்டுரையாளர்:
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT