நெகிழிக்கு விடை, மாசுக்கு தடை!

இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர்


இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றதாகும். இயற்கை வளங்கள், தமிழர் கட்டடக் கலையைப் போற்றும் கோயில்கள், மலைவாசஸ்தலங்கள், பல சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் என உலகப் பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட தமிழகத்தில், ஒரு முறை உபயோகித்த பின் தூக்கி எறியக் கூடிய நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருள்களால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து கருத்தில் கொள்ளப்பட்டது.
விளைவு, இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது; இது ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுக்குத் தடை செய்யும் முயற்சியில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 
நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக 12 பாரம்பரியப் பொருள்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. பல கட்ட போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட, நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்தியதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுகளைத் தவிர்க்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழுவின் ஆலோசனையின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 
இவற்றுள் சில பொருள்களின் பயன்பாட்டுக்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழிப் பொருள்களுக்கான தடையை அமலுக்குக் கொண்டு வரும் நேரத்தில், தமிழகம் முழுவதும் மண்டல ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்ததோடு மட்டுமல்லாமல், தடையை முழுமையாகக் கண்காணிக்க தலைமைச் செயலர் தலைமையில் 9 கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள், தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோரைக் கொண்ட வழிகாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக இணையதளம், செல்லிடப்பேசி செயலி, விழிப்புணர்வு, குறும்படங்கள் வெளியிடப்பட்டன; பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இலச்சினையும் வெளியிடப்பட்டது. 
நெகிழி உற்பத்தியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட சங்கத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்கள் தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடத்தப்பட்டு, அதில் நெகிழி தடை தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், இது பற்றி அனைத்து மாவட்டங்களிலும் உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்களும், விழிப்புணர்வு மண்டல மாநாடுகளும் பேரணிகளும் நடத்தப்பட்ட நிலையில், அதிமுக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி நெகிழி தடை அமலுக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காய்கறிச் சந்தைகள், சாலையோரக் கடைகள், பூக்கடைகள் மற்றும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைத் தவிர்த்து, அதற்கான மாற்றுப் பொருள்களையும் வியாபாரிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் மக்காத நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நெகிழி தாள்கள், தட்டுகள், தேநீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், குவளைகள், தண்ணீர் உறிஞ்சி குழல்கள், நெகிழி கொடிகள், நெகிழி உறைகளைப் பயன்படுத்த முடியாது. பால், தயிர், எண்ணெய், மருத்துவ உறைகளுக்கு மட்டும் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. நெகிழி மற்றும் பாலிதின் பைகளின் பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசு, கடல் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு, மண்வள பாதிப்பு, விலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர்கதையாகி வருகிறது.
நெகிழி மற்றும் பாலிதின் பைகள் மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். மழைநீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழையின்மைக்கும் காரணமாகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து, மக்களுக்குப் பல்வேறு நோய்கள் வரக் காரணமாவதுடன், கால்நடைகள் உள்பட இந்தப் பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. 
முந்தைய காலங்களில் எல்லாம் பொருள்கள் வாங்க கூடை, பெட்டி, துணிப் பைகள் முதலானவற்றை நம் முன்னோர் எடுத்துச் சென்றனர். கடைக்காரர்களும் நுகர்வோருக்கு வேண்டிய பொருள்களை செய்தித் தாள்களில் மடித்து, சணல் கயிற்றால் கட்டிக் கொடுத்தனர்.
ஆனால், இன்று சூப்பர் மார்க்கெட், மால் என்று பெருகிவிட்ட நிலையில், ஏற்கெனவே பாலிதின் மற்றும் நெகிழிப் பைகளில் நிரப்பி வைக்கப்பட்ட பொருள்களை சுய சேவைகளின் மூலமே எடுத்து, கணினி மூலமாக விலைப் பட்டியல் பெற்று பின்னர் பணம் கொடுத்து வாங்கி வரவேண்டிய சூழ்நிலைதான் உள்ளது. 
உணவகங்களில்கூட உணவுப் பொருள்களை பாலிதின் உறையில்தான் அளிக்கின்றனர். சூடான உணவுப் பொருள்களை நெகிழி, பாலிதின் பைகளில் கொண்டு செல்வதால், சூடு, எண்ணெய் தன்மை காரணமாக நெகிழியில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள், உணவுப் பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயக் கோளாறு தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் முதலானவை ஏற்படவும் காரணமாகிறது. 
மேலும் நெகிழிப் பொருள்களை எரிக்கும்போது வெளியாகும் நச்சு வாயுவால் காற்று மாசடைகிறது. உணவுப் பொருள்களுடன் தூக்கி எறியப்படும் நெகிழி கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உண்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மரவள்ளி, மக்காச்சோளம், சோயா ஆகிய பொருள்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பைகளையே மக்கும் பிளாஸ்டிக் என்றும், இவை தண்ணீரில் கரையும், மண்ணில் போட்டால் மக்கிப் போகும் என்றும் சொல்கின்றனர். ஆனால், அதிலும் சில குறைபாடுகள் உள்ளன.
எனவே, எதையும் முழுமையாக ஆய்வு செய்யாமல், மக்கும் நெகிழி என்று அறிமுகம் செய்வதும், அதை அதிகளவில் பயன்படுத்துவதும்கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். நெகிழிப் பொருள்கள் மக்காத தன்மை கொண்டவை என்பதாலும், அவற்றை அழிக்க முடியாது என்ற காரணத்தாலும், நெகிழிப் பொருள்களை அறவே தவிர்ப்பது அவசியமாகிறது.
நெகிழி சூழ்ந்த உலகம் என்று வர்ணிக்கும் அளவு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நெகிழிப் பொருள்களில், பெரும்பாலும் மண்ணில் மக்கக் கூடியவை எத்தனை என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். காலையில் எழுந்து பல் துலக்குவதில் தொடங்கி, இரவு தூங்கச் செல்லும் வரை நெகிழி என்பது ஒரு தவிர்க்க முடியாத பொருளாக இன்று உருவெடுத்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக் கூடிய கலாசாரம்தான் இன்றைய உலகையே இயக்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு நெகிழிப் பொருள் முழுவதுமாக அழிவதற்கு 200 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது என்றும், இதற்குச் சரியான மாற்று வழிதான் பயோபிளாஸ்டிக் என்றும் அறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக வந்த ஒன்றுதான் பயோபிளாஸ்டிக். வெதுவெதுப்பான தண்ணீரில் உடனடியாகவும், நிலத்திலோ, கடலிலோ கரையக்கூடிய சிறப்பையும் பயோபிளாஸ்டிக் பெற்றுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கரைந்துவிடும் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.
மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், சோயா ஆகியவற்றைப் பயன்படுத்தி பயோபிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. நெகிழிப் பைகளுக்கு மாற்றாக இதில் பைகள் செய்தும் பயன்படுத்தலாம். இந்தப் பைகள் சில நாள்களிலேயே மண்ணிலோ, நீரிலோ கரைந்து விடுவதால், இதற்கு 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என நிபுணர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
காய்கறிகள், இயற்கைக் கழிவுகளைக் கொண்டு பயோபிளாஸ்டிக் தயாரிக்கப்படுவதால், இதனை குழந்தைகளோ அல்லது விலங்குகளோ சாப்பிட்டு விட்டாலும், உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
பாலிதின் பைகளால் வரும் நரம்புத் தளர்ச்சி, நோய் எதிர்ப்புக் குறைதல், மூச்சுக்குழாய் பாதிப்பு, சிறுநீரகச் செயல் குறைபாடு, புற்றுநோய் போன்ற அபாயங்களிலிருந்து நம்மைக் காக்கிறது.
நாளைய சந்ததியினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பதுடன், அவற்றை அடுத்த தலை
முறைக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். 

கட்டுரையாளர்:
முன்னாள் கல்வி அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com