"போக்சோ': விழிப்புணர்வு அவசியம்!

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு இறுதியில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தில் ("போக்சோ') மத்திய அரசு மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளியென நிரூபிக்கப்படுபவருக்கும், இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவருக்கும், அதனை மறைப்பவர்களுக்கும் 6 மாதம் முதல் மரணத் தண்டனை வரையில் விதிக்க இடமுண்டு.
பாதிப்பிற்குள்ளாபவர்கள் குழந்தைகள் என்பதால், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா எனச் சந்தேகம் எழலாம். எனினும், பாதிக்கப்படுபவர்கள் குழந்தையாக இருக்கும் நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். 
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கான செயல் திட்டம் குறித்த கருத்தரங்கில் பேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவை. அதில், 2011-ஆம் ஆண்டு கணக்குப்படி நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 4-ஆவது மாநிலமாக தமிழகத்தில் அதிக திருமணங்கள் நடந்துள்ளன. அதில், சென்னை முதலிடத்தில் உள்ளது. 5,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சட்ட விரோதமாக திருமணம் நடந்துள்ளது. கோவையில் 3,025 பேருக்கும், மதுரையில் 2,840 பேருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
"போக்சோ' சட்டத்தின்படி பார்த்தால் குழந்தையைத் திருமணம் செய்தவர், அவர்களுக்குத் திருமணம் நடத்திவைத்தவர்கள் என அனைவருமே குற்றவாளிகள்தான். அந்தந்த மாவட்டத்தின் குழந்தைகள் நல அலுவலர் இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்க வேண்டும். அப்படி புகார் அளிக்கப்பட்டால் திருமணம் செய்தவர்கள், அவர்களது பெற்றோர், திருமணத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிறையில் இருக்க வேண்டும்.
சில சமயங்களில், புகார் அளித்த பெண்ணுக்கே இந்தச் சட்டம் சோகத்தையும் அளித்துள்ளதையும்  குறிப்பிட வேண்டும். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தம்மை ஒருவர் தனது முதலாவது திருமணத்தை மறைத்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் மூலம் தனக்கு 2 குழந்தைகளும், முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் உள்ளதாக ஒரு பெண் புகார் கூறினார்.
அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்தபோது ,சிறுமிக்கு வயது 17. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரே, அது குறித்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுவும் அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய குடும்பத் தகராறில் அளிக்கப்பட்ட புகார். அதில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கில் ஆண் குற்றவாளியென கருதப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற வளாகத்திலேயே அந்தப் பெண் தனது கணவருடன் அமர்ந்து கதறியழுதார். இப்போது, அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த 4 குழந்தைகள், 2 பெண்களுக்கு இந்தச் சமுதாயம் என்ன பதில் அளிக்க உள்ளது? அவர்களுக்கான ஆதரவை இப்போது யாரால் அளித்துவிட முடியும்? தந்தை சிறைத்தண்டனை அனுபவிக்கும்போது, 4 குழந்தைகளின் மனநிலை சிதைவுக்குள்ளாவதைத் தடுக்க முடியுமா? ஒரு 17 வயது பெண்ணின் பாதிப்புக்கு, தற்போது 4 சிறார்களின் எதிர்காலமும்  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதை எந்தக் கோணத்தில் பார்ப்பது?
கடந்த டிசம்பர் மாதம் கடைசியில் ஒரே நாளில் இரண்டு "போக்சோ' சட்ட வழக்குகள் 2 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 19 வயதுக்காரர் 16 வயதுக்காரரை திருமணம் செய்ததில் 25-ஆம் தேதியன்று மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. மற்றொரு காவல் நிலையத்தில் 13 வயதுக்காரரை 15 வயதுக்காரர் காதலிப்பதாக தொந்தரவு செய்ததாக அவர் மீது போக்சோ சட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுபவர்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றப்பட்டோ துன்புறுத்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சில நிகழ்வுகளில் உரிய வயதை எட்டாத குழந்தைகள், தாங்களே விருப்பப்பட்டுச் செல்வதும், மணமுடித்துக் கொள்வதும் எந்த வகையில் குற்றமெனக் கருதப்படுகிறது? ஏனெனில், இது ஒரு குற்றம் என்பதேகூட அவர்களுக்குத் தெரிவதில்லை. தங்களது வீட்டை விட்டு உதவிக்காக வெளி சமூகத்தை நாடும்போது, அது குற்றமாக்கப்பட்டு தங்களுக்கு உற்றவர்களாக இருப்பவர்கள் குற்றவாளியாக்கப்படும்போது சட்டம் கூறுவதை சிறுவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
திருமண வயதாக ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்றும் நிர்ணயம் செய்த சட்டம், அவர்களுக்கு தோன்றும் இயற்கை பால் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. அதனால், பாலியல் உறவுக்கு தயாராகும் வயது வந்தவுடன், அவர்கள் இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். 
எத்தனை வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது அதனை எப்படித் தவறாகக் கருத முடியும்?
நமது சமூக கட்டமைப்பில் திருமணம் நடந்த பின்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆணுக்கு சிறைத் தண்டனை என்றால் அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் நாம் அளிக்க முடியும்? உண்மையில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால் தண்டனையை வரவேற்பார். தானே விரும்பி திருமண உறவினை ஏற்றிருந்தால், இந்தத் தண்டனை அவருக்கு எத்தகைய கொடூரமானது?
எனவே, கடுமையான சட்டங்களை எழுத்தால் மட்டுமே எழுதாமல் சமூக கண்ணோட்டத்திலும் பார்த்து நிறைவேற்ற வேண்டும். சில சம்பவங்களின் அடிப்படையில் கடும் சட்டங்களை இயற்றி சமூக கட்டமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்துவதைவிட அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com